1978 முதல் செங்கப்பாடி என்ற சிறிய ஊர், அதைச் சுற்றிய காடுகள் பின்னர் கொளத்தூர், மேட்டூர், கொள்ளேகால் போன்ற சில நகரங்களை உள்ளடக்கிய பிரச்சனையாக இருந்தவர் வீரப்பன். 1992 முதல் இந்த எல்லையைக் கடந்து மைசூர், ஈரோடு, சேலம் என சில மாவட்டங்களை உள்ளடக்கிய பிரச்சினைக்குரிய நபராக மாறுகிறார். அடுத்த சில ஆண்டுகளில் தமிழகம்-கர்நாடகம் என இரு மாநிலங்களுக்குமே பிரச்சினைக்குரிய நபராக மாறுகிறார். 2000 த்தில் கன்னட திரைப்பட நடிகர் Dr.ராஜ்குமாரைக் கடத்தியதன் மூலம் இந்திய அளவிலான பிரச்சினைக்குரிய நபராக மாறுகிறார். கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்க இரு மாநில அரசுகளும் 108 நாள்கள் வீரப்பனிடம் மன்றாட வேண்டியிருந்தன. இந்த நேரத்தில், வீரப்பன் விவகாரம் இந்த நாட்டின் எல்லைகளைக் கடந்து பெரும்பாலான உலக நாடுகள் அனைத்திலும் பேசப்பட்டன. உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுள் Dr.ராஜ்குமார் கடத்தலும், விடுதலையும் முக்கியமான ஒன்று. தமிழகம், கர்நாடகம் என இரு மாநில முதல்வர்களும் நேரடியாகப் பங்குபெற்று பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். பெரும்பாலான கடத்தல்களில் கடத்தல்காரர்கள் தோற்பார்கள். சில இடங்களில் அரசும், காவல்துறையும் தோற்கும். ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் இரண்டு தரப்பிலுமே தோல்வியே அடைந்தனர். ஏன் பேச்சுவார்த்தைக்குப் போன மூன்றாம் தரப்பினரும் கூட வெற்றிபெற முடியவில்லை. இந்தப் பேச்சு வார்த்தையில், நக்கீரன் வாரமிரு முறை இதழின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால், இணை ஆசிரியர் அ.காமராஜ், அப்போது நக்கீரன் செய்தியாளராக இருந்த நான், என்னோடு பணியாற்றிய செய்தியாளர்கள் பாலமுருகன், சுப்பு என்கிற சுப்ரமணியம் ஆகியோரும் ஈடுபட்டோம். அரசும், நாங்களும் நினைத்தபடி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடியவில்லை. அடுத்தாகத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி என்கிற கல்விமணி, புதுவை மாநில PUCL அமைப்பச் சேர்ந்த சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டது. “வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போங்கள்” என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இருமாநில முதல்வர்களையும் பார்த்து காட்டமாகக் கூறினர். நடிகர் Dr.ராஜ்குமார் வீரப்பன் காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த 108 நாள்களும் இந்தப் பிரச்சனை இரு மாநிலங்களிலும் நெருப்பாகப் பற்றி எரிந்து கொண்டிருந்தன. அதன் பின்னர், கடந்த 20 ஆண்டுகளாகவும் இந்தக் கடத்தல் பற்றி அவ்வப்போது பிரச்சனைகள் புயலாக மாறுவதும், பின்னர் வலுவிழந்து போவதுமாகவே உள்ளது. நடிகர் Dr.ராஜ்குமார் கடத்தப்பட்ட நாளிலிருந்து அவர் விடுதலையானதுவரையில் அவர் வீரப்பன் காட்டிலிருந்த 108 நாள்களில், 106 நாள்கள் நடந்த அணைத்து நடவடிக்கைகளிலும் நான் நேரடியாக ஈடுபட்டுள்ளேன். இந்த 106 நாள்களில் என் கண்முன் நடந்த நிகழ்வுகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக வெளியில் தெரியாமல் இருந்த பல சங்கதிகளை இந்நூலின் வழியாகச் சொல்கிறேன். இதைச் சொல்வதன் மூலம் யாருடைய வாழ்விலும், சமுதாயத்திலும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இந்த நாட்டிலுள்ள குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நடந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் உரிமையும் உள்ளது. ஒரு செய்தியாளர் என்ற வகையில் எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லவேண்டிய அவசியமும் உள்ளது. இதைத் தொடர்ந்தே Dr.ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் அவர் விடுதலை செய்யப்பட்டது வரையிலான நிகழ்வுகளை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்-3 என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.இந்த நாட்டிலுள்ள குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நடந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் உரிமையும் உள்ளது. ஒரு செய்தியாளர் என்ற வகையில் எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லவேண்டிய அவசியமும் உள்ளது. இதைத் தொடர்ந்தே Dr.ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் அவர் விடுதலை செய்யப்பட்டது வரையிலான நிகழ்வுகளை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்-3 என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.