இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம்.
முக்கியமான இரு கேள்விகளுக்கு விடை தேடுவதே இந்நூலின் பிரதான நோக்கம். அகதிகளை நாம் எப்படிக் காண்கிறோம்? அகதிகளின் கண்களைக்கொண்டு பார்த்தால் நாம் எப்படித் தோற்றமளிப்போம்?
இராக், ஆப்கனிஸ்தான், சிரியா, பாலஸ்தீன், இலங்கை, பர்மா என்று பல நாடுகளிலிருந்தும் எறும்புக் கூட்டங்களைப் போல் இலக்கின்றி வெளியேறிக்கொண்டிருக்கும் அகதிகளின் வலிமிகுந்த வாழ்க்கைப் பதிவு இது. முக்கியத்துவம் கருதி ரோஹிங்கியா முஸ்லிம&
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் நிலத்திலிருந்து "நீ ஒரு அந்நியன், இனி இங்கே உனக்கு இடம் இல்லை.. உடனே இங்கிருந்து வெளியேறு.. இல்லையேல் உடமையோடு சேர்த்து உயிரும் போய்விடும்.." என யாராவது நம்மிடம் கூறினால்? வறுமையான வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த பின்பு, திடீரென ஒரு நாள் ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா என தவிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டால்? செல்லுமிடமெல்லாம் "நீ இந்த நிலத்தை சேர்ந்தவன் இல்லை.. ஓடிப்போ.." என எல்லோரும் நம்மை விரட்டிக் கொண்டே இருந்தால்? இப்படி சபிக்கப்பட்ட வாழ்க்கையை சக மனிதர்கள் வாழ்ந்திட சக மனிதர்களே காரணம் என்ற உண்மை மனிதன் நாகரீகமடைந்துவிட்டான் எனக் கூறுவதற்கே வெட்கி தலைகுனிய வைக்கிறது.
அகதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவாகிறார்கள்? ஒரு அகதியாக வாழ்வது என்றால் என்ன? இது போன்ற கேள்விகளை முன்வைத்து உலகமெங்கும் அகதிகளாக வாழ்பவர்கள் குறித்தும் அவர்களின் அந்த நிலைக்கான காரணங்களையும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் பேசுகிறது புத்தகம்.
இன வெறுப்பின் உச்சமாக ஹிட்லர் அறியப்பட, ஹிட்லர் ஆசைப்பட்டதை போன்ற உலகத்தில் தான் நாம் இப்போது வாழ்கிறோம் என்கிறது புத்தகம். மிக சரியான பார்வை. மதத்தின் பேரிலேயும், இனத்தின் பேரிலேயும், மொழியின் பேரிலேயும் இன்னும் என்னென்னவோ காரணங்களாலேயும் பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கி கொண்டே இருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காகவும், பொருளாதார ஆதாயத்திற்காகவும் இது போன்ற ஒடுக்கு முறைகளை அரசே முன்னின்று நடத்துகிறது. அல்லது முன்னின்று நடத்தும் குழுக்களை மறைமுகமாக ஆதரிக்கிறது.
இலங்கைத் தமிழர்கள், மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லீம்கள், பாலஸ்தீனியர்கள், சிரியா மக்கள் என அகதிகளாக மாற்றப்படுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. ஒவ்வொன்றையும் வாசிக்க வாசிக்க மனம் கனத்துப் போகிறது. வரலாறு முழுக்க ஒடுக்குமுறைக்கு ஆளாகி தவித்த யூதர்கள், பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பௌத்த மதத்தை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் இலங்கையும் பர்மாவும் சிறுபான்மை மக்களை ரத்த ஆற்றில் குளிப்பாட்டுகிறார்கள்.
காட்டு விலங்குகள் கூட தன் பசிக்கு மட்டுமே வேட்டையாடும். ஆனால் ஆறறிவு உள்ளதாக பீற்றிக் கொள்ளும் மனித இனம் காரணமே இன்றி அல்லது அற்ப காரணங்களுக்காக தன் இனத்தையே வேட்டையாடுகிறது. மனிதன் கற்காலத்திலேயே இருந்திருக்கலாம்.
இன்று அகதிகளாக இருக்கும் பலரும் நேற்று நம்மை போல ஒரு நாட்டின் பிரஜையாக இருந்தவர்கள்தான். ஒரு நாட்டில் வாழ்வதற்கான சூழலை இழந்த ஒருவர் அல்லது நாட்டால் அடையாளத்தை இழக்கும் ஒருவர் அகதியாகிறார். அந்த நிலையில் இருந்து அவரது வாழ்க்கை கொடூரமானதாக மாறுகிறது. இப்போது நம்மில் பல தமிழர்கள் வடக்கர்கள் மீது ஒரு வன்மத்தில் இருப்பது போல. ஒவ்வொரு நாட்டில் ஒரு குழு மொழி,மதம் என ஏதோ ஒரு காரணத்தால் மற்றொரு குழுவின் மீது வன்மத்துடன் இருக்கிறது. அதில் மெஜாரிட்டியான குழு அரசியல் அதிகாரத்தை பிடிக்கும்போது மைனாரிட்டி குழு அகதிகளாகிறது. ரோஹிங்கியா முஸ்லீம்கள், யூதர்கள் என பலர் அகதிகளானதன் பின்புலம் இப்படிதான் இருக்கிறது. ஏதோ ஒரு விஷயம் சார்ந்த சின்ன வெறுப்பு அதை ஊதி ஊதி பெரிதாக்கி ஒரு இன படுகொலையை உருவாக்கும் சாத்தியம் கூட மனிதர்களிடம் உண்டு. புத்தகம் படிப்பதில் என்ன நன்மை என பலரும் கேட்கலாம். உலக அளவில் எல்லை தொடர்பான அரசியலில் துவங்கி நம் சமூகத்தில் எந்த வட்டத்திற்குள் நாம் அடைக்கப்பட்டுள்ளோம் என்பது வரை புத்தக வாசிப்பில் அறிந்துக்கொள்ள முடியும். இது முக்கியமான புத்தகம். கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்த புத்தகத்தை படித்துள்ளேன். வேலைப்பளு ஒருப்பக்கம், புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை முடித்ததும் அது ஏற்படுத்தும் மன அழுத்தமே முக்கிய காரணம். இதனால் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல முடியவில்லை. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாழும் அகதிகளின் நிலையில் துவங்கி, பல விஷயங்களை புத்தகம் பேசுகிறது. பரிசளிக்க சிறந்த புத்தகம்.