ஏன்… எதற்கு? ’ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல் நிலையில் மஞ்சள் பூசும் பழக்கம் உள்ளது அல்லவா? இது நீண்ட காலமாக கடைபிடிக்கும் பழக்கம். இது எதற்காக என்றால் மஞ்சள் ஒரு கிருமி நாசினியாகச் செயல்படும். அது ஒருவகையில் வீட்டினருக்கு ஆரோக்கியம் தருகிறது. ஆனால், இப்போது பல வீடுகளின் வாசல் நிலைகளில் மஞ்சள் கலரில் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அதனால், மஞ்சள் பூசும் பழக்கத்தின் பலன் கிடைக்கவே போவதில்லை. எனவேதான் எந்தப் பழக்கம் என்றாலும் ஏன்.. எதற்கு என்று கேட்டுப் பழக வேண்டும். இந்தக் கதையிலும் செழியனுக்கு புதிய பழக்கம் ஒன்றை ஒருவர் பழக்க நினைக்கிறார். அது என்ன… எதற்காக… செழியனின் அம்மா அந்தப் பழக்கத்திற்கு சம்மதம் சொன்னாரா என்பதைத் தெரிந்துகொள்வோம்.
🔴 இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளங்களை எப்படி அவர்களது முன்னோர்கள் கடத்துகிறார்கள், அதில் இருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பதைப்பற்றி சொல்லும் சிறு புத்தகம்.
🔴 திங்கள் கிழமையில் ஆரம்பித்து வெள்ளிக்கிழமையில் முடிகிறது... நிஜத்தில் நாம் பள்ளி சென்று வீடு திரும்பும் போது அன்று நடந்த அனைத்துமே ஒரு பெருங்கதை தான்... அதில் எதார்த்தமும் இருக்கும் சில தினிப்புகளும் இருக்கும், காயங்களும் இருக்கும் நம்மை கவர்ந்தவைகளும் இருக்கும், எதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது அவர் அவர் விருப்பம் தான் ஆனால் ஒரு சில சமூகத்தினர் கட்டமைக்க நினைக்கும் விசயங்களை பிள்ளைகள் எடுத்துகொள்ளவே கூடாது.
🔴 அவன் எனக்கு கீழ எப்படி இருக்க முடியும்..? அவன் என்ன விட நல்லா படிக்கிறவன் தானே என செழியன் அவனது அம்மாவிடம் கேட்பான்... அதற்கு அம்மா "அப்போ உன்ன விட கம்மியா படிச்சா அவன் உனக்கு கீழனு நினச்சுப்பியா..?" என்று எதிர் கேள்வி வரும்... செழியன் சொல்வான் ஒரு பதில்... 🤍
பத்துநிமிடத்தில் வாசித்து விடலாம் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுங்கள் அல்லது வாசித்துக்காட்டுங்கள்.
குழந்தைகளுக்கு எந்த பேதமும் தெரியாது அதை ஊட்டி வளர்ப்பது பிற்போக்குத் தனம் நிறைந்த ஒருசில பெரியவர்கள் தான் என்பதை உணர்த்தும் கதை! வளரிளம் பருவக் குழந்தைகள் நிச்சயம் வாசிக்க வேண்டிய குட்டிக் கதை இது!
இந்தியா என்னும் சாதிய சமூகத்தில் சாதிய பிரச்சனைகளை சிக்கல்களை பேசாமல் என்ன முன்னேற்றம் தான் பெற்றிட முடியும்? குழந்தைகள் குறியீடுகள் போல் அதிக சிக்கல் இல்லாது போல நுழையும் விளையும் பயிரை விழுங்கிடும் சாதியத்தை இத்தகைய நூல்கள் எளிதாக ஆனால் ஆழமாக பேசுகின்றன. அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
சில படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது முன் காணத்தவறியவை கண்ணிற்கும் கருத்திற்கும் புலப்படும். புத்தகமும் கதையும் அப்படியே. பெரிதும் பேசப்பட வேண்டிய இந்தக் கயிறு நூலில் இம்முறை என் நெஞ்சில் பட்டவை இப்பதிவில்
இந்நூல் படிக்கும் சிறார் மனதில் எழக்கூடிய சிந்தனைகள்:
புத்தக அறை என்று செழியனின் வீட்டில் ஒரு தனி அறை உள்ளதே
கதை சொல்லவும் நடித்துக் காட்டவும் செழியன் வீட்டிலே பாட்டி அவர்களோடு இருக்கிறாரே
உயர்வு தாழ்வு மேலே கீழே எனப் பெரியவர்கள் எதை வைத்துப் பேசுகிறார்கள்? ஏன்?
நாம் தப்பே செய்யாத பொழுதும் ஏன் சில வேளை நாம் கேட்கும் சில கேள்விக்குப் பெரியவர்கள் நம்மேல் சினம் கொள்கிறார்கள்?
நாம் அதற்கு அஞ்சுதல் சரியா?
