ஒருவரிடமும் அனுசரித்துப் போக மாட்டேன் அனைத்தும் தன்னிஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்பவர்களை அன்பால் திருத்துவது கடினம்.
திறமைகளை வெளிக் கொண்டுவர பல நேரங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் உதாசீனமே தூண்டுகோலாகிறது.
கல்லூரி தோழனான கிருஷ்ணா தன்னை விரும்பினாலும் அவன் குடும்பச் சூழல் அதை வெளிப்படுத்த அனுமதிக்காது என்பதைத் தெரிந்த ரதி,அவனுக்காக ஏதாவது செய்து முகத்தில் புன்னகையைக் கொண்டுவர முடிவெடுக்கிறாள்.
தந்தை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்காகவே அத்தை திருமணப் பேச்சை எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தாலும் பெற்றவர்கள் முடிவாக எதுவும் பேசாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதை விரும்பாத ரதி மற்றும் சுபா.தங்கையே என்றாலும் படிப்பு இல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் மகனைப் பெற்றதால் அவர்கள் வீட்டில் பெண் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்ட தந்தையால் ரதியின் காதலுக்குத் தடையேதும் இல்லாமல் போகிறது.
இருக்கும் அனைத்தையும் வழித்துக் கொடுத்து ரோகிணியைத் திருமணம் செய்து கொடுத்த சில மாதங்களிலே பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீட்டோட வந்தவளால் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் கிருஷ்ணாவின் குடும்பம்.
ரோகிணியின் புகுந்த வீட்டு நல்ல மனிதர்களால் கிருஷ்ணா-ரதியின் திருமணம் நடந்தேறுவதுடன் கிருஷ்ணா வீட்டின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.
தன் மாமா தங்களை ஒதுக்கியதற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட பரத் தனக்கென ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொண்டு உழைப்பதால் பெண் தராத தன் அண்ணன் மீது இருந்த கோபத்தை முழுவதும் துடைத்து விடுகிறாள் சிந்தாமணி.உழைப்புப் பக்கம் திரும்பிய அத்தைக் குடும்பத்தில் வாழ விரும்பும் ரதியின் தங்கை சுபாவை மனதார கட்டிக் கொடுக்கின்றனர் அவளின் பெற்றோர்.
எந்நேரமும் ஆங்காரமாகக் கத்திக் கொண்டிருக்கும் ரோகிணியை வீட்டுக்கு வந்த மருமகளான ரதி தன் குணத்தை மாற்றிக் கொண்டு சொல்லம்புகளால் காயப்படுத்தி ஒருவழியாக அவளை மாமியார் வீட்டிற்கு விருப்பத்துடன் செல்ல வழி செய்கிறாள்.