தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழ்ப் பேரரசு யாருடையது... ஒரு நூற்றாண்டுக்கு நிலையான ஆட்சி நடத்திய அவர்களின் ராச்சியம் எப்படி சரிந்தது? 14-ம் நூற்றாண்டில் கோலோச்சிய அந்தப் பேரரசைத் தேடி வீரகாவியமாக உருவாக்கியிருக்கிறேன். பிற்கால சோழர்களுக்குப் பிறகு விஜயநகரத்தின் தெலுங்கு பேரரசர்கள் தமிழகத்தை ஆண்டனர் என்றே வரலாற்றுப் புரட்டு நடந்துகொண்டிருக்கிறது. பிற்கால சோழர்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் சம்புவராயர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்களின் வீர வரலாறு மொழிக்கும் சாதி பாகுபாடுகளை நீக்குவதற்கும் பாடுபட்டது. சாதி எப்படி உருவாகியிருக்கும் என்ற கேள்வி எனக்குள் பல ஆண்டுகளாக உண்டு. சாதிரீதியாக சுலபமாக ஒன்று திரளும் மக்களை அடிக்கடி பார்க்கிறேன். சொந்த சாதியினருக்கு நன்மைகள் செய்பவர்களையும் பார்க்கிறேன். பெரிய பதவியில் இருப்பவர்கள், பெரிய பணக்காரர்கள் பலர் தங்கள் சொந்த சாதியினரைத் தேடி உதவுவதைப் பார்க்கிறேன். வாழவே வழியில்லாத பலர் தங்கள் இறுதி முயற்சியாக தங்கள் உறவுகளிடம் தஞ்சமடைவதைப் பார்க்கிறேன்.
‘‘குரலற்றவரின் கடைசி புகலிடமாக இருக்கிறது சாதி!’’ என வரலாற்று அறிஞர் தொ.பரமசிவன் நான் எடுத்த நேர்காணலில் சொன்னார். கடைசி புகலிடம் என்றா சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ‘‘கட்சி, நண்பர்கள், சங்கம் எல்லாம் கைவிடப்பட்டவர்களுக்கு அவர்களுடைய சொந்த உறவும் சாதியும்தான் உடன் நிற்கிறது’’ என்றார் அந்த சாதி மறுப்பாளர் அழுத்தமாக. உயிரற்ற வைரஸ், உயிருள்ள ஒரு செல்லில் ஒளிந்திருப்பதைப் போல பல்குகிறது சாதி. அது எப்படி உருவாகியிருக்கும், ஏன் உருவானது, எப்படி தழைக்கிறது... இந்த மூன்று கேள்விகளும் முக்கியமானவையாக இருந்தன. அதை நோக்கிப் பயணமானேன். ஏற்ற தாழ்வுகள் எப்படி அகலும் என்ற நான்காவது கேள்விக்கான விடை தெரியவில்லை. நாவலைப் படிக்கும் நீங்கள் ஒருவேளை அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியும்.
தமிழ்மகன் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
பிற்கால சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு இடையே நூறு ஆண்டுகளை விட்டுவிட்டு அடுத்து விஜயநகர பேரரசின் ஆட்சி தொடங்குவதாக ஒரு வரலாற்று திரிபு இங்கே நடந்து கொண்டிருக்கிறது அதற்கு எதிராகவே எழுதப்பட்ட நூலாக இதை கருதலாம். சோழ பேரரசின் முடிவிற்கு பிறகு சோழர்களிடம் ஒரு சிற்றரசாக இருந்த சம்புவரையர்கள் தனி அரசாக மாறி சில சிற்றரசுகளை இணைத்துக் கொண்டு சிறப்பான ஆட்சியை 100 ஆண்டுகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக் காலத்தில் எந்த விதமான ஆக்கிரமிப்பு போருக்கும் அவர்கள் செல்லவில்லை. போர் என்றால் பாதிக்கப்படுவது மக்கள் தான் அதை நாம் வீனே செய்ய கூடாது என்கிறார் அரசர்.