கோபல்லபுரத்து மக்கள்
**********************
1990ம் ஆண்டு முதற்பதிப்பு கண்டு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இரண்டு பாகங்களை உள்ளடக்கியது.
இந்நாவலின் முந்தைய பாகமாக கருத்தப்படவேண்டிய "கோபல்ல கிராமம்" நாவலைப் போன்றே, இந்நாவலிலும் கோர்வையான கதையாக இல்லாது, கோபல்ல கிராமத்து மக்களின் குணங்களையும் அவர்களுக்குள் நடக்கும் சிறுசிறு சம்பவங்களையும் சொல்லி செல்கிறது.
தெலுங்கு தேசத்திலிருந்து தென்கோடி தமிழகத்திற்கு வந்த தெலுங்கர்களின் (நாயக்கர்) வரலாறை, கோபல்ல கிராமம் எனும் கற்பனை கிராமத்தின் மூலமாக திரு கி.ரா அவர்கள் நமக்குள் கடத்துகிறார். 'கோபல்ல கிராமம்' நாவலின் தொடர்ச்சியாக, அதில் வந்த கதைமாந்தர்களுள் ஒரு சிலர் இந்நாவலில் இடம்பெறுகின்றனர் .
மேலும், கதைக்காலம் இந்திய சுதந்திரத்திற்கு வெகு நெருக்கத்திற்கு முன்(அதாவது இரண்டாம் உலகப்போர் ஒட்டி) என்பதால் அந்த வரலாற்று நிகழ்ச்சிகளும் இரண்டாம் பாகத்தில் கதைமாந்தர் வழி சொல்லப்படுகிறது.
மேலும், சில வேளாண் தகவல்களும் சுவையான சம்பவங்களும் ஆங்காங்கே நகைச்சுவையாக சொல்லப்படுகிறது.
கடைசியாக நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில், கோபல்ல கிராமத்தில், பெண்களின் குலவையோடு மூவர்ண கொடியேற்றம் நடைபெற்று முற்று பெறுகிறது நாவல்.
நாவலின் முதல் பாகத்தில்,
மண்ணெண்ணை விளக்குகள் அறிமுகம், கருக்கல் காலையில் ஆட்காட்டி குருவி சத்தம் கொடுப்பது, தேயிலை தண்ணி என்னும் டீயை கண்டுணர்ந்து பயன்படுத்த ஆரம்பிப்பது, அச்சிந்தலுவுடன் உடன்கட்டை முறை ஒழிந்தது, கோவில்காளை(காரி) வளர்ப்பும் அதன்மூலம் அதன் இன விருத்தியும், கிட்டப்பன் காளை அடக்குதல், கிட்டப்பன்-அச்சிந்தலு(கைம்பெண்) காதல் என கதையோட்டம் செல்கிறது.
இரண்டாம் பாகத்தில்,
கிட்டப்பன்-அச்சிந்தலு "சேர்ந்து"(திருமணம் முடிக்காமல்) வாழ்ந்த பின்னான மரணம், கோபல்ல கிராமம் நானாவித மக்களால் உள்வாங்கப்பட்டு தோற்றம் மாறியது, பெரிய குடும்பத்து நரசிம்மனும், கஸ்தூரி ரங்கனும் கிராமத்தை விட்டு எட்டையபுரம் சென்று தங்கி 'புதுபடிப்பா'ன இங்கிலீஷும் கணக்கும் கற்கலானார்கள். மேலும், வெள்ளையர்கள் பசு மாமிசம் சாப்பிடுவதை அறியும் கிராம மக்கள் அவர்களை சபிப்பது, தாழ்த்தப்பட்ட தாசில்தாருக்கு சாதிய படிநிலை காரணமாக ஒட்டப்பிடாரத்தில் வீடு மறுக்கப்படுகிறது.,வெள்ளை அதிகாரி கோவில்பட்டிக்கு தாலுக்கா தலைமையை மாற்றுகிறார். இதனால் கோபல்ல கிராமத்தின் வளர்ச்சி அருகாமைக்கு வருகிறது. படிப்படியாக கடிகாரங்கள், டார்ச்லைட், துப்பாக்கி இன்ன பிற உபகரணங்கள் அக்கிராமத்தினருக்கு அறிமுகமாகிறது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில், வெள்ளை அதிகாரிகள் குட்டையானவர்களை விடுத்து நெட்டையான கிராமத்தினரை ���ேடிவரும்போது, அவர்கள் ஒளிந்துகொண்டது, காடை பிடிப்பது, நாட்டின் சுதந்திர வேட்கை கோபல்ல மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம், அந்த நேரத்து உலக அரசியல் என விறுவிறுப்பாக செல்கிறது.
