“ஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும், துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டாது. அவர் அஞ்சாதவர் தற்பெருமை கொள்ளாதவர், நிதானமானவர், ஆனால் கண்ணியமானவர்...” -ஏங்கெல்ஸ்
கம்யூனிச ஆசான் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னி மார்க்ஸ் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த சிறிய நூல்...மூன்று பகுதிகளை கொண்ட இந்த நூலின் முதல் பகுதி சாமிநாத சர்மா அவர்கள் எழுதிய மார்க்ஸ் இணையர்களின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றுள்ளது...
வசதியான வம்சாவளியில் பிறந்த ஜென்னியும், நடுத்தர குடும்பத்தில் பிறந்த கார்ல் மார்க்சும் ட்ரியர் என்னும் இடத்தில் அண்டை வீட்டாராக வசித்து வரும் போது காதல் மலருகிறது...மார்க்சை விட ஜென்னி 4 வருடங்கள் மூத்தவர்... படிப்பிற்காக மார்க்ஸ் இடம் பெயர்ந்த நேரத்தில் ஜென்னி கிட்டத்தட்ட மார்க்ஸின் வருகைக்காக 7 வருடங்கள் காத்திருந்து திருமணம் புரிகிறார்கள்...
திருமணத்திற்குப் பிறகான வாழ்வில் மார்க்ஸ் பல்வேறு பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுகிறார்... ஒரு பத்திரிகை அதிபாரன யோஸிப் வெய்டெமையருக்கு எழுதிய கடிதம் இரண்டாவது பகுதியில் இடம் பெற்றுள்ளது...மார்க்ஸ் பல்வேறு போராட்டங்களிலும் முக்கியப் பங்கு கொள்கிறார் இதன் காரணமாக அவரது குடும்பம் பல்வேறு மாகாணங்களுக்கும், பிரதேசங்களுக்கும் நாடுகடத்தப்படுகிறது...
இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் களத்தில் இருக்கும் மார்க்சிர்க்கு பக்கபலமாக நின்று ஜென்னி மார்க்ஸ் குடும்பத்தை பேனுகிறார்...மொத்தம் 7 குழந்தைகள் கொண்ட தம்பதியருக்கு... மூன்றாவது மகனான சார்லஸ் லூயிஸ் பிறக்கும் போது குடும்பத்தின் வறுமை காரணமாக மெலிந்திருந்த ஜென்னி குழந்தைக்கு பால் புகட்டும் போது மார்பில் ரத்தம் வடிந்த துயர்மிகு தருணங்களை எல்லாம் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்...
மார்க்சின் எழுத்துப் பணியில் பெரும் துணையாக இருக்கும் ஜென்னியும், பின்னாளில் இவர்களின் இரண்டாவது மகள் ஜென்னி லாரா மார்க்சின் எழுத்துக்களை பிரஞ்ச்சு மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய உதவியிருக்கிறார்... ஒருகட்டத்தில் மார்க்ஸ் அவர்களுக்கு ஏங்கெல்ஸின் நட்பு கிடைக்கிறது... இருவரும் சேர்ந்து கம்யூனிச படைப்புகளையும், மக்கள் இயக்கத்தையும் கட்டியெழுப்புகிறார்கள்...
வாழ்வின் பெரும் போராட்டங்களிலும், துயர்மிகு காலங்களிலும் மார்க்ஸ் ஜென்னி இணையர் சமூகத்தை பற்றியும், பொதுவுடைமை பற்றியும், மக்களின் உரிமை சார்ந்த விசயங்களை பற்றியும் இடையறாது சிந்தித்து செயல்பட்டு வாழ்ந்து முன்னுதாரணமாக இருந்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது இந்த நூலின் வழி அறிந்து கொள்ள முடிகிறது!