புனைபாவை - இரா.முருகவேள்⠀ ⠀⠀ நான் வாசித்த பிற வரலாற்று நாவல்யில்ருந்து புனைபாவை சற்று தனித்து நிற்கிறது.அரசனின் புகழ் பாடும் நாவலாக புனைபாவை அமையவில்லை.⠀ ⠀ பல முக்கிய தகவல்களை புனைபாவை தருகிறது. உருக்கை கொண்டு தமிழர் உலகின் சிறந்த வாளை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர்.நமது வாள்கள் உலக சந்தையில் முக்கிய இடம் வகித்துள்ளது. சைவம் எவ்வாறு சமணத்தை அழித்தது மக்கள் எவ்வாறு சைவத்தை தழுவினர் என்ற வரலாறு ⠀ ⠀⠀ இருளர் மக்களின் வாழ்வியல் அழகாகவும் வாசிப்போரை பொறாமை கொள்ளும் விதமாக உள்ளது.⠀ ⠀⠀ சோழர்களின் வீழ்ச்சி பாண்டியர்களின் வீழ்ச்சி மாலிக் கபூரின் மதுரை படையெடுப்பு தமிழரின் மருத்துவம் என பல தகவல்களை தன்னுள் அடக்கியுள்ளது புனைபாவை.கட்டாயம் வாசிக்க பட வேண்டிய நாவல்.
கொங்குப் பிரதேசம் குறித்து குறைவான இலக்கியங்களே உள்ள நிலையில், ‘வேள்பாரி’ படித்த காலத்திலிருந்தே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் வேளிர் குறித்தும் கொங்குப் பகுதியின் வரலாற்றைச் சார்ந்தும் அமைந்த கதைகளைப் படிக்கும் ஆர்வம் மேலோங்கியிருந்தது. புனைபாவை அமைந்துள்ள காலகட்டமும் நாம் அறிந்த வரலாற்றுக் காலகட்டத்திற்குள் தான் பெரும்பாலும் அமைந்துள்ளதால், படிப்பதற்கு இன்னும் சுவாரசியமாக இருந்தது. தமிழக வரலாற்று நிகழ்வுகள், அவற்றின் மீது உலக மற்றும் இந்திய வரலாற்று நிகழ்வுகள் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தின, கொங்குப் பிரதேசத்தின் உருக்கு தயாரிக்கும் தொழில்நுட்பம் உலகத்தின் பல்வேறு படையெடுப்புகளுக்கு எப்படி உதவியது - ஆனால் அதே சமயம் அதன் அருமை புரியாததால் எவ்வாறு தன் சுய வீழ்ச்சிக்கே காரணமாக அமைந்தது என்பதன் பின்னணியில், காடும் காடு சார்ந்த வாழ்க்கையும் கொடுக்கும் அமைதி, சமண புத்த சைவ வைணவ மதங்கள் எவ்வாறு சலசலப்பில்லாத நதி போல வாழ்ந்து கொண்டிருந்த இருளர் மற்றும் பிற ஆதிக்குடிகளை வேளாண் குடிகளாக மாற்றி சாதி அமைக்குள் கொண்டு வந்த வரலாறு, தமிழ் மறவப் போர் அறமும் அத்தகை வீரத்தால் சந்தித்த வீழ்ச்சி… என்று இந்நாவலின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நாம் கொங்குப் பிரதேச வரலாற்றை ஒரு முழுமையுடன் காண முடிகிறது!
An interesting historical fiction exploring the reason behind Tamil Kingdom fall due to abandonment of Weapon making technology. Story happening in 13 - 14th century highlighting the shift in priorities to the production of agricultural tools over military weapons, resulting in fall of Pandyas. Must read one from Murugavel sir.
வரலாறு என்றாலே நம் மனங்களில் தோன்றுவது போர், போர்க்கருவிகள், படைகள், வெற்றி / தோல்வி போன்ற எண்ணங்களே. இவையனைத்தும் ஒருவர்மீது ஒருவர் மண்ணுக்காகவோ, பொன்னுக்காகவோ, தன் வலிமையைப் பறைசாற்றுவதற்காகவோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தினை ஆண்டுவந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள்ளும், பல்வேறு அயல்நாடுகளிலும் போரிட்டு தன்னுடைய வலிமையைப் பறைசாற்றி வந்துள்ளனர். அந்நியப் படையெடுப்பில் இவர்களையும் வெற்றிபெற்று தமிழகத்தை ஆண்டோர் பலர். அவர்களுள், பல்லவர்கள், களப்பிரர்கள், நாயக்கர்கள், நிஜாம்கள், முகலாயர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பல குறுநில மன்னர்கள் அடங்குவர். இவ்வாறாக பல்வேறுபட்ட மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றில் வேறுபாடுகள் நிறைந்தவர்கள் நம்மை ஆண்டுள்ளார்கள். இந்த வரலாற்றை இன்று நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். பாட நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் மூலம் நாம் அடைந்த துயரம் ஒருபுறம் இருப்பினும் பெற்றதும் ஏராளம்.
