பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
இந்த வருடத்தின் முதல் வாசிப்பு, மறைந்த பேராசிரியர் மற்றும் பண்பாட்டியல் ஆராய்ச்சியாளரான தொ. பரமசிவன் ஐயா எழுதிய 'மஞ்சள் மகிமை'. தமிழ்நாட்டில் நாம் கொண்டிருக்கும் பல பண்பாடுகள், சடங்குகள் இதனால் தான் இருக்கிறது என்று தெரியாத காரணம் தான் என்னைத் தொடர்ந்து தொ.ப ஐயாவின் படைப்புக்களை வாசிக்கத் தூண்டுகிறது.
இந்த கட்டுரை தொகுப்பில் நமது பழக்க வழக்கங்களில், சடங்குகளில் மற்றும் விழாக்களில் மறைந்து இருக்கும் பண்பாட்டை அறிவிக்கும் பொருட்டு தொ.ப. ஐயாவின் பதினாறு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சங்க கால இலக்கியங்களை ஆராய்ந்தும், தொல்பொருள் ஆராய்ச்சிகளை அடிப்படைகளாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கட்டுரைகள் ஆகும்.
எடுத்துக்காட்டாகச் சுமைதாங்கி கல் என்று பல கிராமத்துப் பேருந்து நிலையங்களில் பார்த்தது உண்டு. எதற்கு அது அங்கு இருக்கிறது என்பது எனக்கு இந்த புத்தகத்தில் வாசிக்கும் வரையிலும் முடிக்கும் தெரிந்தது இல்லை. மகப்பேறு காலத்தில் கருவுற்றிருக்கும் பெண் இறந்து விட்டால் அவளின் ஆறுதலுக்காக, அவளின் சுமையைப் பகிர்ந்துகொண்டு இறந்த அந்த பெண்ணிற்குக் கொடுக்கும் மரியாதையாக இரண்டு நெட்டுக்குத்தாக இருக்கும் கற்களை நட்டு (இந்த கற்கள் கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவ களங்களில் உதவும் இரண்டு பெண்களைக் குறிக்கும்), அவற்றின் மேல் ஒரு கற்பலகை (இந்த கற்பலகை கர்ப்பிணிப் பெண்ணை குறிக்கும்) படுக்க வைத்து சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும். இது மாதிரி நம் பண்பாட்டிற்குள் தாலி கலாச்சாரம் எப்படித் திணிக்கப்பட்டது, மஞ்சளை ஏன் நாம் இன்று வரையிலும் கொண்டாடுகிறோம், கோலத்தின் உண்மையான பொருள் என்று நாம் அன்றாடம் காணும் பல காரியங்களில் பொதிந்திருக்கும் பண்பாடுகளைப் பற்றி இந்த கட்டுரைகள் வழியாக அறிய முடியும்.
மதுரை தமிழ்நாட்டின் பெருமை என்பது 'மீனாட்சி பட்டினம்' கட்டுரையை வாசித்தால் தெரியவரும். இந்த கட்டுரையில் 'மதுரையைக் காப்பாற்றுவது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகும்' என்று பரிந்துரை செய்கிறார் தொ. ப. ஐயா. தமிழ்நாட்டில் சாதியின் தாக்கம் ஒருவரது பெயர் தொடங்கி அவர் சாப்பிடும் உணவு வரை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதனை 'பெயரிடுதல் என் சுதந்திரம்' போன்ற கட்டுரைகளை வாசித்தால் தெரிய வரும்.
எனக்கு இந்த கட்டுரைகளில் கொஞ்சம் முரணாகத் தோன்றிய ஒன்று: மருத்துவர்கள் இல்லாமலேயே காலம் காலமாக எத்தனை மகப்பேறுகள் நடந்திருக்கிறது என்றும் மகப்பேறு மருத்துவமனைகள் உலகமயமாக்குதலின் மூலதானம் என்று தொ.ப. ஐயா கூறியிருக்கிறது. அன்று நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவுப் பழக்கங்கள், அவர்களின் மருத்துவம் குறித்த அறிவு மகத்தானது. அதனால் அன்று வீட்டிலேயே பிரசவங்கள் சாத்தியமானது. ஆனால் நாம் செய்த பெரிய தவறு அந்த அறிவினை ஆவணப்படுத்தாமல் விட்டது. இன்று நம் உணவுப் பழக்கங்களும் மாறியது, அவர்கள் கொண்டிருந்த அந்த மருத்துவ அறிவு தனி மனிதரிடத்தில் இல்லை என்பதால் நம் முன்னோர்களின் பெருமைகளை மட்டும் பாடிக்கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது போன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும்.
