வானில் பறக்கும் புள்ளெல்லாம் உலகெங்கும் சுதந்திரமாக பறக்க இங்கு மட்டும் சாதிப்பெயருடன் பறக்கின்றன. மலர்ந்து மணம் வீசும் மலர்களும் இங்கு மட்டுமே சாதியுடன் மலர்கின்றன. கடலில் நீந்தும் மீன்களும்கூட சாதியுடன் நீந்துகின்றன. சாதியம், தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் முயற்சியில் இயற்கை அமைவுகளை எப்படியெல்லாம் தனக்குச் சாதகமாக வளைத்துக்கொண்டது என்கிற மர்மத்தை இந்நூல் உடைக்கிறது. ஐம்பூதங்களும் திசைகளும் தாவரங்களும் உயிரினங்களும் ஆகிய அனைத்தும் இங்குத் தீண்டாமைக்கு உள்ளாகியுள்ள செய்தி பலருக்கும் புதிதாக இருக்கும். வெப்பமண்டலத் தாவரங்களான தருப்பையும், பஞ்சினால் செய்யப்பட்ட பூணூலும் குளிர்மண்டலத்தில் இருந்துவந்த இனக்குழுவின் அடையாளமானது எப்படி? சுற்றுச்சூழல் தூய்மை என்ற சிறந்த சிந்தனையின் மீது கழுவமுடியாத சாதியக் கறை படிந்தது எப்படி? ‘கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாங்கள் இணைந்து வாழவில்லையா?’ என்று தருண் விஜய் போன்ற திமிரானக் குரல்கள் கேட்குமளவுக்கு இயற்கையின் அசல் நிறமான ‘கறுப்பு’ இழிவாக்கப்பட்டது எப்படி? இதுபோன்ற பல கேள்விகளுக்கான விடையைச் சூழலியல் நோக்கில் தேடிப் பயணிக்கிறது இந்நூல். இது எந்தவொரு குறிப்பிட்ட சாதிக்கும் எதிரானதல்ல. அதேசமயம் சாதியை அகத்தில் சுமப்பவர்களுக்கு சாதி என்பது இயற்கையின் நியதி அல்ல என்பதை புரிய வைக்கும். இயற்கையை நேசிக்கும் எவரும் சாதியை நேசிக்க முடியாது. படைப்பில் அனைத்தும் சமம் என்பதே இயற்கை நெறி. சாதியைக் காரணம் காட்டி சக மனிதரையே நேசிக்க முடியாத ஒருவர் பிற உயிரினங்களை நேசிப்பதாகக் கூறுவது முழுப்பொய்.
சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர்.
காடோடி புதினத்துக்குப் பிறகு முடிந்த வரை நக்கீரனின் நூல்களை வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் அவருடைய தீவிர விசிறியாக மாறிவிட்டேன்.இந்த புத்தகக் கண்காட்சியில் வெளியான சூழலும் சாதியும் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி ஆகிய நூல்கள் வெளியானது.கண்காட்சிக்குச் சென்ற உடனே முதலில் வாங்கியது இவைகள் தாம். "உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா" என்ற பழமொழிகூட சூழலியலில் சாதியின் கோரமுகம்.ஆசிரியர் நமக்கு சாதியின் அடிப்படையான மனம் சார்ந்த புரிதல்களை மற்றொரு பரிணாமத்தில் இரண்டு பகுதிகளில் மொத்தமாக பதினாறு கட்டுரைகளை வழங்கி உள்ளார்.மொத்தத்தில் அனைவராலும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூலாகும்.திரு.நக்கீரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்💐 #Must Read
காடோடி நாவலைத் தொடர்ந்து எழுத்தாளர் நக்கீரன் அவர்களின் படைப்பாக்கத்தில் நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம் இது. ஏறக்குறைய எண்பது பக்கங்களைக் கொண்ட இச்சிறிய புத்தகத்தை எழுதுவதற்கு அவர் மேற்கொண்டிருக்கும் ஆழ்ந்த வாசிப்பும், அறிவியல்பூர்வமான ஆய்வும் வியப்பூட்டுகின்றன. இந்நூலை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு இந்தியாவில் சாதியம் பற்றி தொடர்ந்து வாசிக்க விரும்புபவர்களுக்கு இந்நூலின் இறுதியில் தரப்பட்டிருக்கும் நெறித்துணை நூல்களின் பட்டியல் பேருதவியாக இருக்கும்.
