பாலகாண்டம்
(“நா.முத்துகுமார் கட்டுரைகள்” தொகுப்பு)
15 கட்டுரைகளை கொண்டுள்ளது….3 லிருந்து 5 பக்கங்களுக்கு மிகாத கட்டுரைகள்.
தனது பாலபிராயத்திலிருந்து கல்லூரி, பாடலாசிரியர் ஆனது வரை தான் சந்தித்த நபர்களை பற்றி, அவர்களிடமிருந்து பெற்ற அனுபவத்தை பற்றி, தனது ஞாபக பெட்டகத்திலிருந்தெடுத்து, கவிதைநடையி்ல் கட்டுரைகளாக தீட்டியிருக்கிறார், திரு நா. முத்துகுமார்.
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் குறு முன்னுரைப் போல., நாலைந்து வரிக் கவிதையோ, சொற்றொடரோ அதை எழுதியவரின் பெயருடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
1. "இரண்டாம் தொப்புள் கொடி" - தனது நண்பனுக்கும் அவரது அக்காவுக்குமான பாசப்பிணைப்பை கூறுகிறது இக்கட்டுரை
2. "தாஜமஹால்தாசன்" - காதல் கவிதைகள் கிறுக்கும் கல்லூரியில் சீனியர் மாணவர் பற்றி.
3. "(a+b)? = a?+b?+2ab" - தனது கணக்கு ஆசிரியர் பற்றி.
4. "தேடித் தேடி தொலைந்தவன்" - பள்ளிப்பருவத்திலியே மதுஒழிப்பு வேண்டும் எனக் கூறிய நண்பனைப் பற்றி.
5. "கேளுங்கள் கொடுக்கப்படாது" - இலக்கிய கூட்டங்களில் கேள்வி கேட்ட மதிமாறன் எனும் குடும்பஸ்தனை பற்றி.
6. "எழுத்து, பொருள், சொல்" - அனைவருக்கும் கேலியாக பெயர் வைக்கும் கல்லூரி நண்பன் கண்ணன் பற்றி.
7. "வெந்து தணிந்த காடு" - சீட்டு பிடிக்கும் வீட்டு பரிமளா அக்கா, தனது கணவனின் கொடுமை தாளாது, அவனை கொன்றது பற்றி.
8. "ஒரு ரூபாய் ரகசியம்" - தனது தந்தையின் நட்பா, சொந்தமா எனப் புரிந்தகொள்ளமுடியாத, லட்சுமணன். அவர் 'தினமும் ஒரு ரூபாய் வாங்கும் உறவு' எனப் புரிந்துகொண்டது பற்றி.
9. "பவழ நாட்டு இளவரசன்" - தனது ஊர் திருவிழாவில் கூத்துக்கட்டும் கணபதி வாத்தியார், ராஜபார்ட் கிருஷ்ணன் பற்றி.
10. "அஞ்சு ரூபா டாக்டர்" - தனது ஊர் மருத்துவர் பற்றி.
11. "காலம் எழுதும் கடிதம்" - தனது பால்யத்தில் காதல் தூதுவனாக, காதலருக்கு கடித போக்குவரத்துக்கு பயன்பட்டது பற்றி.
12. "நிலா மிதக்கும் பள்ளங்கள்" - தனது ஊரில் உள்ள கோவிந்தசாமி எனும், ஆங்கிலம் பேசும் ஜீனியஸ் தாத்தா பற்றி.
13. "கடவுளை கண்ட இடங்கள்" - கடவுள் மற்றும் பொதுவுடைமை மீதான தனது புரிதல் பற்றி.
14. "வளர்சிதை மாற்றம்" - பால்யத்தில் தாம் வளர்த்த நாய், பூனை, கிளி, நரி, பொன்வண்டு என பல அஃறிணைகள் பற்றி
15. "மாய சிலேட்டு பலகை" - மனம் எனும் மாய சிலேட்டு பலகை, தனது பால காண்டத்தை நினைவூட்டியதை பற்றி.
புத்தகத்திலிருந்து....
\
"காதலைக் காதல் என்றும் சொல்லலாம்!" - பூமா ஈஸ்வரமூர்த்தி
/
\
குழந்தைகள் , ஒவ்வொன்றுக்கும் புதுப்புது பெயர்களை கண்டுபிடிக்கிறார்கள் . எல்லா குழந்தைகளின் அகராதியிலும், "நாய்" என்றால் 'ஜூஜூ',... 'பறவை' என்றால் 'கீக்கி'! மொழி தோன்றுவதற்கு முந்தைய ஆதிவாசிக்கு, மரம் என்பது ஒரு சித்திரம். புலி என்பது ஒரு பயசித்திரம்.
