முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்து, தற்போது தனி நாடான ஆர்மேனிய நாட்டைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர் களின் சிறந்த சிறுகதைகள் ஆங்கிலம் வழியாக தமிழுக்கு வந்துள்ளன.இந்திய மக்களுக்கும் ஆர்மேனிய மக்களுக்குமிடையே உள்ள நட்பு, பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. சமீபத்திய ஆர்மேனிய உரை நடை இலக்கியமானது, மனிதம் முழுவதையும் தழுவுகிற வளமான சித்திரமாக விளங்குகிறது. இந்திய வாசகர்களுக்கான இக் கதைத் தொகுப்பு, மேற்கூறப்பட்ட சித்திரத்தின் ஆதாரசக்திகள், போக்குகள், சார்புகள் பற்றிய ஒரு நல்ல அறிமுகமாக விளங்குகிறது. இந்த முதல் தொடர்பு, இனி ஏற்படக் கூடிய நெருக்கமான உறவுகளுக்கும், பரஸ்பர அறிந்து கொள்ளுதல்களுக்கும் ஒரு பாலமாக அமையக்கூடும்.
வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது