ஓர் ஆணும் பெண்ணும் குடும்பம் என்கிற அலகுக்குள் நுழைகிறபோது, தம் விருப்பங்களுக்கும் விடுதலை உணர்விற்கும் இடையூறு ஏற்படும் என்பதை அறிந்தேதான் அவ்வாழ்வைத் தேர்வுசெய்கிறார்கள். ஆனால் அவ்வறிதல் வந்த பிறகு, இருவருக்குமான விடுதலை உணர்வினைக் கொண்ட வாழ்முறையை உருவாக்கிக்கொள்ளும் தகுதியை அவர்கள் பெற்றுவிட்டால், மகிழ்வின் ஒளிகூடிய, புரிதலில் மேன்மை கொண்ட வெளியில் வாழ்வு பரவசிக்கத் தொடங்குமென்கிறாள் கமலி. அழகிய குறியீடுகள், நீர்மை மிகுந்த மொழி, பாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் துலங்கச் செய்கிற அறிவார்ந்த உரையாடல்கள், மனக் கிளர்வுகளின் கவித்துவமான வெளிப்பாடுகள் என கமலி பேரெழில் கொண்டவள்.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
மேலோட்டமாக சொல்லவேண்டுமானால், இது ஒரு Sugar Daddy காதல் கதை.
படித்தவரையில், நடுத்தர வாழ்க்கையின் பிரச்சனையை பிரச்சாரம் செய்யாமல் எழுதப்பட்ட ஒரே Affair நாவல் இதுவாகத்தான் இருக்கும். கமலி பிரெஞ்சு, ஆங்கில இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவளாக இருக்கிறாள். அதனாலோ என்னவோ அவளுக்குத் திருமணத்திற்குப் பின்பான ஒரு புது உறவென்பது குற்றவுணர்வையே கொடுப்பதில்லை. இதை ஆரோக்கியமான விஷயமாகவும், நடைமுறையாகவுமே பார்க்கிறேன்.
கண்ணன் காதலை வெளிப்படுத்தும் இடம் ரொம்ப அழகாக இருந்தது. ஆல்பர்ட் காம்யூ எழுதிய ‘அந்நியன்’ நாவல் பிரெஞ்சு பிரதியின் ஒரு பக்கத்தைக் கமலி படித்துக் காண்பித்ததும் காதலை வெளிப்படுத்துகிறான் கண்ணன். இதேபோல் எனக்கும் யாராவது செகாவின் கதைகளை ரஷ்ய மொழியில் வாசித்துக் காண்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென யோசித்தேன்.
கமலியின் கணவனான ரகு, கண்ணனுடனான அவளது உறவை அறிந்தபின் கோபப்படவும் இல்லை, பக்குவமாக அங்கீகரிக்கவுமில்லை. மாறாக, அவளிடம் கண்ணீர் விட்டு அழுது, அவளை இழந்துவிடும் பயத்தைத் தெரியப்படுத்துகிறான். அத்தனை நாட்களாக அவனுடன் உப்பு சப்பான கலவியைச் செய்து வந்த அவள், அன்றிரவு கணவனுடன் மூர்க்கமாகப் புணர்கிறாள். இதைக் காதலின் வெளிப்பாடு என்று சொல்வதைவிட, உடைந்த ஆன்மாவான தன் கணவனுக்கு அவள் ஆறுதலின் பேரில் அளிக்கும் பரிசு என்றே தோன்றுகிறது.
கடைசி முப்பது பக்கத்திற்குக் கதை அதன் இரண்டாம் உச்சத்தைத் தொடுகிறது. முதல் உச்சத்தை முதல் அத்தியாயத்திலேயே எட்டிவிட்டது. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வெளியில் சொல்லப்பட்ட கதையை என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.
Affair புனைவில் வழக்கமாக எல்லோரும் செய்வதுபோல் அறத்தைத் திணிக்காமல், கதாபாத்திரங்களை அவர்களது போக்கில் சுதந்திரமாக விட்டதே இந்நாவலின் மிகப்பெரிய பலம். சமீபத்தில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘Simple Passion’ என்ற பிரெஞ்சு படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தின் சிறப்பம்சமாகவும் இதைக் குறிப்பிட வேண்டும்.
எழுத்து வடிவத்திற்கு உண்டான பிரத்தியேக கதை சொல்லல் முறை இல்லையென்பதைக் குறையாகக் கருத்திற் கொண்டாலும், தற்கால போக்கைப் பிரதிபலிப்பதால் இந்நாவலை வாசிக்கலாம். ஆரம்ப நிலை வாசகர்கள் அவசியம் வாங்கி வாசிக்கவும்.
One of the worst books, I have ever read in my life. And the climax decision by Kamali was an atrocity to another level, if the author has a press and a pen to write, it doesn't mean he can write whatever comes to his mind, even erotic books have some kind of logic than this book.