"பதிலடி" - அரிசங்கர்
2019இல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு. கிட்டத்தட்ட அனைத்து கதைகளும் உணர்வுப்பூர்வமான கதைகள். சாதியம், வறுமை, திருட்டு மூன்றாம் பாலினம், நீர்வறட்சி போன்ற சமுக பிரச்சனைகளை தொட்டு, அதை கதை வடிவமாக்கி வாசப்பவர்களுக்குள் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்விதமாக எழுதப்பட்டுள்ளது.
அற்புதமான நடை என்பதால் குறுகியகாலத்தில் வாசித்துவிடலாம்.
கதைகளின் பெயர்களும் குறுவிமர்சனமும்:
1.புதுச்சட்டை- கேபிள் டீவி சந்தா தொடர்பாக நடக்கும் பிரச்சனை என ஆரம்பித்து சாதிப் பிரச்சனையாக மாறி ஒரு புதுச்சட்டையால் முடிவுக்கு வருகிறது.
2.கரையும் நினைவுகள்* - மிக அரிதான ஞாபக மறதி நோய் கொண்டவனின் தாய் மற்றும் காதலிக்கு அவன் பொருட்டு ஏற்படும் உணர்வுகளை படம்பிடிக்கும் கதை.
3.துருவங்கள்* - 50களின் வயதையொத்த பிரம்மச்சாரியின் வீட்டின் முன்பு அவருடைய முன்னாள் காதலி, அவள் கணவனுடன் 30 ஆண்டுகள் வாழ்ந்து வருகிறாள். அந்த கொடுமைக்கார கணவனின் இறப்பில் அவள் அழுத அழகையின் மூலம் தாங்கள் அந்தியோன்நமாக வாழ்ந்ததாக காட்டி ஏமாற்ற முனைகிறாள். இக்கதையை உணர்வுப்பூர்வமான காதல் கதை எனலாம்.
4.வாசனை - உணவக சமையல்காரனின் வாழ்வில் அவன்மேல் படியும் அவன் தயாரிக்கும் உணவுகளின் வாசனை, அவனது குடும்ப வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனச் சொல்லும் கதை.
5.திருடர்கள் - கோவிலில் பூசை செய்பவருக்கும், அவரால் மற்றொரு கோவிலில் பணிக்கு அமர்த்தப்பட்ட வேறசாதியை சேர்ந்தவனுக்கும் இடையில் நடக்கும் கதை. தட்சணை காசு தொடர்பாக எழும் பிரச்சனை, யார் திருடன் என முடிகிறது.
6.மௌனம் களையட்டும் - திருமணமாகப் போகிறவன் தனக்கு சிறுவயதில் நிகழ்ந்த வன்கொடுமை குறித்த அச்ச உணர்வினை வெளிப்படுத்தும் கதை.
7.விடுவிப்பு- மனைவியின் மீதான நம்பிக்கையை கணவன் வெளிக்காட்டியதால், அவளை அழுத்தியிருந்த பாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை சொல்லும் கதை.
8. நகரி - இரண்டாம் தாரமாகவாவது தான் நினைத்தவனை கைபற்ற நினைத்த இளமங்கையொருவளின் எண்ண ஓட்டங்களால் ஆன கதை. காந்தியின் மரணகாலத்தில் நடந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.
9. நிழல் தேடும் பறவைகள் - மூன்றாம் பாலினத்தவன் மற்றும் அவன் குடும்பத்தினின் உணர்வோட்டத்தை சொல்லும் கதை.
10. புயல் - புயலுக்கிடையில் மீன் பிடிக்க சென்ற கணவன் திரும்பி வருவானா எனக் காத்திருக்கும் தாயும் மகளும்., அவன் உயிருடன் கிடைத்தானா? இல்லையா? என உணர்வுபூர்வமாக சொல்லும் கதை.
11. பிணந்தின்னிகள்- சாதி ஆணவக்கொலைக்கு பலியானவனின் மேல்சாதி மனைவி மனப்பிறழ்வடைகிறாள். அவளுக்கு அவ்வூர் வெட்டியான் ஆதரவளிக்கிறான். இவர்களை சுடுகாட்டிலும் வாழவிடாமல் செய்கிறது சாதியம் எனச் சொல்கிறது இக்கதை.
12. செஞ்சிறை - ஒரு கொலை. அதனால் பல கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்படுகின்றனர், பேறுகால பெண் உட்பட. அவளுக்கு சிறையில் நடைபெறும் துயரங்களை சொல்லும் கதை.
13. மைதானம் - வெட்டவெளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் சிறுவனும், அங்கு ஆடு மேய்க்கும் கிழவரும் பேசிக் கொள்கின்றனர். கிழவரின் இளமைகாலத்தில் அவரின் நண்பன் ஏரியில் மூழ்கி இறந்ததையும் அந்த ஏரி எங்கிருந்தது என்பதையும் இக்கதை மூலம் நீர்வறட்சி பற்றி பேசுகிறது.
14. குப்பைகள் - பதின்ம வயது 3 மாணவிகளில் ஒருத்தியின் ஆடையை பற்றி மற்ற இருவர் சிலாகிக்கின்றனர். அந்த ஆடை எப்படி வந்தது என்பது பற்றியும் வறுமை பற்றியும் பேசுகிறது இக்கதை.
15. தொடுதல் - பார்வை திறனற்ற பெண், வாய்பேச இயலாத ஆண்., இவர்களுக்குள் மலரும் காதலை சொல்லும் அற்புதமான கதை.
16.பதிலடி - அரிசிக்கடை முதலாளி தொழிலாளிகளுக்குள் நடக்கும் கதையில் தொழிலாளர்/முதலாளி வர்க்க பிரச்சனைகளும், ஊடாக சாதிய ஏற்றத் தாழ்வையும் பேசுகிறது இக்கதை.
* - நமக்கு பிடித்த கதைகள்