எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணியாகும் என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் பணி அனுபவங்களில் இருந்து அறிய முடிகிறது. தான் ஆட்சியராகப் பணிபுரிந்த மாவட்டங்களில் ஆற்றிய பணிகள் குறித்தும், தான் பொறுப்பேற்ற துறைகளில் எடுத்த முன்னெடுப்புப் பணிகள் பற்றியும் அதன்மூலமாக தனக்கேற்பட்ட அனுபவப் பாடங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். சிறந்த ஆளுமையாக அறியப்பட்ட உதயச்சந்திரனை சிறந்த எழுத்தாளராகவும் அறியச் செய்யும் இந்த 40 கட்டுரைகள் வெறும் அனுபவத்தை மட்டும் சொல்பவை அல்ல. கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு, அறிவியல் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகளாகும். ஏழை எளிய விவசாயிகளை வரிச் சுமையிலிருந்து மீட்ட தாமஸ் மன்ரோவின் கருணை, மதுரை மாநகரை மாற்றியமைத்த கலெக்டர் பிளாக்பர்ன், மகாத்மா காந்தியின் தமிழ் மொழிப்பற்று... என பல வரலாற்று நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளோடு முடிச்சுப்போட்டு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அரசு ஊழியர்களைப் பற்றி பொதுமக்களிடம் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் எப்படி கடமையுணர்வோடு நேர்மையாகப் பணியாற்றுகிறார்கள், அவர்களின் அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை இந்த நூல்வழி அறிய முடிகிறது. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுகிறவர்களுக்கு உந்து சக்தியாகவும், ஐ.ஏ.எஸ் பணியில் புதிதாக ஈடுபட்டிருப்போருக்கு வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்கும் என்பதில் வியப்பில்லை. மாபெரும் பதவிதனில் அமர்வது மக்களுக்காகவே என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
நிர்வாகத்தில் தான் பெற்ற அனுபவத்தை பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல் தான் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் போன்றவற்றையும் பரிந்துரைப்பது கூடுதல் சிறப்பு.
இந்தியாவின் இளம் IAS அதிகாரிகளில் ஒருவரான உதயச்சந்திரன் IAS, அவர்களின் அனுபவங்களும் அதன் சார்ந்த வரலாறுகளும், வரலாற்றின் மூலம் கண்ட தீர்வுகளையும், நேர்மையான எளிய மனிதர்களின் மாற்றத்திற்கான முன்னெடுப்புகளையும் அழகிய நடையில் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த புத்தக வாசிப்பில் மக்கள் சேவையின் மகத்துவமும், அனுபவங்களை அனுபவிக்காமல் பெற்ற அனுபவ உணர்வும், IAS ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் எழுவது இயல்பே!!
மக்கள் சேவையில் ஈடுபட போகும் நமக்கு இந்த புத்தகம் அதற்கான மனத்திண்மையை வளர்க்கும் வண்ணம் அமையும் என நம்புகிறேன்.
உதயச்சந்திரன் IAS அவர்கள் வாசித்த புத்தகங்களின் புத்தகச் சுருக்கங்கள் புத்தக வாசிப்பை தூண்டுவதாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தில் கூடுதல் சிறப்பு.!