சுருக்கமாக,
மூடத்தனம், பாமரத்தனம், சாதியம், தீண்டாமை, பகுத்தறிவு, முற்போக்கு என அனைத்துவித உளவியல்களையும் கொண்ட கிராமத்துவாசிகளின் கலவை இந்நாவல் எனலாம்.
புத்தகத்திலிருந்து....
\
எந்த உடம்பும் ஆரோக்கியமாக இருந்தால் பசிக்கிறதும் தூங்கிறதும் முழிப்பு தட்டுகிறதும், சொல்லி வச்சது போல ஒரு ஒழுங்காச் சுழலுகிற சக்கிரம் மாதிரி நேரம் தவறாமல் நடக்கும். இப்பேர்பட்டவர்கள் தங்கள் உடம்பை வைத்தே நேரம் சொல்லி விடுவார்கள்.
/
\
மனிதர்களில் சர்வாங்க அழகுப் பிறப்பு எப்படி அபூர்வமோ அப்படியே தான் மாடுகளிலும். எப்பவாவது இந்த பிறப்பு நிகழும். அப்படி பிறந்த காளை கன்றை வளர்த்துப் பெரிதாக ஆக்கி வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. அந்த கன்று பால் மறந்ததும் கூளம் கடிக்க ஆரம்பத்துவிட்டது என்றால் ஒரு நல்ல நாள் பார்த்து பெருமாள் கோவிலுக்கு கொண்டுவந்து ஊர் கூட்டிப் பொங்கல் வைத்து, அந்த காளை கன்றின் முதுகில் திருநாமம் போன்று சூட்டுக்கோளால் "சூலம்சாத்தி" அவிழ்த்து விட்டுவிடுவார்கள். அந்த அடையாளம் எப்போதும் அழியாமல், பார்க்கிறவர்களுக்கு இது கோயில் மாடு என்று தெரியும்படி இருக்கும். இதனால் அந்த மாட்டுக்கு ஒரு தனி சுதந்திரம் உண்டு.
/
\
"கடல்ல முத்து குளிக்கறப்போ, மேல கயிறு பிடிக்கிறது எப்பவுமே, சம்மந்தக்காரனாத்தான்
இருப்பானாம் !" என்றார் சிம்மம்.
"ஆமா; பின்ன. தாயாதிக்காரன் பிடிச்சா அம்புட்டுதான். கயத்தை எங்க இழுப்பான்; சாகட்டும் பயன்னு விட்டு வச்சிருவான்!" என்று சொல்லி சிரித்தார் பய்யனாசாரி.
/
\
பால் உணர்வுச் சிந்தனையில் சின்ன வயதில் பெண்ணுக்குரிய சுதாரிப்பும் துருதுருப்பும் ஆண்பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. பெண் வேப்பமரம்;சீக்கிரம் வளர்ந்து விடுகிறாள். ஆண் அரசமரம்;நின்று, நிதானித்து வளர்ந்து நிலைத்து நிற்கிறான்.
/
\
தமிழ் பேசும் சைவ செட்டிமார்கள், வெள்ளாளர் எனப்படும் பிள்ளைமார்கள் இவர்களுடைய வீடுகள் நாலைந்து. தெலுங்கு பக்தர்களோடு தமிழ் பக்தர்களும் ஒன்ரிறண்டு குடும்பங்களும் வந்து தொழில் நடத்த ஆரம்பித்திருந்தன.
