“தொடர்ந்து அவ்வப்போது முகநூலில் கவிதைகள் பதிவிட்டு வருகின்றேன். அதில் ஒரு கவிதை ‘அந்தரப் பூ’. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, ‘பூ மலரக் காத்திருக்கும் செடியடி இரவில் / நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் / நழுவிப் போகும் / தானாக நிகழும் இது போன்ற விஷயங்கள்’ என்று எழுதியிருந்தேன். இந்த ‘அந்தரப் பூ’ என்ற சமீபத்திய கவிதையில். ‘மரத்தில், கிளையில், மஞ்சரியில் பார்த்தாயிற்று / கீழ்த்தூரில், மண்ணில் கிடப்பதையும் ஆயிற்று / வாய்க்க வேண்டும் காம்பு கழன்ற பின், தரை இறங்கு முன் / காற்றில் நழுவி வருமோர் அந்தரப் பூ காணல்’ என்று எழுதுகிறேன். ஒரு வேளை நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் நழுவிப் போன கணம் தான் இந்த அந்தரப் பூ காணலின் முகமுமோ?!” - கல்யாண்ஜி
கல்யாண்ஜி (வண்ணதாசன், சி.கல்யாணசுந்தரம்) (பிறப்பு: ஆகஸ்ட் 22, 1946) தமிழின் நவீன கவிஞர், எழுத்தாளர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும், வண்ணதாசன் ( Vannadasan) என்ற பெயரில் புனைவுகளையும் எழுதியவர். கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
“ அந்தரப்பூ”என்றால் மர்ம மலர். அவர்களின் பரிந்துரையால் நான் இதை வாசித்தேன். கல்யாண்ஜியின் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பை நான் எப்போதும் தவற விடுவதாய் இல்லை.
இந்த நூலில் வெறும் 94 கவிதைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் அதில் தங்கியிருக்கும் உணர்வுகள் நம் உள்ளங்களைப் பிடித்து ஒவ்வொரு பரிதாபத்தையும், சந்தோஷத்தையும், சலனத்தையும், நிம்மதியையும் தனித்தன்மையாக வெளிப்படுத்துகின்றன. எத்தனை சுருக்கமான வரிகளில், மனித மனதில் உள்ள நுண்ணிய, வெளிப்படுத்தமுடியாத உணர்வுகளை படிப்பவனுக்கு வெளிக்கொண்டு வருகிறார் இவர்! அது ஒரு கலை!
வாசிக்கும் ஒவ்வொரு கவிதையிலும், நம்முள் மறைத்து வைத்திருக்கும் கதைகள் வெளிப்படுவதை உணர முடிகிறது. இது நம்மை நம்முடன் பேசவைக்கின்றது.
கல்யாண்ஜியின் கவிதைகள் எப்படி இவ்வளவு நெருக்கமாக, நம்மை நம்முடன் கைகோர்த்திக்கொண்டு நிற்கின்றன என்பது என்னால் விவரிக்க முடியாதது. ஒவ்வொரு கவிதையிலும் நாம் தாங்கியிருக்கும் துக்கங்கள், நமது அடக்கப்பட்ட ஆசைகள், மரியாதைக்குரிய நினைவுகள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றுகூடி நம்மைப் பார்க்க வைக்கின்றன.
இந்த நூல் எந்த ஒரு தனி வயதுக்கோ, மன நிலைக்கோ அல்ல. இது ஒரு கணம் நாம் எல்லோரும் உணர்ந்திருக்கும் நமது மனித இயல்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று.
அந்தரப்பூ - கல்யாண்ஜி - கவிதை தொகுப்பு - பதிப்பகம் - சந்தியா பதிப்பகம் - பக்கங்கள் -104- முதல் பதிப்பு -2018 எழுத்தாளர் பற்றி : திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர் கல்யாண்ஜி அவர்களின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். “வண்ணதாசன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் இவருக்கு 2016 ஆம் சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டது. இந்த கவிதை மட்டும் இல்லாமல் மணல் உள்ள ஆறு, அந்நியமற்ற நதி ,ஆதி, முன்பின்,புலரி மட்டும் மேலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இன்றைய நவீன தமிழ் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளர் மற்றும் புதுக்கவிதைக் எழுதுவதில் கல்யாண்ஜி முன்னோடி ஆவார். புத்தகம் பற்றி : மொத்தம் 94 தலைப்புகள் கொண்ட இந்த கவிதை தொகுப்பு ஒரு வித்யாசமான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும் . புத்தகத்தில் உள்ள எல்லா கவிதைகள் பிடித்து இருந்தாலும் சில கவிதைகள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது அவற்றில் சில : “ பலர் பனிக்கட்டியை வரைகிறார்கள். குளிரை வரைந்து விடுகிறார்கள் ஒரு சிலர் “. என்ற 22 வது கவிதை பனிக்கட்டியை வரைய ஒரு ஓவியன் போதும் ஆனால் இயற்கையை நேசிக்கும் சிலரால் மட்டும் தான் குளிர்காலத்தை வரைய முடியும் உன்மையில் இயற்கையை நேசிப்பவனும் ஒரு ஓவியன் தான். அடுத்த கவிதை 7 வது கவிதை யான "பழகிய காலணிகளை இருட்டுக்குள் கால் நுழைத்து அணிந்துகொள்வது போல இருந்தது கழற்றி போடப்பட்டு இருக்கும் இருட்டில் இன்றைய இரவின் ஊடாக நாளைக்கு செல்வது ." இந்த கவிதையை பொறுத்த வரை நாளை என்பது இன்றய தொடர்ச்சி தான் என்று சொல்வது போலவே அமைந்து இருக்கிறது. அது போலவே கவிதை 26இல் "நேற்று பார்த்த பூச்சி இது என்றால் இன்று அது ஊர்ந்து கொண்டு இருப்பது தரையில் அல்ல அதன் இறந்த காலத்தின் மேல் : என்ற உள்ள கவிதை ஒரு ஜென் மனநிலையை குறிக்கும் ஒரு கவிதையாக இருக்குறது ஒரு ஒரு உயிரின் வாழ்வும் காலத்தை அடிப்படையில் கொண்டு அமைக்க பட்டு இருக்கும் ஒரு அமைப்பு தான் என்பதை போல் இருக்கிறது இந்த கவிதை அது போல 81வது கவிதை ஒரு பூ எல்லா திசைகளிலும் தன் இதழ்களை மலர்த்துஇருக்கிறது. என்ற கவிதை சிறந்த ஒரு கற்பனை வரிகள் என்று சொல்லலாம். கடைசி கவிதை இவ்வளவு அமைதியாக இருக்கிறது என்ற கவிதை அமைதி குணாம்சம் என்ன அது நல்லதா கெட்டதா போன்ற வற்றை சிந்திக்க தோன்றுகிறது . இது போலவே சிறந்த வரிகள் இந்த புத்தகத்தில் இருக்கிறது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.