காடுகளை அழித்தும், தொல்குடி சமூகங்களைச் சிதைத்தும் சாதியம் இந்தியாவில் வேரூன்ற தொடங்கியிருக்கிறது. இயற்கைக்கு முற்றிலும் முரணான சாதியம், சூழலியலின் முக்கிய காரணிகளான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் சாதுரியமாக தனக்கு சாதகமாக்கியிருக்கிறது.
மத்திய ஆசியாவிலிருந்து இந்திய நிலப்பகுதிக்கு புலம்பெயர்ந்த ஆரியர்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் இயல்புகளை இழிவின் அடையாளங்களாக்கிருக்கிறார்கள். ஆரியர்கள் மெல்ல, மெல்ல தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டியது எப்படி என்று தெளிவான ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.
வேதங்கள் தொடங்கி வேதாந்தங்கள் வரை தத்துவார்த்த ரீதியாகவும் சாதியம் தன்னை கட்டமைத்துக் கொண்டது எப்படி என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. சக மனிதனை வெறும் சடமாகக் கருதுகிற பார்பனியத்தின் பண்பை அறிவியல்பூர்வமாக தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
இன்றும் படித்தவர்கள், பண்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரிடமும் சாதியம் ஒரு உளச்சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய உளச்சிக்கல் உருவாக்கிய தாழ்வு மனப்பான்மையே ஒவ்வொரு சாதியினரும் தம்மை ஆண்ட சாதியாக உயர்த்திக் கொள்ள உந்துசக்தியாக இருக்கிறது என்பது நூலாசிரியரின் வாதம்.
தங்கள் சுயசாதிப் பெருமையைத் தோளில் சுமந்து கொண்டு திரிபவர்களை, நோய் மனநிலை கொண்டவர்கள் என கடுமையாக விமர்சிக்கிறது இந்நூல். அப்படியெனில் எந்த மனநிலை நலமிக்கது என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்பீர்களானால் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவன் வாக்கு பதிலாக இருக்கிறது. இந்த பதிலையே நமது வாழ்வின் மிக முக்கியமான விழுமியமாக்க வேண்டிய கட்டயாமும் இருக்கிறது.
காடோடி நக்கீரன் அவர்களை பற்றி பல நாண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் ஆனால் அவரின் எழுத்தை வாசிப்பது இதுதான் முதல்முறை.
பார்ப்பனியம் என்பது மனித குலத்திற்கு மட்டும் அல்ல, அது இந்த இயற்கைக்கே எதிரானது என்பது தான் நூல் கூறும் செய்தி. பார்ப்பனியம் எப்படி இயற்கையிலும் தனது ஆதிக்க கருத்தை விதைத்தது என்பதையும், அந்த சிந்தனை எப்படி செயலாக்கப்பட்டது(Materialize) என்பதையும் சுருக்கமாக ஆதாரங்களுடன் பேசுகிறது இந்நூல்.
ஆரியர்களின் வருகை, இடத்திற்கேற்ப அவர்களுக்குள் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்கள், சக மனிதர்களிடையே அவர்கள் ஏற்படுத்திய தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை விரிவாக பேசப்பட்டுள்ளது. இதை தாண்டி விந்திய மலைக்கு வடக்கே நடந்த சாதிய மாற்றங்கள் போல தென் பகுதியில் நடக்காமல் போனதற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கும் புத்தகத்தில் பதிலுள்ளது.
பண்பாட்டு ரீதியாகவும், தமிழ் இலக்கியத்திலும் இடைச்சொருகப்பட்ட ஆதிக்க குறியீடுகளை தோலுரிக்கிறார். தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஐம்பூதங்களின் வழியே தீண்டாமையை எப்படி திணித்தார்கள் என்றும் புனிதம் என்ற கருத்து எப்படி பரப்பப்பட்டது என்பது பற்றியும் புத்தகத்தில் பேசுகிறார்.
கடைசி பகுதியில் பெரியாரின் மேற்கோளை பயன்படுத்துகிறார் "பாம்புகளில் கூட வெப்பமண்டல பாம்புக்குதான் நஞ்சு அதிகம். பூக்களில் கூட வெப்பமண்டல வெப்பமண்டலத்து பூவுக்குத்தான் மணம் அதிகம். இயற்கையிலேயே குளிர் மண்டலத்து மனிதர்களை விட, வெப்பமண்டலத்து மனிதர்களான நாம் அறிவாளிகள். அவர்கள் அறிவை பயன்படுத்தினார்கள். நாமும் நம் அறிவை பயன்படுத்தினால் அவர்களைவிட முன்னேறலாம் " என்றார் , எனக்கு Jared diamond எழுதிய “GUNS GERMS AND STEEL” புத்தகம் கண்முன்னே வந்து சென்றது.
