2006ல் முதற்பதிப்பு கண்ட இப்புத்தகம் 13 அத்தியாயங்களை 136 பக்கங்களில் கொண்டுள்ளது. என் இதை சொல்கிறோம் என்றால், கிட்டத்தட்ட திரு நேதாஜி பற்றிய முக்கிய தகவல்கள், வரலாற்று சம்பவங்கள், குறிப்புகள், கடிதங்கள் என அனைத்தையும் இறுகப் பிணைத்து இப்புத்தகத்தில் தந்தாகவே தெரிகிறது.
அவர் பிறப்பு முதல், லண்டன் ஐ சி எஸ் படிப்பு, தமது குருவாக தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் அவர்களை ஏற்றது, "Forward" பத்திரிக்கை தொடங்கியது, சிறைவாசத்திலிருந்தே வங்காள மேயர் ஆனது, காங்கிரஸில் இணைந்து தலைமை பொறுப்புக்கு சென்றது, அகிம்சையின் மூலம் சுதந்திரம் கிட்டாது என்ற முடிவுக்கு வருதல், அதனால் காந்தி அவர்களுடன் ஒத்து போகாத குணம், பிரிட்டிஷ் இந்தியா மீது போர் தொடுக்க உலக நாடுகளின் உதவியை நாடியது, உதவியாளர் எமிலியை திருமணம் செய்துகொண்டது, ஹிட்லர்/முசோலினி போன்ற ஐரோப்பியர்கள் நேதாஜியை கைவிட்டது, கடைசியில் ஜப்பானின் உதவியோடும், கிழக்கு ஆசியாவை சேர்ந்த புலப்பெயர்ந்த இந்தியர்களோடும், மற்றும் இந்திய பகுதி இந்தியர்கள் உட்பட, பர்மிய காடுகளின் வழியாக இம்பால், சிட்டகாங் வரை கைப்பற்றி, பின் தோல்வி அடைந்தது, பின்பு ஓரு போர்விமானதில் ஏறி போனதில் காணாமல் போனது, அதன் தொடர்ச்சியான மர்மங்களும் விசாரணைகளும்(2005 ஆண்டு வரை) என திரு சுபாஷ் பற்றி ஆதி முதல் அந்தம் வரை முடிந்த அளவிற்கு அனைத்து தகவலையும் திரட்டி தொகுத்துள்ளார், திரு மருதன்.! ஆங்கிலயேர்களின் மதத்தை பள்ளிகளில் பைபிள் மூலம் பரப்பியிருக்கிறார்கள், அதையும் தன் பள்ளி காலம் முதலே எதிர்த்து வந்திருக்கிறார் நேதாஜி! அதே போல சாமியார்களிடம் தாம் கண்ட தீண்டாமையையும் கண்டித்தே வந்துள்ளார்.
மொத்தத்தில், இப்புத்தகத்திலிருந்து நாம் தெரிந்து கொண்டது, "அகிம்சை", இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தது என்றாலும், அது பிரிட்டன், இந்தியாவை சக்கையாக பிழிந்தபின்புதான், முன்கூட்டியே அல்ல. அதே போல இடதுசாரி போராட்ட போர் முறைகளும், இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தரவில்லை என்பதை, போஸ் அவர்களின் போர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஜப்பானியர், இந்தியர் உயிரிழப்புகள் வாயிலாக அறிகிறோம்.
'இந்திய நாட்டிற்கு பொருந்தக்கூடிய கொள்கை, அகிம்சைக்கு மேலும், இடதுசாரி போராட்ட போக்குக்கு கீழும் உள்ளது.'
புத்தகத்திலிந்து....
// காந்தி தனது தீர்மானத்தை முன்வைத்தார். '1929 டிசம்பர் 31-ம் தேதிக்குள் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்தை கொடுத்தால் காங்கிரஸ் மகாசபை அதை ஒப்புக் கொள்ளும். இல்லாவிட்டால், காங்கிரஸ் பரிபூரண சுயராஜ்ஜியத்தையே கோரி நிற்கும். இதற்கு குறைவாக, எதைக் கொடுத்தாலும் ஏற்காது'.
தவறான கோரிக்கை. இதை நிறைவேற்றுவதற்கு பிரிட்டிஷாரிடம் அனுமதி கேட்டது, அதைவிடத் தவறானது. 1929 வரை அவகாசம் கேட்டது நெருடலின் உச்சம். மொத்தத்தில் காந்தியின் தீர்மானம் போஸூக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 'கோரிக்கை; கோரிக்கைக்கு மேல் கோரிக்கை என்று இப்படியே காலம் தள்ளி விடத்தான் காங்கிரஸ் லாயக்கு' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
ஆனால் காந்தியின் தீர்மானம் நிறைவேறியது //
// இடதுசாரி சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே தீவிரமான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும். மிதவாதிகளால் ஒரு பயனும் கிடையாது. அகிம்சை, ஒத்துழையாமை காலம் மலையேறிவிட்டது. காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. காங்கிரஸில் யாரிடமும் போர்க்குணம் இல்லை. கதர் வேட்டி, குல்லாய் அணிய சொன்னால் அணிகிறார்கள். 'இறங்கி போராடுங்கள், எதிர்ப்புகளை சமாளியுங்கள்' என்று சொன்னால் காந்திக்கு பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறார்கள் //
// எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, 1941 ஜூன் மத்தியில் சோவியத் ரஷ்யா மீது ஜெர்மனி போர் தொடுக்கும் வரை. ஜெர்மனியின் செயலால் அதிர்ந்து போனார் போஸ். ஜெர்மனியின் ஆதரவு முக்கியம் தான் அதற்காக சோவியத் ரஷ்யாவை அவர்கள் ஆக்கிரமிக்க துடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெர்மனி ரஷ்யா இந்த இரண்டு நாடுகளை நம்பித்தான் போஸ் இந்தியாவை விட்டு வெளியேறி இருந்தார் . இப்போது இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக ஒரு களத்தில் நிற்கின்றன. இனி என்ன செய்வது ? போதாதற்கு போஸை உளவு பார்க்கவும் ஆரம்பித்தது. அவரது தொலைபேசி இணைப்புகள் ஓட்டுகேட்கப்பட்டன. அவர் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர நிழல்போல் உளவாளிகள் வந்தனர். அவர் அனுப்பும், அவருக்கு வந்து சேரும் கடிதங்கள் அத்தனையும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. //