ஆதிதிராவிடக் குடும்பங்கள், தெலுங்கு பகடைகள், ஏகாளிகள், குடிமகன்கள், கொல்லாசாரி, தச்சாசாரி, கூடைகள் வண்டி தடுக்குகள் பெருக்குமார் முதலிய செய்யும் குறவர்கள், "கம்புச் சீவனம்" என்று சொல்லப்படும் காவல்தொழில் புரியும் தேவமார் வீடுகள், ஆடு மேய்ப்புத் தொழில் புரியும் கோங்கிமார் வீடுகள், இப்படியாக அந்த கிராமம் சகல மக்களாலும் பல்கி பெருகிவிட்டது. இதோடு ஒரு பஞ்சாங்க ஐயரும் வந்து குடும்பத்தோடு குடியேறினார். மன்னார் நாயக்கர் சொன்னது போல் "சட்டி பானை செய்கிற குயவரும், நெசவுத்தொழில் நடத்தும் சேணியரும் வந்துவிட்டால் மொத்தம் 18 ஜாதிக்கு கணக்கு வந்துவிடும்" !
/
\
"விராலி வட்டம்ன்னு ஒரு ஏடு இருக்காம் . யாரும் அதை படிக்கக்கூடாதாம். படிச்சான்; தொலைஞ்சான்!இப்படித்தான்; கோட்டி பிடிச்சிரும்."
"அந்த ஏட்லெ அப்படி என்னதான் இருக்கு?"
"என்ன அளவு இருக்கோ யாரு கண்டா. படிச்சு முடிச்சதும் அம்மன் நேரே வந்து பிரத்யட்சம் ஆகி, காட்சி கொடுப்பாளாம்."
"அப்படியா"
"எப்படிக் காட்சி கொடுப்பாளாம்; அப்படியே...நிறை அம்மணம்! அதப் பார்த்ததும் இவங்களுக்கு இப்படி ஆயிருதாம்"
"அதப் போயி அப்படி என்ன மயித்துக்குப் படிக்கணும்?"
"படிக்கவே வேண்டாம்; ஏட்டை பாத்தாலே போதும்; படி படின்னுட்டு அது இவங்களை பார்த்து சொல்ற மாதிரி இருக்குமாம். படிக்கவேப்படாதுண்ணுட்டு நினைக்க நினைக்க கூடக்கொஞ்சம் தான் படிக்கணும்னு தோணுமாம்.கடைசீல படிக்காம இருக்கவே முடியாதாம், படிச்சதும், இப்படி ஆயிருதாங்க
/
\
மக்களுக்கு போதை பழக்கத்தை பரப்பி விட்டால் அரசாங்கத்துக்கு வருமானம் மட்டுமில்லை; எதிர்த்துப் போராடவும் மாட்டார்கள் . கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் ஜனங்களுக்கு கோபம் ஏற்படுவதற்கு பதில் போதையை ஏற்படுத்தி விடுவது ஒரு தந்திரமான உபாயம் வெள்ளைக்காரன் மட்டுமில்லை உலகத்தில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களும் செய்கிற ராஜதந்திரங்களில் இதுவும் ஒன்று .
/
\
"ஏண்டா, கள்ளுகடைய இழுத்து மூடிட்டா காந்தி கையில சுயராஜ்யத்தை கொடுத்து விடுவானா வெள்ளைக்காரன்? போங்கடா பொசகெட்ட பயல்களா". அந்த ஊரில் நுன்னகொண்ட நாயக்கருக்கும் சிலருக்கும் மட்டும் வெள்ளைக்கார ஆட்சியின் பெயரில் ரொம்ப பிரியம். ரொம்ப ரொம்ப பிரியம்.
"அவம் வந்த பிறகுதான் நாடே உருப்பட்டது" என்பார்கள்.