பார்ப்பனீயம் இயற்கையை அழித்தது, சிந்திக்கும் மனிதனின் அறிவை முடக்கியது, வளர்ச்சியை தடுத்தது, அது செய்யாத தீய செயல்களே இல்லை. அந்த ஆதிக்கத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள நாம் அனைவரும் படிக்க வேண்டும் விழிப்புணர்வு பெற வேண்டும் அறிவாயுதம் ஏந்தி போர் புரிய வேண்டும்.
சூழலியலிலும் சாதி தன்னை நிலைநிறுத்து கொள்ள தவறவில்லை என்பது இப்புத்தகத்தை வாசிப்பவருக்கு வெளிப்படையாக தெரியும். வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
அஞ்சலில் இன்று சூழலும் சாதியும் நூல் கையில் வந்தவுடனேயே, பிரித்துப் படித்து முடித்துவிட்டேன். நீர் எழுத்தில் சாதியம் குறித்து இருந்த காட்டமான பார்வை, அந்தளவுக்கு இந்நூலின் எதிர்பார்ப்பை கூட்டி இருந்தது!
எடுத்த எடுப்பிலேயே காந்தி மற்றும் நாராயண குருவின் சாதி குறித்த வாதங்கள், இனி வரப்போகும் பக்கங்களுக்கு கட்டியம் சொல்லியது. இக்காலத்தில் 'நான் பறவை நோக்குபவன், பட்டாம்பூச்சி படம் எடுப்பவன், எனக்கு எதற்கு அரசியல்? நான் ஏன் சாதியம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்' என்று கேட்பவர்களுக்கான ஒரு 80 பக்க விடையாக இந்நூலைப் பார்க்கிறேன்!
'சக மனிதர்களை சாதிக் கருதி ஒதுக்கிவிட்டு பிற உயிர்களை நேசிப்பதாகச் சொல்வது ஏமாற்று வேலை'. சாதிய மனநிலை கொண்டருக்கும், சாதியம் குறித்து சூழலியல் பேசும் நான் ஏன் சிந்திக்கவேண்டும் என்று நினைப்பவருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
இந்நூலின் முதல் பகுதிக் கட்டுரைகள் ஆரியம் எப்படி நம் மண்ணில�� வேர் கொண்டது என்பது குறித்தும், இரண்டாம் பகுதி கட்டுரைகள் நம் சமூகத்தில் எங்கெங்கெல்லாம் சாதி கிளை பரப்பியுள்ளது என்பதையும் சூழலியல் நோக்கில் விளக்குகிறது.
அட்டைப்படத்தில் நூலால் வாய்கட்டு போடப்பட்ட காக்கை நூலின் பல்வேறு இடங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக வருகிறது. ஸ்டெப்பி புல்வெளியில் அலைகுடிகளாக வாழ்ந்து திரிந்த குளிர் மண்டலத்து மக்கள், இங்கு வாழ்ந்திருக்கும் வெப்ப மண்டல மக்களின் பண்பாட்டை, வரலாற்றை மாற்றி அமைக்கின்றனர். இது ஒரு உடனடி நிகழ்வல்ல; படிப்படியாக நூற்றாண்டுகளாய் நடந்த ஒடுக்குமுறை. உடலின் இயல்பை இழந்த ஒரு மானிடக் குழு (கறுப்புத் தோல் இழந்து வெளிறிய வெண்ணிறம்) , அவ்வியல்பை கொண்ட ஒரு மானிடக் குழுவைத் தாழ்வாகக் கருதி ஒடுக்கியது ஒரு அறிவியல் முரண் என்கிறார் ஆசிரியர்!!
இரண்டாம் பகுதி, சாதியத்தின் சமூக-சூழலியல் வீச்சை கண்முன் நிறுத்துகிறது. மனிதர்களிடையே மட்டும் இருக்கிறது என்று நாம் கருதும் சாதியமோ, ஐம்பூதங்களிலும் ஊடுருவி இருக்கிறது. அறிவியல் யுகத்தில் வானத்திலும் சாதி பரவி இருப்பதை உணரும் போது அருவருப்பே மேலிடுகிறது!
