இவர் இயற்பெயர் ரங்கநாதன். திருமந்திரம் வாசிப்பின் பாதிப்பில் ஞானக்கூத்தன் என்ற புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டார். இந்த புத்தகம் வாசிக்கும் போது, நேரடியாக பேசுவது போல் தான் இந்த புத்தகத்தை பதிப்பாசிரியர் வடிவமைத்துள்ளார்.
ஞானக்கூத்தன், வெவ்வேறு காலக்கட்டத்தில் இதழ்களில் தந்த நேர்காணல்களையெல்லாம், வெளியிட்டதை தொகுத்து வழங்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது.
இதில் இவர் கவிதை எழுத வந்த சூழல், புதுக்கவிதை பற்றியும், திராவிட இயக்க எதிர்ப்பையும், இலக்கிய அரசியல்கள், கவிதைவியல் பற்றியவை, இவரது நேர்காணல்களில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்.
இவர் சொந்த அனுபவத்திலிருந்து கவிதைகள் வருகிறது என்பதை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருந்து வந்திருக்கிறார், இது குறித்து ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.
ஞானக்கூத்தன், புது கவிதையின் வரலாற்றைப் பற்றிய இவரது பார்வையையும், புகார்கள், விமர்சனம், ஆதாரங்கள் என நிறைய விஷயங்களைப் பற்றி இவருடைய நேர்காணலில் பதிவு செய்திருக்கிறார்.
தமிழ், வடமொழி புலமை, கலைத் தூய்மைவாதம், அரசியல், முதலிவற்றைப் பற்றி நிறைய கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்திருக்கிறார்.
இவரது கவிதைகளை ஏடுகள் பதிப்பிக்க முன்வரவில்லை, அதனோடு தமிழ்நாடு எல்லை பிரச்சனை, தமிழ்நாடு பெயர்வைக்கும் போராட்டம் என்று கலந்து கொண்டு பின்பு சில கவிதைகள் வெளியானது. கிழித்தெறிந்தது போக மீதம் உள்ள சிலவற்றையே 1968இல் “சி.மணியின்” ‘நடை’ யில் வெளியிட முடிந்தது.
கவித்துவத்தை மாற்றுவதற்கு வேர்ட்ஸ்வொர்த், கோல்ட்ஸ்மித் உதவி இருப்பதாக சொல்லியிருப்பார். படிமங்களைப் பற்றி பேசியிருப்பார், இவருக்கும் பிரமிள் அவர்களுக்குமுள்ள கருத்துவேறுபாட்டை குறித்தும், இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்த தகவல்கள் பரிமாறி உள்ளார். புதுக்கவிதை உருவாக்கத்தில் பிச்சமூர்த்தி அவர்களே முதல்வர் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
இந்த புத்தகம் வாசிக்கும் போது, எனக்கு அறிமுகமாகாத எழுதர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைப் பற்றி பேசியிருப்பார்.
சி. மணி, ரவி சுப்ரமணியன், எலியட், பொன்னாண்டான், ஜனகப்பிரியா, சுமித்திரன், எஸ். சண்முகம், பிரதீபன், பிரேதா, மேத்தா, ஆ. முத்துசிவன், கா.சிவத்தம்பி, ந.முத்துசாமி, சிவராமு, மற்றும் சிலர், மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எல்லாம், நான் புதிதாக கேள்விப்படும் ஆசிரியர்கள்.
ஏற்கனவே தெரிந்த/அறிமுகமான எழுத்தாளர்களான தேவதச்சன், மௌனி, மனுஷ்யபுத்திரன், ஆத்மாநாம், யூமாவாசுகி, அசோகமித்ரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன், டி.கே.சி, பிரம்மராஜன், காலப்ரியா, ஆனந்த், பிச்சமூர்த்தி, ந. பார்த்தசாரதி, கா. நா. சு, அப்துல் ரகுமான், ஜானகிராமன், இவர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வாசித்ததில் நிறைய எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. வரப்போகும் நாட்களில், ஒவ்வொரு எழுத்தாளர்கள் மற்றும் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பற்றிய தேடலுக்கு இந்த புத்தகம் உறுதுணையாய் அமைந்ததில் மகிழ்ச்சி.