பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள். குறுங்கதை என்பது சிறிய இடத்தில் ஆடிக்காட்ட வேண்டிய ஆட்டம் கொஞ்சம் தாளம் பிசகினாலும் ரசிக்காது. வழக்கமான கதையாக வளர்த்துக்கொண்டு போகாமல் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிச் செல்ல உதவுவது குறுங்கதை. மொழிப் பரிசோதனைகளும் இதில் சாத்தியம். இத்தொகுப்பிலுள்ள கதைகள் அவற்றுக்கு உதாரணங்கள்.
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.