மனிதர்களில் பெரும்பாலானோர்க்கு எஜமானர்களாக உள்ள விளம்பரங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள ஒரு சாமானியனுக்கு வரலாறு வணிகம் , மனோதத்துவம் எனப் பல துறைகளையும் அறிய வேண்டிய தேவை உள்ளது . ஏனெனில் , இந்த அனைத்து நதிகளும் சங்கமிக்கும் பெருங்கடல்தான் விளம்பரங்கள் அதனால் அவை ஒவ்வொன்றையும் பற்றி கூடுமானவரை எளிமைப்படுத்தி கூறுகிறது இந்த நூல்.
இரா. மன்னர் மன்னன் எழுதிய இன்னொரு அபாரமான, முக்கியமான ஆய்வு இந்த விளம்பர வேட்டை.
விளம்பரங்கள் சம்பந்தமான உளவியலை விளக்கும் நூலிது. உங்கள் செலவுகளையும் ஏமாற்றங்களையும் பாதியாக குறைக்கும் நூலென்ற உபதலைப்பிற்கு ஏற்றவாறு பல உண்மைகளை நமக்கு புரிய வைத்து மறைவிலிருக்கும் நிதர்சனங்களை வெளிக்கொணர்கிறார் ஆசிரியர்.
விளம்பரங்கள் எவ்வாறு, எக்காலத்தில் தொடங்கின, அவ் விளம்பரங்கள் அக்காலத்தில் என்ன வடிவில் இருந்தன என்ற வரலாற்றை சுவையாக தருகிறது நூல். பண்டைய காலத்திலிருந்தே விளம்பரப்படுத்தல் நடைமுறையில் இருக்கிறது என்பது வியக்கத்தக்கது.
இந்த விளம்பரங்களின் பரிணாம வளர்ச்சியும் சுவையானது. ஒரு பொருளையோ சேவையோ விற்பதற்கு விளம்பரங்கள் என்னென்ன மிகைப்படுத்தலை நயமாகச் செய்தன என அறிவது நமக்கொரு வெளிச்சத்தைத் தரும்.
தோல்வியடைந்த விளம்பரங்கள் பற்றியும் விவரமாக எழுதப்பட்டுள்ளது. அது போல இந்தியாவில் செய்யப்பட்ட விளம்பரங்களைப் பற்றியும் தரவுகளுள்ளன.
இப்படிப்பட்ட நூலை எழுதிய இரா. மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்!
இவையெல்லாம் படிக்கும் போது உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றும். நாம் எப்படி விளம்பரங்களால் ஏமாற்றப்படுகிறோம் என்று. எனக்கென்ன தோன்றுகிறது தெரியுமா? நான் ஒரு ஏமாற்றுத் துறையில் வேலை செய்கிறேனோ என்ற வெட்கம் தான். ஆம்! என் தொழில் டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் துறையில்!
இந்நூலைப் படிப்பதால் ஒரு தெளிவு வரும். எது தெரியுமா? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பது. இந்நூலைப் படித்து விளம்பரங்களால் ஏமாறுவதை தவிருங்கள் மக்களே!
விளம்பர வேட்டை ❤️ • இன்றைய விரைவுலகின் ஓட்டத்தில் நாம் உணராமலே பல இடங்களில் பல விதங்களில் பலதாலும் வேட்டையாடப்படுகிறோம். அதில் முக்கியமான ஒன்று நம் நுகர்வுப்போதை. ஏன் வாங்குகிறோம், எதற்கு இந்தப் பொருள் தேவை என்ற அடிப்படை புரிதலே இன்றி நாகரிகம், தனிமனித உரிமை, சுதந்திரம், மன நிறைவு, சமூக மதிப்பீடு என ஏதேதோ காரணங்களை நாமே நமக்கு ஒப்புவித்துக்கொண்டு தெரியாத ஓர் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். இதற்கான மையக்காரணிகளிலொன்று நாம் அனைவரும் வணிகங்களின் விளம்பர வேட்டைக்கு இலக்கானதுதான். • இரா. மன்னர் மன்னனின் எழுத்தில் இந்த நூல் விளம்பரங்களின் தோற்றம், வகைகள், தாக்கங்கள், பல்வேறு கால வரலாறுகள், வளர்ச்சி என விளம்பரங்களின் பல பக்கங்களை விளக்குவதோடு அதன் மறுமுனையில் இருக்கும் வாடிக்கையாளர் பக்கம் இருந்தும் பேசுகிறது. ஒவ்வொரு விளம்பரத்தின் பின் விரிக்கப்படும் வலையையும் அதில் சிக்கிய ஒருவனின் நுகர்வு இவ் உலகுக்கும் இயற்கைக்கும் ஏற்படுத்தும் விளைவுகளையும் வியப்போடு உணர வைக்கிறது இப்புத்தகம். • நாம் நமது உண்மையான தேவைகள் எவை என்று பூரணமாக உணர்வதும், அத்தேவைகளை நிறைவேற்றக்கூடிய தரமான பொருட்கள் சேவைகளை மட்டுமே நுகர்வதும்தான் நாமும் நம் நம்மைச் சார்ந்திருக்கும் இவ் இயற்கை உலகும் இவ் வேட்டையிலிருந்து தப்பிக்க ஒரே வழி. • • [“கழுதைகளைப் போல, குதிரைகளால் அழுக்குத் துணியைச் சுமக்க முடியாது என்றில்லை மாறாக, அவை தம்மீது அழுக்கை வைக்கச் சம்மதிப்பது இல்லை! அதனால்தான் அவை குதிரைகள். நாம் குதிரைகளா?கழுதைகளா? என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.” —அப்துல் ரகுமானின் ஒரு கவிதை]