வரலாறு படிக்க நினைக்கும்போது சில நேரங்களில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், மதன் எழுதிய கி.மு. கி.பி. என்ற நூலும், இரா. முருகவேள் எழுதியுள்ள புனைபாவை நாவலும் (நான் படித்தவற்றுள்) வரலாற்றை மிக எளிமையாக எடுத்துரைக்க முயல்கிறது. இந்நாவலில் முழுமையான தமிழக வரலாற்றையும் எழுதாவிட்டாலும், பாண்டியர்களின் வீழ்ச்சி பற்றிய சுருக்கத்தைப் புனைவாக எடுத்துரைத்திருப்பது சிறப்பு. இந்நாவல் எழுதுவதற்குப் பல வரலாற்று நூல்களின் உதவியினைப் பெற்றிருக்கிறார் என்பது அவரது முன்னுரையிலும், பின்னிணைப்பில் உள்ள துணைநூற் பட்டியல் மூலமும அறிய முடிகிறது. ஒரு நாவல் எழுதுவதற்குத் துணைநின்ற நூல்கள் என பட்டியலிடுவது புதுநடைமுறை (எனக்குத் தெரிந்த அளவில்).
சைவ, சமண மதங்களின் புரட்சி, வணிகர் – வேளாளர் சமூகத்திற்கு இடையே நடக்கும் போராட்டம், அதற்கு அடித்தட்டாக அமையும் சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள், காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்வியல், வெளிமக்கள் தொடர்பால் அவர்களின் வாழ்க்கைத்தர நிலை, அங்குள்ள வளங்களைச் சுரண்டுதல் போன்ற வரலாற்றை மையப்படுத்தி புனைவிலக்கியமாக எழுதிய நாவலே புனைபாவை என்பதாகும்.
பல கிளைக்கதைகளைக் கொண்டதாக நாவல் விளங்குகின்றது. சிவபெருமானின் திருவிளையாடல்கள், நாயன்மார்களின் வரலாறு போன்றனவும், சைவ மதத்தைப் பரப்ப சோழர்கள் மேற்கொண்ட முயற்சிகள், பல்லாயிரக்கணக்கான சிவன் கோயில்கள் கட்டும் பணிகள் நடைபெற்ற விதம், சமணம் அழித்து அதன் இடத்தைச் சைவம் வேரூன்றும் வரலாறு போன்றன இந்த நாவலின் வழி அறிய முடிகிறது. சிவபெருமானின் லிங்க வடிவமும், நடராஜர் உருவமும் இதில் பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வணிக – வேளாளர் இடையே நடைபெறும் மோதல்கள், அரசைக் கைப்பற்ற முயற்சிக்கும் வணிகக்கூட்டம், செல்வத்தைப் பெருக்குதல் என்ற ஒரே நோக்கத்தோடு, போரிடும் முறையில் தாம் கண்டுபிடித்த கருவிகளை உள்நாட்டில் அல்லாமல் அயல்நாடுகளில் விற்பனை செய்தல், குதிரை வளர்ப்பு முறை, குதிரைவீரர்களுக்கு விற்பயிற்சி அளித்தல், அவர்கள் அமர்ந்து செல்லும் சேனம் உள்ளிட்ட கருவிகள் தயாரித்தல், அவற்றில் உள்ள நுட்பம், படைக்கருவிகள் செய்வதில் உள்ள தொழில்நுட்பம், அதற்கான உருக்குகளைத் தயாரித்தல் போன்ற பல்வேறு செய்திகள் இந்நாவலில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதும், தமிழகத்தை அரசாட்சி செய்த ஒருவரும் அதனைப் பற்றிய நேர்மறையான எண்ணமில்லாமையும் அதனால் அழிந்துபோன வரலாற்றையும் இந்நாவல் பதிவுசெய்கிறது.
பழங்குடி மக்களின் வாழ்வியலை, அவர்களின் பழக்கவழக்கங்களைச் சிதைத்து, நம்பிக்கை போன்றவற்றை பாழ்படுத்தி, மலைப்பகுதிகளில் உள்ள தாதுக்கள் சுரண்டப்பட்டு, இதுவரை அறிந்திராத தொழில்களில் அவர்களை ஈடுபடுத்தி, உழைப்பைச் சுரண்டி அடிமைகளாகக் கொண்டுசென்ற நடைமுறை வரலாறு இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் உருக்குகள் அயல்தேசங்களில் விலைமதிப்பில்லாதவையாகக் கருதப்படுவது அயல்நாட்டுப் பயணிகள் மூலமும், குழுக்கள் மூலமும் அறியக்கிடைக்கிறது. சோழ மன்னர்கள் தங்களின் படைபலத்தை இழந்ததும், வணிகக் குழுக்கள் அவற்றை அதிகரித்ததும் சோழரின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம், படைக்கருவிகளின் வலிமையின்மையாலும், வாரிசுச் சண்டைகளாலும், மாலிக்காபூரின் படையெடுப்பினாலும் அழிந்தது. மருத்துவ நூல்களின் பெருக்கமும், மருத்துவ முறைகளில் மாற்றமும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறின. இருப்பினும், அவற்றை முறையாகப் பராமரிக்காத காரணத்தினாலும், அறுவை சிகிச்சைகள் மதத்திற்கு விரோதமானவை என்ற நம்பிக்கையினாலும் அவைகள் அழிந்தன.
இதுபோன்ற பல்வேறு வகையான செய்திகள் இந்நாவலில் பொதிந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், சோழ, பாண்டியரின் வீழ்ச்சியின் கதை, தமிழக இயற்கை வளங்கள் கொள்ளை என்ற அளவில் இந்நாவல் புனையப்பட்டுள்ளது. ---- முனைவர் போ. ஜான்சன்