நீண்ட நாட்களுக்கு பிறகு படித்து முழுவதுமாக வாசித்து முடித்த புத்தகம். 2022லயே வாங்கி இருந்தாலும் அவ்வப்போது இரண்டு மூன்று சிறுகதைகள் படித்திருந்தாலும் முழுவதும் முடிக்கவில்லை. மகள் பள்ளிக்கு அருகில் தொடங்கியிருந்த புதிய புத்தகக் கடைக்கு சென்று வந்த போது ஒரு புத்தகம் வாங்கியே ஆக வேண்டும் என்று நான் இந்த புத்தகத்தை தேர்வு செய்தேன். நெட்ஃபில்க்ஸில் வெளியான பாவக்கதைகள் படத்தில் தங்கம் குறும்படம் ரொம்ப பிடித்திருந்தது. ஆகவே அதன் சிறுகதை வடிவத்தை படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது ஆகவே இந்த புத்தகத்தை வாங்கினேன். என் வயதொத்த ஒரு எழுத்தாளின் எழுத்தில் என் சக காலகட்டத்தில் பயணித்த ஒருவரின் எழுத்தில் படித்த சிறுகதை தொகுப்பு கதை. கொஞ்சம் சுஜாதா வாடை அடித்தாலும் இந்த எழுத்தாளரின் உலகமும் எழுத்து நடையும் சற்று மனதிற்கு நெருக்கமாக தான் இருக்கிறது
10 நிமிட வாசிப்பில் பல முட்கள் குத்திக்குத்தி எடுத்தன. எத்தனை சத்தாரை கடந்து வந்திருக்கிறேன் என்ற கணக்கை ஓட்டிப் பார்க்கிறேன். சரவணனாய் இருந்தேனா? இப்ராகிம் போல எரிந்தேனா? வினாவாகவும் விடையாகவும் சத்தாரே இப்போதென் உளத்தில்.
சத்தாரின் கதாபாத்திரம் உங்களுக்குப் பிடித்து இருந்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாசியுங்கள். சத்தார் போன்று இன்னும் பல கதாபாத்திரங்களை அழகுற வடிவமைத்து இருக்கிறார் ஷான். இளவரசன், பழனியம்மாள் என்ற இரண்டு கதாபாத்திரங்களும் என் மனதில் நின்றவை. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்த கதையைச் சுற்றி மனம் வட்டமிட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் உள்ளது. தற்கொலை முடிவில் உள்ளவர்களுக்கு இறுதியில் அவர்களுடன் பேச ஒருவர் இருந்து இருந்தால் அவர்கள் தப்பி இருப்பார்கள் என்று கூறுவார்கள். சாத்தானின் மடி அதற்கு ஒரு பெரிய உதாரணம். பல தரப்பட்ட உணர்வுகளின் கிளர்ச்சி, தங்கம் மற்றும் பிற கதைகள்.