இவைகளையும் தாண்டி, விலங்குகளில் நாய் கீழே பசு மேலே, தாவரங்களில் நெய்தல் கீழே தாமரை மேலே, உணவில் கிழங்கு தீட்டு, திசைகளில் கூட தெற்கு தீட்டு, கிழக்கு என்றும் ஒடுக்கப்பட்டவர்க்கு! எல்லாவற்றிலும் எப்படி பார்ப்பனீயம் சோஷியல் டார்வினிஸம் என்று சொல்லி நியாயம் கற்பிக்கிறது என்றும் விளக்கப்படுகிறது.
நக்கீரன் அவர்களது நூலில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், தான் தருகிற தரவுகளும், மேற்கோள்களும் எடுத்தாளப்பட்டுள்ள நூல்களின் விவரம் பின்னால் விரிவாகத் தரப்பட்டிருக்கும். தரவுகளின் செறிவும், யார்க்கும் எளியதாய் இருக்கும் சீரான நடையும் வாசிப்புக்கு சிறப்பு சேர்க்கிறது!
சூழலுக்கும் சமூகத்துக்குமான இடைவெளியை "சாதியம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு சூழலியல் போக்கில் தந்திருக்கும் விசாரணை மூலம் தகர்க்க முனைகிறது இந்நூல்! சூழல் செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க!
சிந்துசமவெளி நாகரிக்க காலம் முடிந்து பின்னர் குளிர் பிரதேசங்களில் வாழ்ந்து ,இந்திய துணைக் கண்டத்தை நோக்கி கி.மு 150-ல் இடப்பெயர்வை மேற்கொண்ட ஆரியர்கள் எப்படி ஐம்பூதங்கள் , திசைகள் , தாவரங்கள், உணவு , விலங்குகள் என அனைத்தயும் தீண்டாமைக்கு உள்ளாக்கி தங்களை ஒரு புனித இனமாக , கடவுளாக சித்தரித்து இந்த மன்னின் சொந்த மக்களை வர்ணத்தாலும்/சாதியின் பெயராலும் அடிமைப்படுத்தி சொகுசு வாழ்வு வாழ்ந்தனர் என்பதையே இப்புத்தகம் விளக்குகிறது.
சாதியம் , தன்னை கட்டமைத்துக் கொள்ளும் முயற்சியில் இயற்கை அமைவுகளை எப்படியெல்லாம் தனக்குச் சாதகமாக வளைத்துக்கொண்டது என்பனவற்றையும் பல அறிஞர்கள் ஆராய்ச்சி முடிவுகளாலும், பல நடைமுறை எடுத்துக்காட்டோடும் எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.
பார்ப்பனர்கள் தாங்கள் அனுபவித்த பல விஷயங்களை அதவாது ஆறுகள், நிலங்கள் , குன்றுகள் , மரங்கள் இன்னும் பல உரிமைகளை வன்முறையின் மூலமே பெற்றனர். இந்த உண்மையை வாயு புராணமும் ஒப்புக்கொள்கிறது.
ரிக் வேதத்தில் ஆரியர்களின் இடப்பெயர்ச்சி குறிப்புகள் உள்ளன. அதுவே ஆப்கானிஸ்தானில் உருப்பெற்றது என்பதற்கான சான்றுகளை அதிலுள்ள சுற்றுச்சூழல் செய்திகளே காட்டிக் கொடுக்கின்றன. ரிக் வேதத்தில் இடம்பெரும் ரிசா, குபா , க்ரமு என்கிற ஆறுகள் ஆப்கன் நாட்டைச் சார்ந்தவை. இந்திய துணைக் கண்டத்தின் மரமான "ஆலமரம்" ரிக் வேதத்தில் குறிப்பிடவில்லை. ஆரவல்லி மலைகளும் , விந்தியமலைகளும் அதில் காணப் படவில்லை. இவை ஆரியர்கள் இம்மண்ணைச் சேர்ந்தவர் அல்லர் என்பதை அறிவிக்கிறது.