தொ.ப ஐயா சொல்கிற மாதிரி நம் பண்பாட்டின் வேர்களை ஆழமாக ஆராய வேண்டும். அது மிகவும் அவசியம். தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அதனை ஆராய்ந்து, ஆவணப்படுத்தாமல் ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. அந்த வகையில் நம் பண்பாடும் பாதுகாக்கப் படும், தொழில்நுட்ப வகையிலும் வளர்ந்து இருப்போம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து எனக்கு நான் பார்த்த பழக்க வழக்கங்கள் குறித்து நிறைய கேள்விகள் உண்டு. ஒரு விஷயத்தை நாம் ஏன் செய்கிறோம் என்று வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டால்,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்க வீட்டுப் பெரியவங்க இப்படி தான் செஞ்சாங்க, நாங்களும் அப்படி தான் செஞ்சு வளந்தோம், நீங்களும் அப்படித்தான் செய்யனும். இப்படி கேள்விலாம் கேக்கக் கூடாது”
என்ற பதிலே கிடைத்திருக்கிறது. ஆனால் தொ.பவின் புத்தகங்கள் விடையளிக்கின்றன !
மஞ்சள் மகிமை என்ற தலைப்பில் பத்தொன்பது கட்டுரைகளால் ஆன இந்த புத்தகம் நான் கேட்ட பல கேள்விகளுக்கும், கேட்காத பல கேள்விகளுக்கும் விடையளிக்கிறது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் பல குறிப்புகள் புத்தகம் நெடுகிலும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதன் மூலம் அக்காலத்தில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களின் எச்சங்கள் இன்றும் நம் மத்தியில் தொடர்வதை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சி குறித்து பல தகவல்களை ஆசிரியர் விளக்குகிறார். தாய் தெய்வ வழிபாடு தமிழ் சமூகத்தில் நெடுங்காலமாக இருந்து வந்ததன் அடையாளமாக தாய் தெய்வத்தின் வெண்கலச் சிற்பம் மற்றும் அக்கால மக்கள் பயன்படுத்திய பல பொருட்கள் கிடைத்திருக்கிறது.
உலகளவில் இரும்பு காலம் நம் தமிழகத்தில் தான் முதலில் தொடங்கியது என்பதை தற்போது நாம் அறிந்து பெருமை கொள்ளும் சமயத்தில், தொ.ப இருந்திருந்தால் அவரின் அடுத்த புத்தகத்தில் இது குறித்து பல தகவல்கள் இடம்பெற்றிருக்குமே என்ற எண்ணம் அவர் இன்மையை நினைத்து வருத்தமளிக்கிறது.
விஷேசங்களுக்கு முன் வீட்டுக்கு முன், கோவில் கொடைக்கு (திருவிழாவுக்கு) முன் கோவில் முன் செம்மண் பரப்பும் வழக்கம் இன்றும் எங்கள் ஊர்ப் புறங்களில் உண்டு.
‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்'
என்று சங்ககாலம் தொட்டே ‘புதுமணல் பரப்புதல்’ வழக்கம் இருந்ததை நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
அதே போல் திருமணத்துக்குப் பின் ‘ஊர்ப் பழம் போடும்’ வழக்கமும் எங்கள் ஊரில் உண்டு. அதன் காரணத்தை ஆசிரியர் விளக்கியிருக்கும் ‘பழம் போடுதல்’ வழக்கத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
மஞ்சளின் மருத்துவ குணமும், மங்கள நிகழ்வுகளில் நிகழும் மஞ்சள் நீராட்டு குறித்து தெரிந்திருந்தாலும் அந்த வழக்கம் தொன்றுதொட்டு நிகழ்ந்திருக்கிறது என்பது புதிய தகவல் .
