எனக்கு இது அசோகமித்திரன் அவர்களின் முதல் புத்தகம். ஆகயாத் தாமரை எப்படி மலரப் போகிறது என்ற ஒரு வித எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். மிக தெளிவான நீரோட்டம் போல கதையின் நடை இருந்தது. மிக சில கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து ஒரு முழு நீளக்கதையை சிறிது கூட தொய்வின்றி நகர்த்தி செல்கிறார் அசோகமித்திரன் அவர்கள்.
ரகுநாதன், ராஜப்பா, மாலதி, முன்சாமி என்று நகர்கிறது கதை. 1980ல் வந்த முதல் பாதிப்பு இன்றும் கூட நடக்கும் நிகழ்வுகளை சரியாக எடுத்து சொல்கிறது. சீருடைக்காரர்கள் என்று புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருப்பவர்கள் எப்படி மனிதர்களை தரசுகளில் எப்போதும் நிறுத்திப் பார்க்கிறார்கள், உடைகள் எப்படி ஒரு மனிதனை ஓரிடத்தில் அவனை அங்கமாக்குகிறது அல்லது தூக்கி தூர விட்டெறிகிறது என்று பல கோணங்களில் நகர்கிறது கதை.
25 அகவை மதிக்கத்தக்க இளைஞன் ரகுநாதன். நான்கு நாட்கள் விடுப்பும் அதற்கு பிறகான மாற்றங்களும் தான் இந்த ஆகாயத்தாமரை. ஆகாயத்தாமரை என்று ஓர் மலர் இருக்கும் போதிலும், ஆகாயத்தில் தாமரை மலர்ந்து இருக்குமா என்பது போன்ற கற்பனை தான் இந்த நாவலின் சாராம்சம் என்று எனக்குத் தோன்றியது. " என் வரைக்கும் சுதந்திரம் ஒரு ஆகாயத் தாமரை மாதிரி. அதை சொல்றப்போ ஏதோ நிஜமானது மாதிரி இருக்கு. ஆனா அதுக்கு ஆதாரம் கிடையாது. அது சாத்தியமானது கிடையாது" என்று ராஜப்பா ஓரிடத்தில் ரகுநாதனிடம் சொல்லுவார்.
ரகுநாதனின் கோபங்கள் இன்றளவும் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஓர் இளைஞனுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அப்படியே வைத்துக் கொள்ள இந்த சமூகமும் ஒரு வகையில் ஊன்றுகோலாகவே பரிணமிக்கிறது. ஆனால் சீருடைக்காரர்கள் (Security) அவர்களுது வேலையைப் பார்க்கிறார்கள் என்று யோசித்தால், வேறொரு பரிமாண மாற்றம் கிடைக்கிறது. உடைகளை வைத்து நான் யார் என்று முடிவு செயகின்ற சமூகம் தானே இன்றைக்கும் இருக்கிறது. இருப்பினும், அதை தாண்டி உடைகளை பொருத்தி பார்த்து இந்த உடைக்கும் இவனுக்கும் சமபந்தம் இல்லை என்று முடிவுக்கு வரும் சீருடைக்காரர்கள் தான் ரகுநாதனை மேலும் கோபத்திற்கு ஆளாக்குகிறார்கள்.
எளிமையான மனித மனதின் போராட்டத்தை, அலுவலகத்தில், வீட்டில், சாலையில், நண்பர்களிடத்தில் என்று மெல்ல எட்டி பார்த்து காட்டி செல்கிறது ஆகாயத் தாமரை. படித்துப் பாருங்கள்....