திரையும் திருக்குவளையும்: கலைஞர் மு.கருணாநிதி, தாம் ஈடுபட்ட அனைத்திலுமே முன்னணியில் இருந்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு என்று திரைத்துறையில் அவர் மேற்கொண்ட பணிகள் ஒவ்வொன்றிலும், உரிய கவனத்தையும் வெற்றியையும் பெற்றிருக்கிறார். குறிப்பாக இங்கே நாம் கவனிக்க வேண்டியது, திரைத்துறையை அவர் தமது லௌகீகத் தேவைகளுக்காகக் கைகொள்ளவில்லை என்பதுதான். தான் சார்ந்திருந்த கட்சியையும் கொள்கையையும் வளர்த்தெடுக்கவே திரைத்துறையைப் பயன்படுத்தியிருக்கிறார். தனிப்பட்ட ஆற்றல்களால் திரைத்துறையில் காலூன்றிய அவர், அதன்மூலம் கிடைத்த செல்வாக்கையும் புகழையும் அரசியலுக்கான அஸ்திவாரமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார். தம்மை ஓர் அரசியல் தலைவராக வரித்துக்கொள்ளவும், அதன் விளைவாகக் கிடைக்கக்கூடிய சாதகங்களை மேலதிக அரசியல் முயற்சிகளுக்குப் பயன்படுத்தவுமே அவர் விரும்பியிருக்கிறார். சமூக நீதிக் கொள்கையில் தமக்கிருந்த பற்றை வெளிப்படுத்தவே அவர் திரைவசனங்களையும் பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஏனைய படைப்பாளிகளுக்குக் கிடைக்காத அந்தஸ்தும் மரியாதையும் அதனாலேயே அவருக்குக் கிடைத்திருக்கின்றன. குறிக்கோள்களை வரையறுத்து, அதற்கேற்ப செயல்களையும் பாதைகளையும் அமைத்துக்கொண்டவராக அவரைக் கருதலாம். பொருளாதார வசதியில்லாத மிக எளிய இசைக் குடும்பத்தில் பிறந்த அவர், தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை இருந்திருக்கிறார். அகில இந்திய ரீதியில் அவருடைய அரசியல் பங்களிப்புகள் அதிகம். திருவாரூரை அடுத்த திருக்குவளையில் பிறந்த அவருக்குத் தமிழும் இலக்கியமுமே அத்தகைய உயரங்களைத் தந்திருக்கின்றன. திரை வசனங்களிலும் பாடல்களிலும் அவர் செய்திருக்கும் சாதனைகளை முழுமையாக நம்மால் பட்டியலிட முடியாது.திராவிட இயக்கக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் வாய்ப்பாகவே அவற்றைக் கருதி, கதையும் வசனமும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சனாதனிகள் நிறைந்த திரைத்துறையில் நாத்திகக் கருத்துகளைத் துணிச்சலாக எழுதக் கூடியவராகவும் அவரே விளங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் எதை எழுதினாலும் ஏற்கும் நிலைக்கு அவர்களும் தள்ளப்பட்டிருக்கின்றனர். வியாபார சினிமாவின் சூட்சமங்கள் வெற்றியிலும் அதுதரும் லாபத்திலுமே இயங்குவதைச் சொல்ல வேண்டியதில்லை. தமிழ்த் திரை வசனத்தின் உச்சமென்று சொல்லக்கூடிய பராசக்தியைத் தவிர்த்துவிட்டு, அவருடைய வரலாற்றை எழுத முடியாது என்பதல்ல. தமிழ்த்திரை வரலாற்றையே அறியமுடியாது என்பதுதான் உண்மை. “பராசக்தி” திரைப்படத்திற்காக இந்தி மெட்டைத் தழுவி இசையமைப்பாளர் சுதர்சனம் ஒரு பாடலை அமைத்திருக்கிறார். அமைக்கப்பட்ட அந்தப் பாடலுக்கு இரண்டொரு பாடலாசிரியர்கள் வரிகளையும் எழுதிக்கொடுத்திருக்கின்றனர். ஆனாலும், அவ்வரிகளில் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்குத் திருப்தி ஏற்படவில்லை. அப்போது தற்செயலாக அங்கேயிருந்த கலைஞர் “பூமாலை நீயே / புழுதி மண் மேலே” என்ற ஆரம்பவரியைக் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லிய அந்த வரி அனைவரையும் ஈர்த்துவிட, அடுத்தடுத்த வரிகளை அங்கேயே எழுதித் தந்திருக்கிறார். பிறரால் முடியாமல் போனதை கலைஞர் முடித்துக்காட்டினார் என்பது ஒருபுறமிருந்தாலும், சூழலுக்கேற்ப சமயோசிதமாக அவர் சிந்திக்கக் கூடியராக இருந்திருக்கிறார் என்பதே கவனிக்கத் தக்கது. வசனத்தைப்போல பாடலை உடனுக்குடன் எழுதுவது சாத்தியமில்லை. ஏனெனில், பாடலைப் பொறுத்தவரை, அது மெட்டிற்குப் பொருந்தவேண்டும். அமைக்கப்பட்ட மெட்டிற்கு ஏற்ப வார்த்தைகளைப் போட அனுபவஸ்தர்களே திணறும்போது, அதைக் கலைஞர் எங்கிருந்து படித்துக்கொண்டார் என்பது ஆராய்ச்சிக்குரியது. அவருடைய திரை இலக்கியச் செழுமையையும் வாழ்வியல் சவால்களையும்அறிந்துகொள்ள இந்நூல் உதவும். ஆளுமைகள் வரிசை நூலில் இருபத்து ஏழாவது நூலாக இந்நூல் வருகிறது. இந்நூலை எழுதியுள்ள கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். இதுவரை பத்து கவிதைத்தொகுப்புகளும் பதினான்கு கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்.
Yugabharathi is a Tamil poet, music director, and lyricist. His birth name was "Santhanam Desan" and he was known as "Santhanam" by his family and friends. During the early 1990s when he began writing poems for magazines he started using the pen name "Yugabharathi" in honour of the great Tamil poet Subramanya Bharathi, commonly known as Mahakavi Bharithiyar.
Debuting in the film Aanandham with lyrics for the song "Pallankuzhiyin vattam parthaen", he has become a successful lyricist penning more than 1000 songs.