‘விறலி’ என்ற முகபாவனைகள் காட்டி நடிக்கும் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிய காரணங்கள் குறித்து வாசித்த போது, அவர்கள் குறித்து வெண்முரசில் வாசித்தவை நினைவில் வருவதோடு பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதன் தொடக்க���் அதுதான் என்றும் தெரிகிறது.
தாலியின் விளக்கமும் சங்ககாலத்தில் திருமண நிகழ்வுகளில் தாலி இருந்திருக்கவில்லை என்பதையும் பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள் மூலம் முன் வைக்கிறார். வெறும் தாயத்து போல தொடங்கியது தான் இன்றைய திருமணங்களில் முதன்மையானதாக விளங்கும் தாலி.
சுமைதாங்கி கற்கள் குறித்த தகவல்கள் வாசிக்கும் போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கன்னி தெய்வ’ வழிபாடு எங்கள் குடும்பத்தில் இப்போதும் உள்ளது என்பதை நினைவுகூர்ந்தேன்.
கோலம் போடும் வழக்கம் குறித்து சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,திருமுறுகாற்றுப்படை, திருப்பாவை போன்றவற்றில் உள்ள குறிப்புகளில் அதன் தொன்மையை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாலை குறித்த தகவல்கள் மாலையம்மன் பெயர் காரணம், நீராடல், உணவு, வீடு, நம் பண்பாட்டு தலைநகரான மதுரை குறித்து என நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்.
திருவிழா என்பது ஒரு 'சமூக இளைப்பாறுதல்' நிகழ்வு என்ற வார்த்தைகளின் உண்மையை உணர்ந்திருக்கிறேன். பொதுவாக சித்திரை மாதத்திலே தான் எங்கள் ஊர் பக்கம் உள்ள எல்லா கோவில்களிலும் திருவிழா வரும் அதன் காரணம் இந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன்.
தைப் பொங்கல், தைப் பூசம், பங்குனி உத்திரம்,வைகாசி விசாகம் என நம் தமிழர் கொண்டாடும் விஷேசங்கள் அனைத்தும் பௌர்ணமியில் தான் வருகிறது.
சைவ வைணவ சமய எழுச்சி, விஜயநகரப் பேரரசின் காலம் போன்றவை நம் விழாக்களிலும் சடங்குகளிலும் ஏற்படுத்திய தாக்கம், அதனால் சூரியக் காலண்டர் பின்பற்றத் தொடங்கியதால் நம் பண்டிகைகளில் வரும் குழப்பங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.
தாய்மாமன் உறவினைக் குறித்து, ‘கூலி’ என்று சொல்லின் விளக்கம், ‘மரு’த்துவம் பெயர் காரணம், உலகமயமாக்கல் நம்மை ஆட்டுவிப்பது,மொழியறிவு குறித்த தொ.பவின் பார்வை, பெயரிடுவது குறித்த தகவல்கள் என்று நூற்றுபத்து பக்கங்களில் நம் பல நூற்றாண்டு கால வரலாற்றில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் சடங்குகள் குறித்து இலக்கிய மேற்கோள்களுடன் விரிவாக விவரித்திருக்கிறார் தொ.ப.
நிறைய விஷயங்களை கற்று கொண்ட நிறைவை இந்த புத்தகம் அளிக்கிறது. நம் பண்பாடு, பழக்க வழக்கங்கள், சடங்குகள் குறித்து ஒரு ஆழ்ந்த புரிதலும் புதிய கண்ணோட்டமும் உருவாகியிருக்கிறது.
எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
நம் பெயரில், பேச்சில், செயலில், கருத்தில், இலக்கியங்களில், உணவில் தொடரும் நம் பண்பாட்டின் தொல் எச்சங்களை சிறு கட்டுரைகளின் வாயிலாக கோடிட்டுக்காட்டுகிறார் பேராசிரியர் தொ.ப.