அதேபோல வடக்கில் இருந்து வரும் சுல்தானிய ஆட்சியாளர்களும் சம்புவராயர்கள் மீது படை எடுக்க தயங்கி இருக்கிறார்கள் இதிலிருந்து அவர்களின் வலிமையை நாம் புரிந்து கொள்ளலாம். சாதிய சிக்கலுக்கு தீர்வு சொல்லி இடங்கை வலங்கை பிரச்சினை தீர்ந்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஆட்சி செய்து இருக்கிறார்கள். மாலிக் கபூர் படையெடுப்பை எதிர்கொள்ள தனக்கு கீழ் இருக்கும் சிற்றரசுகளை படை திரட்ட இளவரசர் ஏகாம்பரநாதர் கிளம்புகிறார் இதில் தொடங்கி விஜயநகர பேரரசின் போரில் முடியும் நாவல் பல்வேறு தமிழ் பெருமைகளை ஆதாரத்துடன் சொல்கிறது. வீரமும் அறம் கொண்டு போரிடுபவர்கள் தமிழர்கள் ஆனால் வெற்றிக்காக குமார கம்பணன் தாசிகளை படை வீட்டிற்கு அனுப்பி வீரர்களை மயக்கி போரில் வெற்றி அடையலாம் என்பது எல்லாம் கேவலமாக உள்ளது. அந்த பெண்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லும் போது தமிழ் அரசர்கள் பெண்களை தண்டிக்க கூடாது என்று சொல்லிவிடுகிறார்.தமிழர்கள் சைவத்தை பின்பற்றி சாதிய எதிர்ப்பவர்கள். பிராமணர்களை அவர்களின் சாதி பிரிவினைக்காக கடுமையாக எதிர்த்தனர். கந்தளூர் சாலை அழிப்பு, பிராமணர் ஊர் எரிப்பு என்று கடுமையானது ஆனால் விஜயநகர அரசு ஆதி சங்கரர் உருவாக்கிய அத்வைதம் மூலம் சாதியை பின்பற்றுபவர்கள். ஆக விஜயநகர படையெடுப்பால் தான் இங்கே சாதி இன்றும் இவ்வளவு பெரிய தீர்க்க முடியாத சிக்கலான இருக்கிறது. மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த நூல் எழுதபட்டு உள்ளது.
நான் படித்த நாவல்களில் முதல் முறையாக எங்கள் ஊரின் பெயர் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
இரவில் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் இளவரசர் இமைகளை ஒரு வினாடி மூடி திறந்து சைகை செய்தார்? பல நாவல்களில் இரவில் செய்யும் இது போன்ற செயல்கள் இரவு அவ்வளவு கருமையாக இருக்காதோ என்ற எண்ணத்தை தருகிறது. சமயம், சாதி இரண்டும் கடவுளோடு சம்பந்தமுள்ளவை? தொலைந்துப் போன ஈசன் வாளை கண்டுபிடிக்க வேண்டும் என்றதும் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் சுலபமாக கண்டுப்பிடித்தது போலிருந்தது. படையப்பா படத்தை போல படைவீட்டின் இளவரசரை மணந்துகொள்ள ஆசைப்படும் நட்பு நாட்டை சேர்ந்த இளவரசி பழிவாங்க, சம்புவராயர் சாதி பாகுபாட்டை நீக்க முயல்கிறார் என்று கோபம் கொள்ளும் ஒரு பிராமணரை இருபது வருடம் கழித்து சிந்திப்பது, ஒரு தெலுங்கு அரசரை மணந்துக் கொள்வதோடு அந்த கதாப்பாத்திரம் காணாமல் போகிறது.
அரசர்களைப் பெருமைப்படுத்தி காரியம் சாதிப்பதற்கு அந்தணர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை, இடங்கை வலங்கை பிரிவினர்களின் சாதிச் சண்டை, மாரியம்மன், சோலையம்மன் போன்ற குல தெய்வங்களை வேத தெய்வங்கள் ஓரங்கட்டின என்று சாதி அரசியலை ஆவணப்படுத்துவது தான் நோக்கம் போல தெரிகிறது. கதை ஈர்க்கவில்லை.
களப்பிரர்களின் பிராமண எதிர்ப்பினால் அந்த வரலாறு முழுவதுமாக அழிக்கப்பட்டதெனில் வெளிநாட்டினர் யாரும் அக்காலத்தில் தமிழ் நாட்டிற்கு பயணம் செய்யவில்லையா? அவர்களிடம் எந்த குறிப்பும் இல்லையா? பிராமணர்களுக்கு பதிலாக ஓதுவார்களை ஆதரித்த, காந்தளூர் சாலையை தரை மட்டமாக்கிய ராசராச சோழனை பிராமண விசுவாசி என்கிறார்கள் என்பது என்னவோ சரிதான்.