குளிர் பகுதியில் வசித்த ஆரியர்களுக்கு அப்பகுதியின் காலநிலையே அவர்களது ஆன்மீகக் கருத்தியலையும் வடிவமைக்க உதவியுள்ளது. கடும் குளிர் அவர்களது வாழ்க்கைக்கு இடையூறாக விளங்கியதால் , வெப்பம் தரும் சூரியன் தெய்வமாக கருத்துப்பட்டது . காயத்ரி மந்திரத்தின் பொருளும் இதையே பிரதிபலிக்கிறது.
பார்ப்பனர்களின் ஆடம்பர வாழ்க்கையால் பல உழைக்கும் மக்களின் வாழ்வு சுரண்டப்பட்டது. இதனால் பாதிப்படைந்த மக்கள் கி.பி 3&4 ஆம் நூற்றாண்டின் தொடகத்தில் சூத்திர்ரகளும் , வைசியர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்ய மறுத்தனர். இதுவே சமஸ்கிருத அறிஞர் ஆர்.சி.ஹஸ்ரா என்பவரால் 'கலிகாலம்' என அழைக்கப்பட்டது.
தீண்டப்படாதோருக்கான இருப்பிடம் எது என்பதை மநு முன்னரே தீர்மானித்து வைத்திருந்தார். அதவாது ஊருக்கு வெளியே, மரத்தடி , சுடுகாடு, மலையடிவாரம் , காடுகளின் ஓரம் போன்றவை.
கோவில் குடமுழுக்கும் தீட்டுக்கழிக்கும் செயலே. கோவிலை கட்டிய அனைவரும் கீழ்சாதியினர் என்பதால் அச்சடங்கு நடக்கிறது. புதுமனை புகுவிழாவிலும் வீட்டுக்குள் மாடு நுழைவது இதேபோன்று தீட்டை கழிக்கும் நிகழ்வுதான்.
உடன்கட்டை ஏறுவதிலும் அக்னி பகவான் வேறுபாடு காட்டினார். கிபி 1000 மாவது ஆண்டளவில் எழுதப்பட்ட பத்ம புராணம் சத்திரியப் பெண்கள் உடன்கட்டை ஏறினால் மேன்மையானவர்கள் என்றது. அதே செயலை பார்ப்பனப் பெண்கள் செய்யலாகாது என்றது.
இதுமட்டுமின்றி நீரில் தீட்டு , காற்றில் தீட்டு , கீழத்தெரு , மேலத்தெரு, கருப்பு நிற வெறுப்பு , நில உரிமை அபகரிப்பு என பலவற்றை எப்படி பார்ப்பனர்கள் ஒவ்வொன்றையும் தங்களுக்கு வசதியாக அமையும்படி மாற்றி மக்களை தாங்கள் இழிவானவர்கள் என நம்ப வைத்து அடிமை மனநிலையை ஏற்படுத்தி ஒடுக்கிவந்தனர் என்பதை விவரிக்கும் இந்த புத்தகத்தை நிச்சயம் அனைவரும் வாசிக்க வேண்டும் .
சுழலும் சாதியும் - நக்கீரன் ⠀⠀ சக மனிதர்களை சாதி கருதி ஒதுக்கிவிட்டு பிற உயிர்களை நேசிப்பதாக சொல்வது ஏமாற்று வேலை.சாதி ஒர் கொடிய மனநோய் இந்நோயில் இருந்து விடுபட சுழலும் சாதியும் போன்ற புத்தகங்கள் நமக்கு உதவி செய்யும். ⠀ சாதியின் தோற்றம் விரிவாக்கம் பற்றியும். ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து மேய்ச்சல் நிலம் தேடி இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவின் தொல்குடிகளை அடிமை படுத்தினர்.எங்கிருந்தோ வந்த ஆரியர்கள் எப்படி தமிழ் பண்பாட்டு வரலாற்றை மாற்றி அமைத்தனர் போன்ற கேள்விகளுக்கு பதிலாக சுழலும் சாதியும் புத்தகம் அமைந்துள்ளது. ⠀⠀ சங்க இலக்கியங்களில் போற்ற பட்ட கருமை தற்போது இழி நிலையில் இருப்பது ஏன். கடவுள் நிறமாக பார்க்க பட்ட கருப்பு இன்று அழகற்ற நிறமாக மாறியது எப்படி என்று புத்தகம் விளக்குகிறது. ⠀⠀ பகிர்ந்து உன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இருந்து விலகி வலியது எளியதை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற கோட்பாட்டை கொண்டே சாதி இயங்குகிறது என்று ஆசிரியர் தெளிவாக நமக்கு புரியசெய்கிறார். இயற்கை கொடையாக கொடுத்த ஐம்பூதங்களில் சாதி உணவில் சாதி விலங்கில் சாதி பறவைகளில் சாதி திசைகளில் சாதி பூக்களில் சாதி அனைத்திலும் சாதி பாவம் அவைகளுக்கு சாதி என்றால் என்னவென்று கூட தெரியாது. மேல் வகுப்பினரின் சுயநலமை சாதி. காட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்பு சுழலும் சாதியும்.