"எங்கன கண்டாலும் தீவட்டி கொள்ளைகளும் வழிப்பறிகளும் நண்டழிஞ்ச காடா இருந்த நாட்டை அவன் வந்து ஒடிக்கி அடக்கி ஒழுங்குபடுத்தியிருக்கான். அவன் வந்த பிறகு தானே இரயில் வந்தது, காரு வந்தது, தபாலு, தந்தி இதெல்லாம் வந்தது. நாட்டுக்கு அவன் எண்ணமெல்லாம் செஞ்சிருக்கான். அவம் மாத்திரம் இல்லன்னா தெரியும் கதெ? இவங்க கையில சுயராஜ்யத்தை கொடுத்துட்டா அம்புட்டுத்தான்; வேற வெனை வேண்டாம். திரும்பவும் நாடு நண்டழிஞ்ச காடா ஆயிரும்."
/
\
கடவுளுக்கே மது பிரீதியானது, அதை மனிதனுக்கு அவர் தந்தார் என்பதெல்லாம் மக்களின் கட்டுக்கதைகள் என்றான் நரசிம்மன். மனிதனுக்கு எதெல்லாம் பிரீதியானதோ அவைகளை எல்லாம் மனிதன் கடவுளுக்கு காட்டிவிட்டு இவன் அவைகளை அனுபவிக்கிறான் என்பதுதான் நெசம் என்றான். பால்பாயாசம், சக்கரைப் பொங்கல், தோசை, பொங்கல், லட்டு, கள், சாராயம், மாமிசம் எல்லாம் இப்படித்தான் என்றான்.
/
\
பர்மா நாயக்கர் அங்கு வந்ததும் முதல் காரியமாக ஒரு காரை வீடு கட்டினார். வீடு கட்டி முடிந்ததும் குடும்பத்தில் யாராவது ஒருத்தர் சாகணும் என்கிற உலக எதிர்பார்ப்பின் படி அவரே போய் சேர்ந்தார்.
/
\
முப்பது வருஷம் வாழ்ந்ததும் இல்லை, முப்பது வருஷம் கெட்டதும் இல்லை என்பது கிராமத்தில் சொல்லப்படும் ஒரு சொலவம். ஒரு மனிதனுக்கோ ஒரு குடும்பத்துக்கோ ஏழ்மையானாலும் சரி சீர்மையானாலும் சரி முப்பது வருஷங்களுக்கு தான். சுழலும் சக்கரம் போல கீழே உள்ளது மேலேயும் மேலே உள்ளது கீழேயும்; இப்படி மாறி மாறி வரும் என்கிறது.
/
\
"அடேய்...., மனுஷ பயலே ஒரு நீசன்தாண்டா. நாம தேவ அம்சத்துக்கு ஒசரனும்னு நினைக்கிறோம். எங்கே முடியுது. (மார்பை தொட்டு காட்டி) இங்கே இருக்கிற அழுக்கு கொஞ்சமா நஞ்சமா! உள்ளுக்கு எதெது உண்டோ, வியர்வை மாதிரி அதெல்லாம் வெளிவரத்தான் செய்யும்" என்பார்.
/
\
"முந்தியெல்லாம் இப்படி கடையை ஏலத்துக்கு விட்டு ஊரு தவறாமல் கள்ளுக்கடையை நிலையாக இருக்கும்படி யாரும் பண்ணியதில்லை. இது இந்த வெள்ளைக்காரன் வந்த பிற்பாடுதான். கள்ளை வியாபாரப் போட்டிக்கு உட்படுத்தியதால், போதை அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கையாக அதில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை சேர்த்து விற்கும்படி ஆகிறது. இந்த அதிபோதையால் அரசுக்கும் அதை விற்பவர்களுக்கும் நல்ல காசு என்பதோடு, போதையில் கிடக்கும் மக்களின் தொகை அதிகமாக ஆக ஆக அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு பலவீனப்பட்டு போகும். மக்கள் போதையில் கிடப்பது கொள்ளைக்காரர்களான வெள்ளைக்காரர்களுக்கு நல்லது. ���தனால் நாம் முதலில் நமது மக்களை போதையில் இருந்து மீட்க வேண்டும். அதோடு நமது குடும்ப பொருளாதாரத்துக்கு இந்த குடி உதவவே உதவாது ஆகையால்தான் மகாத்மா காந்தி அவர்கள் கள்ளுக்கடை மறியலையும், தனது நிர்மாணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்" ...
