கொனஷ்டை இயற்பெயர் S.G. ஸ்ரீநிவாஸாச்சாரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள செருக்கை என்னும் சிறு கிராமமாகும். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஆர். சூடாமணி தனக்கான தமிழை இவ்வரிடமிருந்து பெற்றுள்ளார். தற்போது இவரின் இரண்டாம் புத்தகம் மட்டும் வந்துள்ளது. இத்தொகுதியில், கதை, கட்டுரை இடம் பெற்றுள்ளன. விரைவில் அவருடைய முதல் புத்தகம் வெளியாகும்.
இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளராக கருதப்படுகிறார். ஹாஸ்யக் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.
அரிசியில் கல் பொறுக்குவது தெரியும். இந்த புத்தகத்தை படிப்பது கல்லில் அரிசி பொறுக்குவது போல. சில நாட்களுக்கு முன் புத்தகத்திருவிழாவில் 'கொனஷ்டையின் படைப்புகள்' புத்தகத்தை வாங்கியதை எழுதியிருந்தேன். இப்படி ஒரு அவசர பதிப்பு தேவையா என்றே படித்து முடித்தவுடன் தோன்றியது. ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்து பிழைகள், நிறுத்தற் குறிகளில் பிழைகள், எல்லாவற்றிர்க்கும் மேலாக வார்த்தைகளை பிய்த்து போட்டு ஜிலேபி சுட்டிருப்பது என்று வாசிப்பின் இன்பத்தை எப்படியெல்லாம் குறைக்கமுடியுமோ அவ்வளவும் இருக்கிறது. புத்தகத்திருவிழாவின் அவசரத்தில் பதிப்பிக்கப்பட்டதாக இருந்தாலும், இத்துணை பிழைகள் அதன் ஆசிரியருக்கு மன்னிக்க முடியாத குற்றமே. இவ்வளவு மோசமான பதிப்பை நான் பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும். இதையெல்லாம் தாண்டி, கதைகளுக்குள் நுழைய முடிகிறதென்றால், அது கொனஷ்டையின் எழுத்து திறனால் மட்டுமே. இலக்கிய வரம்பின் உள்ளே வராது என்றாலும், மிகவும் சுவாரசியமான எழுத்துக்கள். குறிப்பாக புராணத்தில் அரைகுறையாக இருக்கும் கதைகளை நிறைவு செய்ய எத்தனிப்பது போன்றவை தொகுப்பு. இவரது கதைகளை மூன்று விதமாக பிரிக்கலாம். துப்பறியும் கதைகள், கணவன்-மனைவி உரையாடல்கள் மற்றும் புராணக்கதைகளை ஒரு twistடுடன் எழுதுவது. இந்த தொகுப்பின் எல்லா கதைகளும் இவை மூன்றில் ஒன்றில் சிக்கிக்கொள்ளும். கணவன் மனைவி உரையாடல் கதைகளே இவற்றில் மிகவும் யதார்த்தமாகவும், சற்று நக்கல், நகைச்சுவை முதலியவற்றுடனும் இருக்கிறது. மற்ற இரண்டும் விளையாட்டுத்தனமான நகைச்சுவை கதைகள். வாசிக்க விரும்புபவர்கள் பிழை திருத்தப்பட்டு அடுத்த பதிப்பு வந்த பிறகு, வாங்கி வாசிக்கலாம்.