எனப் பலவாறு படிக்கும் சிறாரைச் சிந்திக்க வைக்கும் நூலிது. இவற்றிற்கெல்லாம் விடையறிந்து வைத்திருக்க வேண்டியது பெரியவர்களின் கடமை
அதைவிட முதன்மையான கடமை இவற்றில் பாதி நம் பிழையால் அவர்களின் பிஞ்சு உள்ளத்தில் எழும் வினா என உணர்ந்து அறம் தவறாமல் நடக்க வேண்டியது. நம் பிழையால் தாக்கப்படாமல் இருக்கச் சிறுவர்களைத் தெளிந்த அறிவுடன் இருக்கச் சொல்ல வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிற்பது வெட்கத்திற்குரியது
12 அகவைக்கு மேற்பட்டோர்க்கான இக்கதையை அச்சிறுவர்களுக்குக் கூறியும் படிக்க வைத்தும் அவ்வப்போது மீண்டும் மீண்டும் கூறச் சொல்லிப் பெரியவர்கள் கேட்டுக் கருத்தில் கொள்ள வேண்டும்
கதை மாந்தர் பெயர் முதல் அனைத்துமே சிந்தித்து வைக்கப்பட்டவை என்பதைப் பெரியோர் இக்கதை படிக்கையில் உணர வேண்டும்
Comedy is a serious business என்பது போல் சிறார் கதை எழுதுவதென்பது எளிதானதன்று
சிங்கிமங்கி போன்ற கேளிக்கைப் பெயர் கொண்ட கதையாயினும் கயிறு போல் சமூகம் பற்றிய கதையாயினும் மிகுந்த பொறுப்புடனும் தவறாத கவனத்துடனும் இயங்க வேண்டிய களம் இது. இவற்றிலிருந்து சற்றும் பிசகாமல் அமைந்த படைப்பே இந்தக் கயிறு
வளரிளம் பருவத்தினருக்குப் பரிசளிக்க ஏற்ற நூல் இது. சிறு பிள்ளைகள் இருக்கும் வீட்டிற்கு விளையாட்டுப் பொருளும் தின்பண்டமும் வாங்கிச் செல்வது போல் புத்தகமும் வாங்கிச் செல்லும் பழக்கம் வளர்ந்து பெருக வேண்டும்
செழியனின் அன்னை போல் பெற்றோர் விழிப்புடனும் மிகுந்த பொறுமையுடனும் தம் பிள்ளையின் மனப்போக்கை அறிந்து வாழ்ந்து காட்டி வழிநடத்த வேண்டியது காலத்தின் தேவை. நம் பொறுப்புணர்ந்து செயல்படுவோம்
செழியன் வீடு போல் புத்தக அறை அமைக்கும் கனவும் செயலும் பெருகுக. கையில் கயிறு கட்டும் பழக்கம் விடுத்து நூல் கொண்டு கட்டுவோம் நம் எதிர்கால உலகை
'கயிறு' இந்த சிறுகதை புத்தகம் நான் இந்த 2025 சென்னை புத்தகக் கண்காட்சியில் சீர் வாசகர் வட்டத்தில் புத்தகம் வாங்கிய போது இலவசமாக இந்த புத்தகத்தின் கொடுத்தனர்.
புத்தகம் என்னவோ 16 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறியதுதான் ஆனால் இதில் கூறியிருக்கும் கருத்து மிக மிக பெரியது.
பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி என்னும் விஷத்தை பல இடங்களில் பலர் புகுத்துகின்றனர் அது அறவே கூடாது. படிக்கும் மாணவர்கள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்று தான் அரசு ஒரே மாதிரியான சீருடை வழங்குகிறது அப்பொழுதும் சில கொடிய விஷமிகள் தன் சுய ஜாதிப்பற்றின் வெளிப்பாடாக மாணவர்களின் கைகளில் தங்களுடைய ஜாதியின் அடையாளமாக கயிறுகளை கட்டுகின்றனர் இது ஒரு மிக பெரிய கொடூரமான செயல். இந்த கயிறு கட்டும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை தான் இது.
சிறுபிள்ளை கூட படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு மிக எளிமையாக இக்கதையை எழுத்தாளர் எழுதியுள்ளார்.
செழியன்,வளர்மதி என்னும் ஒரு ஏழாம் வகுப்பு படிக்கும் மகனுக்கும் அவன் தாய்க்கும் இடையே ஆன உரையாடல்கள் மூலம் மிகச் சிறப்பாக ஜாதி ஒழிப்பை பற்றி எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் அழகாக இச்சிறுகதையை எழுதியுள்ளார். இந்த சிறுகதை புத்தகம் அனைவரிடமும் இருக்க வேண்டும்.
குடும்பங்களில் கிடைக்கும் அறிவும் சமூகத்திலிருந்து பெறும் தகவல்களும் சிறார்கள் கேள்விகள் கேட்டு அறிவியல் முறையில் சுய அறிவை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களை உருவாக்குவது பெற்றோரின் முக்கியப் பொறுப்பாகும்.