மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன. அருகிப்போன உயிர்களையும் எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருள்களையும் அவற்றின் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு சேர்த்து உருவாக்கும் சிறு பிரபஞ்சமாக இருக்கின்றன எனது கவிதைகள்.
1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.