நிஜச் சரடும் கற்பனைச் சரடும் ஆண் சமூகம், பெண்களுக்கு இரண்டு முகங்களை வழங்கியது. அதைத்தான் அவர்கள் சூட வேண்டும். ஒன்று புனித முகம். இன்னொன்று போக முகம். தாய் வழிச் சமூகத்தின் வீழ்ச்சியில் இந்தப் பரிசளிப்பு நிகழ்ந்தது. விவசாயம் வளர்ந்தபோதும் இயந்திரங்கள் பெருகியபோதும் சினிமா வந்தபோதும் சாஃப்ட்வேர் வந்தபோதும் இந்த இரண்டு முகங்கள் பெண்களுக்கு தேவைக்கு ஏற்ப அணிவிக்கப்பட்டன. அழகை மூலதனமாகக் கொண்ட சினிமாவில் இந்த முகங்களுக்கு மிகை அலங்காரம் இருப்பது இயற்கைதான். பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் சினிமா நிருபராக இருந்தேன். அது, 90-கள். இந்த நாவலும் கிட்டத்தட்ட அந்தக் காலக்கட்டத்தில் நடப்பதாகத்தான் எழுதியிருக்கிறேன்.
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.