இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக, நாட்குறிப்புகளாக, கடிதங்களாக, அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள். அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக் கொண்ருக்கின்றன. அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன். ஆங்கிலேயர்களின் வாழ்வை, அவர்கள் சந்தித்த சிக்கல்களைத் தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவு இந்த நூல். ஆங்கிலேயர்களைப் பற்றி நமது பாடப் புத்தகங்களில், பொதுப் புத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கூடும்.
மு. ராஜேந்திரன் (M. Rajendran) இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த காலத்திலிருந்தே தன் தீவிரமான அரசாங்கப் பணிகளுடன், இலக்கியம் சார்ந்தும், வரலாறு சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டு இவர் உருவாக்கும் வரலாற்று நூல்கள் எளிமையான மொழி நடையில் வரலாற்று ஆவணங்களை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கி வருகின்றன. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு இவர் எழுதிய 'காலாபாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் தாலுக்கா வடகரை கிராமத்தில் ராஜேந்திரன் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்து இந்திய ஆட்சிப்பணியாளராக உயர்ந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில் இருந்த 1500 கல்வெட்டுகளை பணியெடுக்கும் பணியை துவக்கி வைத்த பெருமை இவருக்கு உரியதாகும். வரலாற்றுச் செப்பேடுகள் சொல்லும் செய்திகளை அனைத்து நிலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் தொடர்ந்து எழுதிவருகிறார். சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள் முதலியவை தொடர்பான இவருடைய நூல்கள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சிகளாக அமைந்தவையாகும்.
அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இவருடைய மூதாதையரின் கதையில் இருந்து தொடங்கி, மூன்று தலைமுறையின் தொடர் வாழ்வினை ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற தன் வரலாற்று நூலாக எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வில் இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1801ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் நடந்த காளையார் கோயில் போரை மையமாக வைத்து,1801 என்ற வரலாற்று நாவலை எழுதியுள்ளார். 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வு இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சியில் முதன்முதலில் மன்னர்களை நாடு கடத்துதல், காளையார் கோயில் போரில்தான் தொடங்கியது. அப்போது சிவகங்கையின் அரசராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவரையும் அவருடன் போராளிகள் 71 பேரையும், தங்களின் வெற்றிக்குப் பிறகு பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான இப்போராட்டத்தினை மையமாகக் கொண்டு ‘காலா பாணி’ என்ற நாவலை இவர் எழுதியுள்ளார். 1857 சிப்பாய்க் கலகத்திலிருந்து தொடங்கும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வரலாறு தென் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த 1801 போர்களிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதால் காலா பாணி நூல் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நூலாக உள்ளது.