ஆசிரியர்.
சாண்டில்யன்
கதாபாத்திரங்கள்
அபராஜிதன், கார்குழலி,.மாதவி,இலங்காபுரன், வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், சிவானந்த அடிகளார், மழவராயன், காரி, கருணாகர தேவன், ஜகத்விசயன், பல்லவராயன்.
கதை நடைபெறும் வரலாற்று பகுதிகள்:
மதுரை, கன்னி மாடம், மேலைமங்கலம் மற்றும் கூடல்
நாவலின் தன்மை :
வரலாற்று புதினம்.
கதை:
பாண்டியர்களின் தாயாதிச்சண்டை நடைபெற்ற காலமான 12 ம் நூற்றாண்டில் நிகழும் கதை இது.
மதுரையை பராக்கிர பாண்டியனும், நெல்லையை குலசேகர பாண்டியனும் இரண்டு பட்டுக்கிடக்கின்ற பாண்டிய நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.
தயாதிச்சண்டை மற்றும் மனஸ்தாபம் காரணமாக குலசேகர பாண்டியன், மதுரை மீது படையெடுக்கிறான். பராக்கிரம பாண்டியன் படை உதவி வேண்டி இலங்கை அரசன் பராக்கிர பாகுவிடம் கேட்க அவன் தண்ட நாயகனான இலங்காபுரனை அனுப்புகிறான். இலங்காபுரன் மதுரை வருவதற்குள் குலசேகர பாண்டியன் மதுரையை கைப்பபற்றி பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவியையும் கொன்று விடுகிறான். பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியன் குலசேகரனிடமிருந்து தப்பி மலைநாட்டில் தஞ்சமடைகிறான்.பெரும் படையுடன் மதுரை வரும் இலங்காபுரன் குலசேகரனை விரட்டி பராக்கிரமனின் மகன் வீரபாண்டியனை பாண்டிய மன்னனாக்குகிறான். வீரபாண்டியனை ஒரு கைப்பொம்மை போலாக்கி பாண்டிய நாட்டை சிங்களத்தின் ஒரு பகுதியாக்க இலாங்காபுரன் திட்டமிடுகிறான். வீரபாண்டியனை மதுவுக்கும், தன்மருமகளும் பேரழகியுமான மாதவியுடன் பழகவிட்டு பாண்டிய நாட்டை மறைமுகமாக சிங்கள ஆட்சிக்கு உட்படுத்துகிறான்.
பாண்டிநாடு இலங்காபுரனின் மறைமுக சிங்கள ஆட்சியில் படாதபாடு படுகிறது. தமிழர்கள் அடிமைகளாக இலங்கையிலுள்ள புத்த விகாரைகளுக்கு அனுப்பப்பபடுகிறார்கள். வயல்கள் எரித்து அழிக்கப்படுகின்றன. பாண்டியர்களின் தங்கத்தைக் கொண்டு இலங்கை காசுகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது.
பாண்டிய சேனாதிபதியும், வீரனுமாகிய அபராஜிதன் இதையெல்லாம் கண்டு உள்ளம் கொதிக்கிறான். சிங்களகளின் கைப்பொம்மையாய் மது,மாது ஆகிய இரண்டிலும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் வீரபாண்டியனுக்கு எதிராக சதி செய்து தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான். பாண்டிய நாடு இலங்கையிடம் அடிமைப்பட்டிருக்கும் நிலைகண்டு சோழர்களும் கொதித்து எழுகிறார்கள். தங்களிடம் ஆதரவு கேட்டு நிற்கும், விரட்டப்பட்ட இன்னொருபாண்டிய மன்னனாகிய குலசேகரனுக்கு உதவி செய்து பாண்டியநாட்டை சோழ நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அந்நாட்டின் படைத்தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
இந்நிலையில் பாண்டிய நாட்டு எல்லையில் இருக்கும், மழவராயன் என்னும் சிற்றரசனின் ஆட்சிக்குட்பட்ட மேலைமங்கல சிற்றரசும், அதற்குட்பட்ட கன்னிமாட கோட்டையும், மழவராயன் மகளும் பேர ழகியுமான கார்குழலியும், இந்த அரசியல் சூழ்நிலையில் சிக்குகிரார்கள்.