சூழலும் சாதியும், எழுத்துலகில் பன்முகம் கொண்ட எழுத்தாளர் திரு. நக்கீரன் அவர்களின் படைப்பு. "காடோடி" படைப்பின் மூலம் வாசகர்களின் மனதில் பெரும் இடம் பிடித்தவர்.
இப்புத்தகத்தில் சுற்றுச்சூழலையும், சமூகத்தையும் ஒப்பிட்டு அதன் கட்டமைப்பையும் அதற்கு பின்னால் நிறைந்திருக்கும் பொய் பிரச்சாரத்தையும் அதற்கு பெரும் காரணமான குறிப்பிட்ட இனத்தவரையும், அவர்களின் சூழ்ச்சியால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட பொது விதிகளையும் அதனால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு உண்டான இன்னல்களையும் சான்றுகளோடு நம் கண் முன்னே விவரிக்கிறார்.
மேட்டுக்குடி என்றும் உயர்சாதி என்றும் தன் சாதிய அடையாளத்தை பலப்படுத்த மட்டுமே எழுதப்பட்ட கட்டுக் கதைகளையும், வேதங்களையும், புராண இதிகாசங்களையும், சாத்திர நூல்களையும் பின்புலமாய் வைத்து சமூகத்தில் உழைப்பில்லாமல் மக்களைச் சுரண்டித் திண்ண நடத்தப்பட்ட போலி நாடகங்களை தோலுரித்துக் காட்டுகிறார்.
செடி, கொடி, பறவை, விலங்கு, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், பூமி, பருவநிலை, திசைகள் என அனைத்து இயற்க்கை காரணிகளையும் கொண்டு ஏற்படுத்தப் பட்ட சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க நடந்தேறிய நாடகங்களை துளியளவும் பயமின்றி ஒரு எழுத்தாளனாக ஒரு நல்ல படைப்பை தந்திருக்கிறார்.
இயற்கையாக அனைவரும் சமம் என்று இருக்கும் கோட்பாட்டை எப்படி பார்ப்பனீயம் சமம் இல்லை என்று ஆக்கியது என்பதை சூழலை கொண்டு விளக்குகிறது.நம்மை சுற்றியுள்ள அனைத்திலும் சாதி எப்படி படிந்திருக்கிறது என்பதை படிக்க மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.
இந்த புத்தகம் ஆரியர்கள் தங்கள் எண்ணங்களை பூர்வீகத்தின் மீது திணிக்க சுற்றுச்சூழல் எவ்வாறு பயன்பட்டது என்பது பற்றியும் சுற்றுச்சூழலையும், சுற்றுச்சூழல் உண்மைகளையும் பயன்படுத்தி பழங்குடியினரை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது பற்றியது ஆகும்
இந்த நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு என்றாலும், உண்மையில் இது சமுதாயத்தின் உருக்குள்ள கண்ணாடி. சாதியின் பாதிப்புகள் வெறும் அரசியல் உரைகளோ, தொலைதூர நியாயப் புரிதல்களோ அல்ல; அது நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்று, நீர், நிலம் என அனைத்திலும் நுழைந்து விட்டுள்ளது என்பதை ஆசிரியர் நக்கீரன் அவர்கள் மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்கிறார்.
இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கட்டுரையும், சாதியின் சூழலியல் தாக்கங்களை உணர்த்தும் வகையில் கண்ணோட்டத்தை விரிவாக்குகின்றன. குறிப்பாக, மேட்டுக் குடியில் உயர் சாதியினரும், பள்ளத் தாழ்வுகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் வாழும் நியமனமான இடவசதி குறித்து கூறும் பகுதிகள் ஆழமான சிந்தனையில் மூழ்கடிக்கும் அளவுக்கு மனதை உருக்கும்.
