சோழநாடு சோழர்கள் என்றாலே பெரும்பாலும் கரிகாலரையோ, இராசராசரையோ, இராசேந்திர சோழனையோ தான் அதிகமாக தெரிந்திருக்கும். அதற்கு பின்னால் வந்த சோழர்களைப் பற்றியும் அவர்கள் செய்த வியக்கத்தக்க சாதனைகள் பற்றியும் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடல்புறா ஆசிரியர்
சாண்டில்யன் எழுதியதில் நான் வாசிக்கும் முதல் புதினம்.
கடல்புறாவை வாசிக்கத் தொடங்கியது முதலே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், புதினத்தினூடே கலிங்கத்திற்கும், அக்ஷய முனைக்கும், நக்ககவரத் தீவுகளுக்கும், கடாரத்திற்கும், ஶ்ரீவிஜயத்திற்கும் நீண்ட நாட்களாக பயணம் செய்த ஓர் அனுமவத்தை கொடுத்துள்ளார்.
சோழ அரசின் மீது கொண்ட பகை காரணமாக ஶ்ரீவிஜயம்,கலிங்கமும் இணைந்து தமிழ்நாட்டின் வணிகத்தை முடக்குகின்றன. தமிழர்களை நிந்திக்கின்றன. அவ்வாறு நிந்திக்கும் கலிங்கத்திற்கு, வீரராஜேந்திரன் இட்ட கட்டளைக்கு ஏற்ப அமைதித் தூதனாக சென்றழர் இளைய பல்லவர். அமைதித்தூது எவ்வாறு தரைப்போரில் சிறந்தவரான இளைய பல்லவரை கடற்போரில் விற்பன்னராக மாற்றுகிறது. எவ்வாறு தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத் தந்து கடல் வணிகத்தை செழிக்க வைத்தது என்பதே கடல்புறா.
கடல்புறா மரக்கலத்தை அதன் அமைப்புகளையும் அதன் போர் கருவிகளையும் அது போரில் பயன்படுத்தும் விதமும் அதன் பலமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாமும் அந்த கடல்புறாவை ஒரு தடவையேனும் காண வேண்டும் என்ற எண்ணம் பலமுறை எழுந்தது.
காஞ்சனா & மஞ்சளழகி என இரண்டு இளவரசிகளின் வீரம், அறிவுத்திறன், அளப்பரிய காதல், அவர்ளின் அழகை வர்ணித்துள்ள விதம், போர்திறமைகள் ஆகியவை அதிசிறப்பு. அவர்களைக் கொண்டு எவ்வாறு தனது எண்ணங்களையும் இலக்குகளையும் நிறைவேற்றுகிறான் என்பதை அறிய மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது.
இது கற்பனை நிறைந்த வரலாறு ஆனாலும் , ஆசிரியர் பல இடங்களில் அதற்கான ஆதாரங்தளை கொடுத்துள்ளார். கடாரம், ஸ்ரீவிஜயம், மாநக்காவரம் தீவுகளை நம் கண் முன்னே நிறுத்துகிறார்.
இராசராசரின் போர் திறனைப் பற்றியும், கடற்போரில் அவர் புரிந்த சாதனைகளைப் பற்றியும், கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும், கடல் பற்றிய ஆழ்ந்த திறனைப் பற்றியும் மிக விரிவாக பாலகுமாரன் எழுதியுள்ள புதினங்களில் இருந்து அறிய முடியும். இப்புதினத்தில் அவரின் சிறப்பை ஆங்காங்கே எடுத்துக் கூறி இருக்கிறார்.
இப்புதினத்தில் வரும் கதாபாத்திரங்களான அநபாயன், அகூதா, அமீர், கண்டியத்தேவன்,சேந்தன் போன்றவர்களாலே கடல் புறா சாத்தியம். அவர்களது கதாபாத்திரங்கள் உயிரோட்டம் உள்ளதாகவும், வாசிப்பவர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இளையபல்லவன் என்ற கருணாகரப்பல்லவனான சோழர்படைத் தளபதியின் சிறப்புகளையும் அவனது தந்திரங்களையும் விந்தைகளையும் அனுபவிக்க கடல்புறாவை வாசிக்கவும்.