நா. காமராசன் (நவம்பர் 29, 1942 - மே 24, 2017) தமிழ்ப் புதுக்கவிஞர், திரைப்பாடலாசிரியர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவர். மரபுக்கவிதையில் இருந்து நவீனக்கவிதைக்கு வந்தார். அரசியல் செயல்பாட்டாளராக இருந்தார்.
நவம்பர் 29, 1942-ல் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். போடிநாயக்கனூரில் தொடக்கக் கல்வி கற்றபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றார்.
காமராசன் பிப்ரவரி 5, 1967-ல் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை மணந்தார். தைப்பாவை என்ற மகள் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். தீலீபன் என்ற மகன் பட்டயக்கணக்கர்.
முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல்சட்ட நகலை எரித்தமைக்காக கைதானார். பின்னர் தியாகராசர் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் ஆலோசனைப்படி உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாக பணியாற்றினார். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.1991-ல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.
நா. காமராசன் பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களின் பாதிப்புடன் மரபுக்கவிதைகள் எழுதியவர். சுரதா அவரை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தார். பின்னர் வானம்பாடி கவிதை இயக்கம் அவரை புதுக்கவிதை நோக்கிக் கொண்டு வந்தது. வானம்பாடி கவிதை இயக்கத்தின் பாதிப்பு கொண்டவர் என்றாலும் அவருடைய கவிதைகள் வானம்பாடிக் கவிஞர்களைப்போல நேரடிக்கூற்றுகளை நம்பாமல் படிமங்களை முதன்மையான கூறுமுறையாக கொண்டவை.
நா. காமராசனின் முதல் தொகுப்பு கறுப்பு மலர்கள் பரவலாக கவனிக்கப்பட்டது. சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி அவருடைய புகழ்பெற்ற கவிதைநூல். பெரியார் காவியம் என்னும் நீள்கவிதைநூலையும் எழுதியுள்ளார்