வீரபாண்டியன் கார்குழலியை மணந்து மழவராயனின் உதவி பெற்று, இருவரும் இணைந்து படையெடுத்து இலங்காபுரனை கொல்வது. அல்லது குலசேகர பாண்டியனின் மகனான விக்கிரம பாண்டியனுக்கு கார்குழலியை மணமுடித்து சோழர்களின் உதவியுடன் இலங்காபுரனை விரட்டுவது, போன்ற யோசனைகள் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை கருதி மழவராயன் முன் வைக்கப்படுகின்றன. இதில் மழவராயன் வீரபாண்டியனுக்கு மகள் கார்குழலியை மணம் செய்ய எண்ணுகிறான்.
ஆனால் கார்குழலியின் மனமோ பாண்டிய சேனாதிபதியான அபராஜிதனையே நாடுகிறது. அவனை உயிருக்குயிராக விரும்புகிறாள் கார்குழலி. அவளை சிறிய வயதிலிருந்து வளர்த்த சிவானந்த அடிளாரும் உணர்ந்து கொள்கிறார். அபராஜிதனும் கார்குழலியின் காதலை நன்கு உணர்ந்து, அவளை பலவந்தமாக மணமுடிக்க கன்னிமாடத்திற்கு பெரும் படையுடன் வரும் பாண்டிய மன்னன் வீரபாண்டினிடமிருந்தும், தந்திரமாக அடைய முயலும் விக்கிரம பாண்டியனிடமிருந்தும் கார்குழலியை காப்பாற்றுகி ன்றான்.
பின் அபராஜிதன் பாண்டிய நாட்டுக்குள்ளே புரட்சிப்படை தோற்றுவித்து சோழர்கள் உதவியுடன் இலங்காபுரனையும், பெரும்படையுடன் கூடல் நகருக்கு வரும் இன்னொரு இலங்கை சேனாதிபதி ஜகத்விஜயனையும் கொன்று அவர்கள் தலைகளை கழுகுக்கு இரையாக்குகிறான். பின்னர் கார்குழலியை மணந்து கொண்டு கன்னிமாடத்தில் புரட்சிப்படையுடன் பாண்டியநாடு மீண்டும் இலங்கையிடம் அடிமையாகதபடி கன்னிமாடத்தை ஒரு சிறந்த காவற்கோட்டையாக்குகி றான்.
என் கருத்து..
அருமையான புதினம். தனக்கே உரித்தான பாணியிலும், கதை சொல்லும் விதத்திலும் வாசகர்களை 12 ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார் சாண்டில்யன் என்றால் மிகையாகாது.
புதினத்தின் விறுவிறுப்பான பகுதி என்றால் கன்னி மாடக் கோட்டையில் இடம் பெரும் சம்பவங்களை சொல்லலாம். அபராஜிதன்-கார்குழலி சந்திப்பு, கோட்டையிலுள்ள ரகசிய வழிகளை அபராஜிதன் கண்டுபிடிப்பது, கன்னிமாடத்தை முற்றுகை இட்ட வீரபாண்டியனையும் அவனது வீரர்களையும் தந்திரம் வீரம் இணைந்து அபராஜிதன் விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள், ஏற்கனவே விறு விறுப்பான நாவலுக்கு மேலும் விறு விறுப்பு ஊட்டுகிறது.
வீரபாண்டியன்,மழவராயன்,சோழ பல்லவராயர்கள், போன்ற உண்மைக்கதாபாத்திரங்களுடன், அபராஜிதன், கார்குழலி, மாதவி போன்ற கற்பனை பாத்திரங்களை சரியானபடி உலவவிட்டு விருந்து படைக்கிறார் சாண்டில்யன்.
கன்னி மாடம்---அமோகம்