/
\
பூனக்கார பெட்டி - கிராம போன் பேட்டி
/
\
கிராமத்து பிள்ளைகளிடம் சில ஒழுக்க முறைகளை கொண்டு வருவதற்குள் ரொம்ப சிரமப்பட்டு போனார். முக்கியமாக அவர்களை காலையில் குளிக்கும் பழக்கத்தை வருத்துவது கஷ்டமாக இருந்தது. கரிசல் கிராமங்களில் காலையில் குளிக்கும் பழக்கம் கிடையாது. உடல் உழைப்பாளிகளுக்கும் காலை குளிப்புக்கும் ரொம்ப தூரம்.
...
"நீங்க பாட்ல தல முழுகாட்டிட்டு போயிர்றீங்க. தல முழுகிட்ட உடனே வயிறு ஒரேயடியா பசிக்கி" என்றான். சுரீர் என்றது மனசுக்குள் ஐயருக்கு.
/
\
வெள்ளைக்காரன் அவனோட நாட்ல விடிய விடிய தோண்டுனாலும் நிலக்கரியும் இரும்பும்தான் கிடைக்கும். நம்முடைய நாட்ல தோண்டுனா... தங்கமும் வைரமும் கிடைக்கும்! இன்றைக்கு பிரிட்டிஷ் சக்கரவர்த்தியோட கிரீடத்தில் ஜொலிக்கிற கோகினூர் வைரம் யாருடையது? நம்ம நாட்டுல இருந்து கொண்டு போன வைரம்.
/
\
இந்த கீரி ஆற்றை போலத்தான் கங்கை நதியும் ஒரு காலத்தில் பூமியில் உள்ள மக்களுக்கு பயன்படாமல் இமயமலையின் உச்சியில் இருந்து கொண்டிருந்தது. அதை பகிரதன் என்ற ராஜா எவ்வளவோ சிரமப்பட்டு அபாரமான மராமத்து வேலைகள் செய்து கங்கையை தரைக்கு கொண்டு வந்து பூமியை வளப்படுத்தினான். இமயமலையின் உச்சியில் இருக்கும் வரை அதுக்கு பேரு கங்கை; பூமிக்கு வந்ததும் அது ராஜாவின் பெயரான பாகீரதி ஆயிற்று. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மீது இருக்கும் கீரை ஆற்றை இந்த கரிசல் மண்ணில் பாய விட்டு இந்த பூமியை வளப்படுத்தும் நம்முடைய சுதந்திர சர்க்கார் என்றார் உணர்ச்சியோடு.
/
\
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியது இருந்தது. பட்டாபி சீத்தாராமையாவின் பெயரை சொன்னார் காந்திஜி. சீத்தாராமைய்யாவை எதிர்த்து சுபாஷ் சந்திரபோஸ் நின்றார்.
சுபாஷ் போஸ் ஜெயிக்க வேண்டுமே என்று மனம் அடித்துக் கொண்டது கிராமத்தில் இளைஞர்களுக்கு.
203 வாக்குகள் அதிகம் பெற்று, காங்கிரஸ் தலைமை பதவியை சுபாஷ் சந்திரபோஸ் வென்றார். எல்லோர் மனசும் குதுகளித்தது. "பட்டாபி தோல்வி என் தோல்வி" என்றார் காந்திஜி.
...
யுத்தம் தீவிரமாகியது. எந்த நிமிஷமும் ஹிட்லர் ஜெயிக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். ஹிட்லரோடு முசோலினியும் ஜப்பானும் சேர்ந்து கொண்டதால் இவர்களை "மும்மூர்த்திகள்" என்று கிராமத்தில் குறிப்பிட்டு பேசினார்கள்.
/
\
பலத்த போலீஸ் பாதுகாப்பிலிருந்து மாறுவேடம் போட்டுக்கொண்டு தப்பிய சுபாஷ், "ஜியாவுதீன்" என்கிற பெயரில் போலி பாஸ்போர்ட்டுடன் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு புறப்பட்டு போனார். போகும் வழியில் அவர் தன்னுடைய பெயரை "சிக்னார் ஒர்லாண்டோ மஸோட்டா " என்று மாற்றி வைத்துக்கொண்டார் அவரிடம் இத்தாலிய பாஸ்போர்ட் இருந்தது.
