புத்தகம் வாசிப்பதைப் பற்றி எதற்கு ஒரு புத்தகம்? குறிப்பாக அதை வாசிக்க முடிகிறவர்களுக்கு ஏன் எப்படி வாசிக்க வேண்டும் என ஏன் சொல்லித் தர வேண்டும்? இந்நூலை பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு, தத்துவம் சார்ந்த வாசிப்பு, உளவியல் சார்ந்த வாசிப்பு, புத்தகத் தேர்வு என ஐந்து பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். இது திட்டமிட்டு ஒரேயடியாக எழுதப்பட்டது அல்ல. மாறாக இது கடந்த பத்தாண்டுகளாக நான் வாசிப்பு எனும் தலைப்பில் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும் எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran வாங்கிய இடம்: சீரோ டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வாங்கிய தேதி : 02 மார்ச் 2022
வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் ஏன் வாசிக்க வேண்டும் என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன் அவர்களின் கட்டுரை தொகுப்பு. ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால் நமக்கு கடத்தியிருக்கிறார்.
எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் என்ற மலையாளதிரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட்டுரைகளை வாசித்தேன். அண்மையில் தனது உடல் இடையை குறைக்கும் பொருட்டு அவர் மேற்கொண்ட சில வாழ்வியல் முறைகளை அறிவியல் பூர்வமாகவும் பல அளவுறுகளை முன்வைத்து எழுதியதை ஓர் அளவு பின்பற்றி நானும் என் இடையை குறைத்தேன். ஆக வாசிப்பில் தொடங்கி இவரது எழுத்துகள் என்னை ஓர் செயல் வீரனாகவும் மாற்றியிருக்கிறது.
ஏன் வாசிக்க வேண்டும் புத்தகத்தில் ஒரு பக்கம் கூட ....ஏன் ஒரு வரி கூட சோடை போகவில்லை. அத்தனையும் அறிவின் முத்துக்கள். அதுவும் நாம் பெருமளவு அறியாத அறிவுப்பண்டங்களை சுவைத்தபோது இருந்த ருசி இன்னும் என் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. எனது நீண்ட நாள் கேள்விகான பதிலை நினைவுத் திறனும் வாசிப்பும் என்ற கட்டுரையில் காணமுடிந்தது. அசல் சிந்தனையாளருக்கான அனைத்து குணங்களும் இவரது எழுத்துக்களில் கண்டடையலாம். இலக்கிய வாசிப்பு என்ற இரண்டாம் பாகத்தில் இவர் யாருமே இதுவரை காணாத அல்லது உணராத வகையில் பல உளக்காட்சிகளை எனக்கு காண்பித்தபோது வியந்தேன். வாசிப்பது மூளையா மனமா என்ற ஒற்றை கட்டுரையிலேயே எனக்கு தெரிந்துவிட்டது இரண்டாம் பாகம் மிகவும் உக்கிரத்துடன் version 2.0 வாக மிளிர்கிறது என்று .
இந்த கட்டுரையில் நமக்கு கிடைக்கும் அனுமானங்களை கடப்பதே ஒரு தன்னினைவிழந்த நிலைக்கு சென்றது போலான அனுபவம். இதைத் தொடர்ந்து என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. ஆங்கிலத்தில் வாசிப்பது என்ற கட்டுரை மற்றும் ஒரு தலைசிறந்த (எல்லாமே நல்ல கட்டுரைதான்! ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல ) கட்டுரை. அயல் எழுத்தின் தாக்கம் நம் எழுத்தாளர்களின் எழுத்தின் மீது உண்டு என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார். உதாரணங்களை சுட்டிக்காட்டி சொற்றொடர்களின் வடிவத்தைக் கண்டுபிடித்து அந்த பாங்கு அவர்களின் எழுத்தை எப்படி தன சமகால எழுத்தாளர்களோடு தங்களை வேறு படுத்தியது என்பதையும் கச்சிதமாக சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் (கையும் களவுமாகப் பிடித்தார் என்றும் சொல்லலலாம் ) . உதாரணம்: "கையைத் தேடிக்கொண்டு தயங்காமல் தன் கையை நீட்டி குலுக்கினான் " என்ற சொற்றொடர் அமைப்பு ("Looking for the hand, he unhesitatingly extended his hand and shook it."). எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உரைகளில் வரும் சில வார்த்தைகளின் கட்டுமானத்தன்மையில் ஆங்கில தாக்கம் இருப்பதாக அவ்வப்போது உணர்ந்ததுண்டு. ஆனால் அபிலாஷ் அவர்களின் அவதானிப்பு மிக தீவிரமானதாக உள்ளது. தமிழர்கள் vs மலையாளிகள் என்ற கட்டுரையை மிகவும் ரசித்தேன். மறுபுறம் நாம் செல்லக்கூடிய பாதை மிகவும் தொலைதூரம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நான் இருப்பு உணர்வுக்கு திரும்பினேன்.
புத்தகத்தின் தலைப்பு சாதாரணமாக தட்டையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளடக்ககம் அனைத்திலுமே அவ்வளவு விவரக்குறிப்புகளுடன் விரிவான மற்றும் மறுக்க முடியாத ஞானத்தை கண்டடைந்து நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு "Masterpiece". வாசித்தல் என்ற தலைப்பு இன்னும் பொருத்தகமாக இருக்கும்.
இவர் எழுதிய மற்ற புத்தகங்களை வாசிக்க ஆவலாக உள்ளேன்.