தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா? என்பதே, ‘தீ’யின் அடிப்படையான கேள்வி. பல தடவைகளாக . . . வெவ்வேறான இடங்களில் . . . வித்தியாசமான பருவங்களில் . . . தீக்குள் விரலை வைக்கும் எத்தனங்களும், அவற்றுள் சிலவற்றில் ஏற்படும் தோல்வியும், சிலவற்றில் வெற்றி கொள்வதாக ஏற்படும் வீண் மயக்கமும், பின்னர் அவற்றின் பாலான விளைவுகள் தரும் வெம்மையிலும் பொசுங்கிப்போய்த் தறி கெட்டோடும் ஒரு மனிதனது கதையின் சில அத்தியாயங்களையே ‘தீ’ தொட்டுச் செல்கிறது.
Would putting a finger through fire give one any pleasure? Thee narrates the life story of a person, who at different stages of his life puts himself through flame-like situations more than once during different scenarios. A few of those incidents turned out be failures and a few gave him delusional victories, the effects of which later burnt his life to ashes. At the end of reading the novel, one gets a strong impression that, “A fire, which appears to be bright at a distance, when near would completely burn everything near it”.
எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார்.
தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா, 'ஞானோதயம்' என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.
இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய வ. விஜயபாஸ்கரனின் முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார். புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ. அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.
சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது