யவனராணி
ஏதோ சோகச்சிந்தனையில் மனம்போன போக்கில் புகார் கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் இக்கதையின் நாயகனும் புகார் நகர சோழப்படை உப தலைவனுமான இளஞ்செழியன் காலில் ஏதோ தட்டுபட கீழ் நோக்கிய அவன் கண்களில், நெருப்பில் உருகும் மெழுகே உருகக்கூடிய பேரழகு கொண்ட ஓர் ஏந்திழையின் உடலை காண்பதாக தொடங்குகிறது இப்பெரும் நாவல்...
காலில் இடர்பட்டவள் யார் என்பதில் தொடங்கி அவள் தன் நாட்டிற்கே எதிரி என்றும் தன் நாட்டில் ஆட்சியை பிடித்து ராணியாக முடி சூட வந்தவள் என்றறிந்த பின்னும் அவளை காணும் பொழுதெல்லாம் தனக்கென தன் அத்தை மகள் பூவழகி என்னும் ஓர் அழகிய வஞ்சிக்கொடி உள்ளதையும் மறந்து சற்று மனத்தடுமாற்றம் அடையும் சாதாரண மனிதனாகவே வலம் வரும் இளஞ்செழியன் ஒரு கட்டத்தில் நாட்டை காப்பாற்ற அவன் எதிர்கொள்ளும் அபாயங்களும் அதிலிருந்து மீள்வதும் அவனின் சிந்தனை திறமையை பறைசாற்றுகின்றன தவிர இறுதியில் உயிரையும் பணயம் வைத்து செய்யும் போர் அவனின் விரத்தை பறைசாற்றுகிறது.
இவர்கள் ஒரு புறம் இருக்க...
காற்றை விட வேகமாக ரதத்தில் வந்து போர் புரியும் மாவீரன் என்று பெயர் பெற்ற இளஞ்செட்சென்னியான தன் தந்தையையும் சூழ்ச்சியால் கொன்று, தன்னையும் யாருமறியா சிறை வைத்த தாயாதியிடம் இருந்து எவ்வாறு தப்பி பிழைத்தான் பின் வேளிர்,சேர மற்றும் பாண்டிய மன்னர்களின் கையில் சிக்கிய தன் நாட்டை தளபதி இளஞ்செழியன், மாமன் இரும்பிடர்த்தலையார் மற்றும் ஆசை நாயகி அல்லியுடன் சேர்ந்து எவ்வாறு மீட்டான் நம் சரித்திர நாயகன் திருமாவளவன் என்னும் கரிகாலன் என்பதே யவனராணி எனும் இந்நாவல்...
துறவறம் பூண்டு அடிகளாக நமக்கு அறிமுகமானாலும் தன் நாடு மாற்றார் கைக்கு செல்லாமல் இருக்க அடிகள் பிருமானந்தரும், க��ுவூர் சமண மடத்தின் சமண அடிகளும்,இளவல் கரிகாலனின் ஆசை நாயகியான அல்லியும்,இரும்பிடர்தலையாரும் செய்யும் ஒவ்வொரு பிரயத்தனங்களும் இளவல் கரிகாலன் மீதான அவர்களின் பேரண்பையும் நாட்டுபற்றையும் எடுத்துரைக்கிறது...
தன் ஆட்சியை தமிழகத்தில் ��ிறுவ வேண்டும் என்று வந்து காதல் என்ற ஒன்றிற்காக தன் இன்னுயிர் ஈந்த யவனராணியும், தன் குருவே ஆனாலும் அதனினும் மதிப்புடைய ராணிக்கு எதிரானதால் குருவையே எதிர்க்க துணிந்த அலீமாவும், தன் நாட்டிலிருந்து இங்கு வந்து தன் அரசை நிறுவி முடி சூட வேண்டும் என்ற குறிக்கோளோடு வந்தாலும் வந்த மாத்திரத்தில் இளஞ்செழியனிடம்
மனதை பறிகொடுத்த ராணி தன் நிலையிலிருந்து வழுவினாலும், தான் வந்த நோக்கத்திற்காக எதையும் செய்யும் ஒரு அசுரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் யவன கடற்படை தளபதியான டைபீரியஸ்சும் என்றும் மனதில் நிற்பார்கள்.
பொதுவாக கரிகாலன் என்றால்... எல்லாருக்கும் தெரிந்தது கல்லணையை கட்டிய மன்னன் ஒருவனே கரிகாலன் என்றும் இன்னும் பலருக்கு இவன் எதனால் கரிகாலன் என்றழைக்கப்படுகிறான் என்ற காரணமும் தெரிந்திருக்க கூடும்...
மேலும் கூறப்போனால் வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர் சிலருக்கு இவர் ஒரு சோழ மன்னன் என்றும் கூட அறிந்திருக்கலாம்...
ஆனால் இவன் இயர் பெயரென்ன இவன் ஆட்சி எத்தகையது, இவன் தந்தை பெயரென்ன மற்றும் இவன் எவ்வாறு ஆட்சியில் அமர்ந்தான் என்னும் வரலாறு இங்கு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
ஆம்..
ஏனெனில் இவ்வுலகிற்கே எடுத்துக்காட்டாய் நீர் மேலாண்மையிலும், நிர்வாக மேலாண்மையிலும், மக்களை போற்றுதலிலும், ஆட்சி அதிகாரத்திலும் சிறந்து விளங்க கூடிய பண்முக திறமை கொண்ட மன்னர்கள் பலர் இத்தமிழகத்தில் இருந்தும் அதை தன் மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் தன் பாட புத்தகத்தில் மௌரியர்களுக்கும், முகலாயர்களுக்கும் இடம் கொடுக்கும் ஒரு திறமையான அரசை வைத்துக்கொண்டு வெறும் பள்ளிப்புத்தகத்தில் கிடைக்கும் வரலாற்றை மட்டுமே படித்திருக்கும் சாமானியர்களை குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...