/'
\
முதன்முதலில் ஒரு மரத்துக்கு 'மரம்' என்று பெயர் வைத்தவனுடைய கற்பனையின் பரவசம் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போயிற்று. மரத்தை மரமாக பார்க்காமல், மொழியறிந்த குழந்தைகள் மாமரமாகப் பார்க்கின்றன. உலகம் தன் இயந்திர கைகளால் ஒரு குழந்தையை சிறுவனாக மாற்றுகிறது. பின்னாட்களில் அந்த சிறுவன் மாமரத்தை கட்டிலாக பார்க்கிறபோது இளைஞன் ஆகிறான். கதவாக பார்க்கிறபோது குடும்பஸ்தன் ஆகிறான். வெட்டி எரிகிற போது வயோதிகன் ஆகிறான்.
/
\
'நம் சமூகம் தாய் வழி சமூகம் இனக் குழுவின் தலைவியாக பெண்ணே இருந்தாள்...' என்று ஆய்வுகள் சொல்கின்றன. வரலாற்றின் எந்த தருணத்தில், எந்த இடத்தில் பெண்ணின் கையில் இருந்து சிக்கிமுக்கிக் கல்லின் தீ பறிக்கப்பட்டு சமையலறையின் தீப்பெட்டி கொடுக்கப்பட்டதோ.. சிறு தெய்வங்களான பெண் கடவுள்கள் பின் தள்ளப்பட்டு ஆண் கடவுள்கள் முன்னிறுத்தப்பட்டனவோ... அந்த தினத்திலிருந்துதான் 'தியாகம்' என்னும் இரும்புக்கம்பிகளுக்குள் பெண்கள் தள்ளப்பட்டிருக்கக்கூடும்.
ஒவ்வொரு பெண்ணும் சமையல் உப்பிடமிருந்து விசுவாசத்தை கற்றுக்கொள்கின்றாள். வெங்காயத்திடமிருந்து கண்ணீரை பெற்றுக் கொள்கிறாள். இட்லித்தட்டுகளிலிருந்து வெந்து தணியவும், ஈர விறகுகளிடமிருந்து உள்ளுக்குள் புகையவும் புரிந்துகொள்கிறாள். ஒரு சில பெண்கள் மட்டுமே இவற்றையெல்லாம் தாண்டி மிளகாயிடமிருந்து காரத்தையும், கோபத்தையும் கற்றுக் க���ள்கிறார்கள்...
/
\
ஒரு ஐந்து நிமிடம் ஆழ்மனதை தொட்டுப் பார்த்து, என்னென்ன நினைக்கிறோமோ அவற்றையெல்லாம், ஒரு காகிதத்தில் எழுதி வைத்துப் பார்த்தால் நம்மிதே நமக்கு பயம் வந்துவிடும். வாழ்வின் ஆகச்சிறந்த புதிரை, மனமென்னும் கடலுக்குள் மீண்டும் மீண்டும் மோதி உடையும் அலைகளே தோற்றுவிக்கின்றன.
/
\
'கடவுளை மனதால் அடைவது அத்தனை எளிதல்ல. ஏனெனில் மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு! காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை!'
/
\
வேலையில்லாதவர்களின் பகலும்,நோயாளிகளின் இரவும் நீளமானவை. இருவரின் கடிகாரத்திலும் இடம் வலமாக ஆடும் பெண்டுளத்தில் ஒரு பக்கம் விரக்தியும், இன்னொரு பக்கம் வலியும், காலத்தை நகரவிடாமல் தடுக்கின்றன.
/
\
அஸ்தமன காலத்தில் சூரியன் தன் கதிர்களை வெளிர்ந்த நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாற்றிக் கொள்ளும். 'உச்சி வெயில் நேரத்தில் உலகெலாம் விரிந்து உக்கிரம் உமிழ்ந்த முகமா இது' என வியக்கும் அளவுக்கு தன் முகத்தை சாந்தமாக்கி கொள்ளும். 'புதிதாக இம்மண்ணில் பிறந்த புல் பூண்டுகளே! செடி, கொடிகளே! போய் வருகிறேன். உங்களுக்குள் என் வெப்பத்தையும், வானத்துக்குள் என் வண்ணங்களையும் விட்டுச் செல்கிறேன்' என்று விடைபெறும்.
/