“காற்றும் கூட தீண்டாமையை பின்பற்றுகிறது” என்ற உணர்வு இந்த நூலில் வாசகனின் நரம்பை நெருக்கமாகத் தொடும். வீடுகளின் அமைப்பில் கூட சாதி மாறாத ஒழுங்காக ஆதிக்கம் செலுத்தியதைப் பற்றி ஆசிரியர் கூறும் தருணங்கள் மிகுந்த வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன.
நக்கீரன் அவர்களின் எழுத்து உணர்வின் உச்சத்திலும், அறிவின் அடித்தளத்திலும் நெஞ்சைத் துளைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பதிவிலும் வரலாறு, நிலவியல், சமூக அமைப்பு மற்றும் அரசியல் புள்ளிவிவரங்கள் ஊடாக சாதி நிர்வாகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆதார ரீதியாக பதிவுசெய்கிறார்.
சாதியினை நமக்குள் ஊறும் பிணியாக உணர விரும்புவோர் தவிர்க்க இயலாத ஒரு எழுச்சிப் புத்தகம். ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டிய கட்டாய நூல் இது.
சூழலும் சாதியும் என்ற நூல் தோழர் நக்கீரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பாகும். இந்நூல் இருபாகமாக பிரிக்கப்பட்டு 16 கட்டுரைகளை சூழியல் பரிமாணத்தில் உள்ளடக்கியது. ஐம்பூதங்கள் தொடங்கி,திசைகள் உணவில் தாவரங்களில் உயிரினங்களில் எவ்வாறு சாதியம் பார்க்கப்படுகிறதே பரவப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது. இந்த நூலை வாசிக்கும்போதே, நாம் வழக்கமாக கடந்துவரும் நிகழ்வுகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகளை ஊகித்து அறிய இயலும். சூழ்நிலையில் நமக்கு தெரியாமலே பரவிக்கிடக்கும் சாதிய வன்ம நிகழ்வுகளைப் பற்றியும் சொற்களைப் பற்றிய தெளிவு கிடைக்கும். ஒவ்வொரு கருத்தையும் நன்கு ஆராயந்து, மிகத்தெளிவாக சங்ககாலம் தொடங்கி தந்தை பெரியார் தொ.பா, இராகுல் சாங்கிருத்தியாயன் வரை எழுதிய சான்றுகளுடனும் ஆதாரங்களுடனும் மேற்கோள் காட்டியமை நூலுக்கு வலு சேர்த்துள்ளது. தொ ப அவர்களின் நூல்கள் வாசிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே சூழியல் சாரந்த விடயங்களை அறிந்து கொள்ள தோழர் நக்கீரனும் இன்றியமையாதவர். சூழியலிலும் சாதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது வியக்கத்தக்க வகையில் உள்ளது . அனைவரும் வாசிக்கவேண்டிய ஓர் நூல். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
Nakkeran never fails to impress us with his works. His works are very informative, insightful and a delight to read. He knew the knack of making non-fiction as interesting as a fictional work. This particular work is quite exhaustive in terms of his efforts. He has portrayed how casteism got cast on ecology too. Read to find out more for yourself.
"சூழலும் சாதியும்", இப்புத்தகத்தில் சாதி மற்றும் ஆரியத்தை மையமாக கொண்டு பேசுகிறது. - இவ்விரண்டும் எவ்வாறு கொண்டு வரப்பட்டது? - யாரால் கொண்டு வரப்பட்டது? - எதன் அடிப்படையில் மக்களை பிரிவினைக்குள் கொண்டு வந்தார்கள்.
மேலும் இந்த சாதி பாகுபாடு மனிதர்களுக்கு மட்டும் தானா இல்லை மற்ற உயிரினங்களுக்கும் பொருந்துமா? இது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கான பதில்கள் இப்புத்தகத்தில் கூறப்படுகிறது.
"Sulalum sathiyum" tries to spotlight the intertwined relationship between caste and environment, and the book has done justice to the topic. Even though the book talks about both caste and environment, I personally felt it focuses more on caste than environment. Perhaps "Sathiyum sulalum" could be the right title.
A fact driven book relating the effects of casteism on the environment, and how Brahminism used environment as a tool to spread casteism across, etc., Also gives a view on the aryan migration to northern india & beyond and how southern india was resisting the aryan imposition to an extent and many more.
There's a common saying that caste is seen only in humans, but not on any other element of nature. Here, the author states, though the elements of nature don't have any caste identity by themselves, how humans used & exploited them with it, brahminism to be more precise.