/
\
"நீ வேணாலும் பாரு! இந்த யுத்தத்தின் முடிவில் பல நாடுகள்ல உண்மையான மக்களாட்சி மலரும். இப்போ இருக்கிற இந்த பிரிட்டிஷ் வல்லரசு எழுந்திருச்சு கூட நிக்க முடியாம போயிரும் அப்ப நாம இந்த வெள்ளைக்காரனோட சண்டை போட கூட வேண்டாம்; எந்திரிச்சு நின்னா போதும்! ஓட்டம் பிடிக்கிறத தவிர வேற வழியில்லை"
/
/
குழந்தைகள் வீடு கட்டி விளையாடிவிட்டு அதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவைத்துவிட்டு போவதில்லை. காலால் 'ஒழப்பி' அழித்துவிட்டுதான் போறது வழக்கம். 'இவ்ளோ' பெரிய்ய இந்தியாவை எப்படி விட்டுட்டு போறது!
சுய ஆட்சி பெறுவதற்கு முன்னால் ஒரு இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் - முஸ்லிம் லீக் தலைவர்கள் கூடி பேசி, மத்தியில் அமைக்கும் அந்த அரசில் ஆளுக்குப் பேர்பாதி என்று தீர்மானித்து மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சிக்கு 40% முஸ்லிம்களுக்கு 40% என்று ஒப்புக்கொண்டு(மீதமுள்ள 20% மற்ற கட்சிகளுக்கு) அந்த தீர்மானத்தை எடுத்துக் கொண்டு வைஸ்ராய் வேவலிடம் இரு கட்சித் தலைவரும் சேர்ந்து நேராக கொண்டு போய் கொடுத்தார்கள்.
இவர்கள் இப்படி ஒன்று சேர்ந்து வருவார்கள் என்று வேவல் பிரபு கனவிலும் நினைத்திருக்கவில்லை! இவர்களின் ஒற்றுமை இன்மைதான் அவருக்கு துருப்பு சீட்டாக இதுவரை இருந்து வந்தது.
அவர்கள் கொடுத்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு வைஸ்ராய் வேவல் லண்டனுக்கு பறந்தார். தீர்மானத்தை பார்த்த லண்டன், 'ஓஹோ கதை இப்படி போகிறதோ' என்று நினைத்து, அதில் ஒரு மாற்றத்தை செய்தது. வெளித்தோற்றத்தில் அந்த மாற்றம் அல்பமாக தெரியும்; ஆனால் தெரிந்தவர்களுக்கு தான் தெரியும் பிரிட்டிஷ்காரனின் ராஜதந்திரம் என்றால் என்ன என்பது! காங்கிரஸிற்கும் முஸ்லிம் லீக்குக்கும் சமபங்கு என்பதை முஸ்லிம்களுக்கும் ஜாதி இந்துகளுக்கும் சம பங்கு என்றும் மாற்றி அமைத்தது லண்டன்!
இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டால், காங்கிரஸ் ஒரு இந்துக்களுடைய ஸ்தாபனம் என்று ஒப்புக்கொள்ள வேண்டியது வரும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் தன் பங்கில் ஒரு முஸ்லிமை நியமிக்க அனுமதித்தால் முஸ்லிம் லீக் தனது பங்கில் ஒரு பிரதிநிதியை குறைத்துக் கொள்ள வேண்டியது வரும்!
இப்படி ஒரு தகராறை உண்டு பண்ணி இந்த ஒப்பந்தத்தையே தகர்த்து விட்டது பிரிட்டிஷ் அரசு.
இப்படியெல்லாம் அது விளையாண்டு கொண்டிருக்கையில்தான் அந்த "1946" வந்தது ! இப்படி ஒரு 46 வரும் என்று அதுக்கு தெரியாது.
