மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1960 ஆம் ஆண்டில் எழுதிய நூல் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். தமிழகத்தில் பௌத்தத்தின் பல்வேறு போக்குகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் செய்த மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்தர் கூறியதாக வழங்கப்படும் இக்கதைகளையும் தொகுத்துள்ளார். இக்கதைகளில் இறப்பு, வறுமை, துறவு, உபதேசம், நன்றியறிதல் பிக்குகளின் வாழ்க்கைமுறை, சோம்பேறித்தன்மை, சீடர்களின் தன்மை ஆகிய பல்வேறு தன்மைகள் குறித்துப் பேசுவதாக அமைந்துள்ளன. புத்தர் ஒருகுறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்து வதற்கு இவ்வகையான கதைகளைக் கூறினார் என்பதை புத்த ஜாதகக் கதைகள் என்ற தொகுப்பின் மூலம் அறிகிறோம். ஜாதகக் கதைகள் என்பவை ஒரு வகைமையாகவே அமைந்துள்ளன.
மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழுக்கு பௌத்த, சமண சமயங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.
மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னும் இரு தளங்களில் செயல்பட்டவர். தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்தார்.பழைய ஏட்டுச் சுவடிகளை முறையாகப் படிக்கக் கற்றார். தொன்மையான சாசனங்களைச் சேகரித்தார்.
விருதுகள்: 1961-ல், தனது மணி விழாவில் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். 1961-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. 1980-ல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது.