நகர்புறங்களில் வாழும் மனிதர்களுக்காகவே எழுதப்பட்ட சிறுகதை தொகுப்புகள். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களை மையமாக வைத்து ஆசிரியர் தனது அனுபவங்களின் மூலமாக நன்று முயற்சிகள் கொண்டு அவர்களின் போராட்டங்கள் பலவற்றை பக்கங்களுக்கிடையில் உயிர் பெற வைக்கிறார். காட்டுக்குடி மக்கள் தவிர அங்கு நிம்மதியாக வாழ முயர்ச்சிக்கும் ஏனைய விலங்குகளின் அவல நிலையினையும் சில கதைகள் பேசுகிறது.
"நாம சொல்லுறத ஆனெ கூட புரிஞ்சுக்குது, ஆனா பாரெஸ்ட்காரங்க புரிஞ்சுக்க மாட்டீங்கராங்க."
கோடைக்கால நேரங்களில் சுற்றுலா செல்லும் நமக்கு அங்கே வாழும் உயிர்களின் போராட்டங்கள் பற்றிய சிறிது நேரம் யோசிக்க இது போன்ற கதைகள் உதவலாம்.
"ஆனெ இருக்கு, புலி இருக்குனு நம்மல காட்ட விட்டு தொரத்த பாக்குற இவீங்க கண்ணுக்கு, எஸ்டேட்டு, ரிசார்டு எல்லா தெரியாது. நம்ம கிட்ட தா இந்த வீராப்பு எல்லா."
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "Animal Farm" தொனியில் ஒரு கதையும் உள்ளது இந்திய நாட்டின் வரலாறு பாடுகிறது - சுதந்திர மாயையில் தொடங்கி கொரோனா காலங்களில் கை தட்டிய பெருமைகள் வரை.
நகர்வாழ் மனிதர்களாலும், அதிகாரிகளாலும், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் காட்டு விலங்குகள் படும் அவஸ்தைகளை சிறுகதைகள் மூலமாக மிக ஆழமாக பதிவிடுகிறார் பிரசாந்த் வே. செய்யும் தவறுகள் எல்லாம் படித்த நகர்புற மக்கள் மீதும், அரசாங்கம் மீதும் இருக்க, காட்டு வாழ் மக்களையும், காட்டு விலங்குகளையுமே காட்டை அழிக்கும் குற்றவாளிகளாய் காண்பிக்கும் உண்மையை அறியும் போது வேதைனையே மிஞ்சுகிறது. குறிப்பாக "காட்டு மாதா கி ஜே" சிறுகதை காட்டின் அழிவையும், அதோடு இணைந்து நாட்டின் அரசியல் அவலங்களையும் நெற்றி பொட்டில் அடித்தார் போல் கூறுகிறது. "வலசை தொலைத்த யானை" சிறுகதையில் சுயநலமாக மனிதர்கள் அழித்த தன் அடையாளத்தை தேடி அலையும் காப்பக யானை இறுதியில் தோற்று வேறு வழியில்லாமல் மனிதனிடமே திரும்பும் அவலம் நெஞ்சைப் பிழிகிறது. மனிதமே இல்லாத மனிதர்களை நினைத்து வெட்கப்பட வைக்கிறது.
நல்ல எழுத்து நடை, எளிமையான உரையாடல்கள், ஆழமான கருத்துக் கள்.. நல்ல சமூக நலம் சார்ந்த வாசிப்பு.