/
\
கிராமத்தில் மூன்று அரசியல் பிரிவுகள் - சொல்லப்போனால் நான்கு - இருந்தது. காங்கிரஸ் கட்சி, திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ்காரனுக்கு துதி பாடும் உதிரிகள்.
/
\
கம்யூனிஸ்ட் "பையன்கள்" போய் காங்கிரஸ்காரர்களை பார்த்து சுதந்திரதினத்தை நாம் சேர்ந்தே கொண்டாடுவோமே என்று கூப்பிட்டார்கள். "உங்களுக்கும் நம் மகளுக்கும் ஒத்துவராது; நாங்க உங்களோட சேர முடியாது. நாங்க வாங்கின சுதந்திர தினத்தை நாங்க தனியா தான் கொண்டாடுவோம்" என்று சொல்லிவிட்டார்கள்.
கொத்தனார் சாமி நாயக்கர் அதுபற்றி சொன்னார் "காங்கிரஸ்காரங்க நடந்துகிட்டது சரியாதெரியல" என்று. "அந்த பேச்சு காலே சரியில்ல" என்றார். கொஞ்சம் கழித்து எரிச்சலான கோபத்தோடு "நாங்க வழங்குன சுதந்திரம்" என்று சொல்லிவிட்டு காட்டி, "உன் அப்பன் வாங்கின சுதந்திரம்டா!" என்று சொல்லி, ஒரு வசவையும் சேர்த்து முடித்தார்.
அழகரசனும் அவனது சேக்காளிகளும் இந்த சுதந்திரத்தை வேற விதமாக பார்த்தார்கள். தமிழன் இனி இந்திய ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக வேண்டும். பார்ப்பனியத்துக்கு கிடைத்த வெற்றி. ஏக இந்தியா என்று சொல்லி தமிழன் நசுக்கப்படுவான். எல்லா மத்திய அரசு பதவிகள், உத்தியோகங்கள் இனி நமக்கில்லை. பார்ப்பனிய அறிவு ஜீவிகளோடு அறிவுத்திறனை நம்முடைய பிள்ளைகள் போட்டிபோட முடியாது. வஞ்சகமாக நாம் முறியடிக்கப்பட்டு கொண்டே இருப்போம்.
கம்யூனிஸ்ட் "பையன்கள்" தரப்பில் எழுந்த சிந்தனை வேற விதமாக இருந்தது, "வெந்தது போதும்; முந்தியில போடு" என்கிற கதையாகிவிட்டது. வெறும் அதிகார மாற்றம் இது. எல்லாம் அப்படியே இருக்கும். வெள்ளையன் உட்கார்ந்த இடத்தில் - பதவிகளில் - கருப்பந்துரைகள் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். ஏழ்மை அப்படியே இருக்கும். எந்திர முதலாளிகள் கொழு���்கப் போகிறார்கள்; வெள்ளை மூலதனத்தோடு இணைந்து கொண்டு. சுதந்திரம் என்று சொல்லிவிட்டு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்கு உள்ளே இரு என்கிற வஞ்சகத்தை இந்த "மூதி"கள் புரிந்து கொள்ளவில்லை. யுத்தத்தில் ஏற்பட்ட கண்ட செலவுகளை எல்லாம் இந்தியாவின் தலையில் கட்டப் போகிறான் அவன். இந்த வெறும் அதிகார மாற்றத்திற்காகவா இத்தனை காலம் எத்தனை தியாகிகள் மடிந்தார்கள்? இன்னும் ஒரு பெரும் போராட்டம் இருக்கு இவனுகளோட. ஆனாலும் வெள்ளையன் இந்த நாட்டை விட்டு போறது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான்.
காங்கிரஸ்காரர்களின் சிந்தனை இப்படி இருந்தது. பசுவும் புலியும் ஒரு தண்ணீர் துறையில் ஒன்று சேர்ந்து தண்ணீர் குடிக்கும் அந்த "ராம ராஜ்ஜியம்" வரப்போகிறது. இந்தியாவை பிடித்திருந்த கிரகணம் விலகி விட்டது. எல்லாம் நமது தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இனி எல்லாமே சந்தோஷமே. 'ஆடுவோமே பள்ளுபாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று'.
/