அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து, காமம் அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணிக்கிறது.இதிகாச காலந்தொட்டு, நவீன காலம் வரையான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற தேடலே இந்திர நீலத்தின் கதைகள்.விடுபட்ட, நிறைவேறாத, தோற்றுப்போன காதலையும் காமத்தையும் பேசுகின்றன அ.வெண்ணிலாவின் இக்கதைகள்.
அ. வெண்ணிலா (A. Vennila, பிறப்பு: 10 ஆகத்து 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
மனிதனைத் தவிர விலங்குகளுக்கிடையேயான காமம் என்பது தலைமுறை விரிவாக்கம் என்பதுடன் நின்று விடுகிறது.. விலங்குகளில் பாலியல் தேடுதல் என்பது குட்டிகளோ, குஞ்சுகளோ பிறப்பதோடு நின்று போகிறது. விலங்குகளுக்கு காமம் உணவைப் போன்ற பசியல்ல , மனிதனுக்கும் அப்படித்தான் ஆனால் மனிதனை அப்படி புலன்களை அடக்கி வாழ்வது இயலாத ஒன்றாகவே மாறிப்போயிருக்கிறது அல்லது மாற்றப்பட்டிக்கிறது.
இக்காலம் பாலியல் தீர்வுகளை ஒழுக்கம் தாண்டிய வரை முறையிலேயே வகைப்படுத்தப்படுகிறது. இது உடலின் சுதந்திரம் என்ற முறையில் மீறப்படுவதையோ அது சார்ந்து நிகழும் வன்முறைகளையோ பாலியல் சார்ந்த மன நோய்கள் குறித்தான விளைவுகளோ இச்சமூகத்திற்கு முக்கியமானதாக படுவதேயில்லை.
குழந்தை பெறுதலுக்குப் பின்னான பாலியல் என்பது குற்றம் என்று காந்தியும், நமது பெரும் ஆன்றோர்களும் நம்பியதும் அதன் வழி நடந்ததும் முரணாகி விடுமா.
புலனடக்கி பேரின்பம் பெறுவது என்பதும் அடக்காமல் காமத்துள் துய்வதால் கிட்டும் சிற்றின்பமும் ஒன்றாகி விடுமா.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் என்பது பொதுவாக இருந்தும் ஆண்களுக்கு ஒரு நியதியும், பெண்களுக்கு ஒரு நியதியுமாக எப்படி மாறியது. பெண்ணிற்க்கான பாலியல் சுதந்திரம் வரையறைகுள் எக்காலத்தில் வைக்கப்பட்டது.
வெண்ணிலாவின் இந்திர நீலம் கதையைத் தவிர அவர் தேர்ந்தெடுத்த கதைகள் இதிகாச புராணத்தின் பெண் மாந்தர்களின் பாலியல் சார்ந்த சிந்தனைகளை புனைவுருவாக்கம் என்ற பெயரில் அபத்தமாக்கியிருக்கிறார். இதிகாசத்தின் வழி புனைவுருவாக்கம் என்பது இக்காலத் தலைமுறையிடம் என்ன விதமான தேடல்களை தரும் .
இன்றைய இணையவழிக் காலம் பாலியல் சார்ந்த உணர்வுகளுக்கு பெரும் திறப்பைக் கொடுத்த நிலையில், இக்காலத் தலைமுறை பெண்களுக்கு அது அரு மருந்தாக மாறிவிட்டதா?
இதிகாச புராணங்களின் கதை மாந்தர்கள் அவர்கள் அவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எந்த தீங்கோ முரண்பாடோ இல்லை அவர்களால் இன்றைய தலைமுறை பெண்களுக்கும் எவ்விதமான ஒழுக்க நிந்தனையும் உருவாக போவதில்லை...
புனைவுருவாக்கத்தின் வழியும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் பெரும்பான்மை கொண்ட மக்களின் நம்பிக்கையில் தோன்றிய தெய்வத் தன்மை கொண்ட மாந்தர்களை பாலியல் சார்ந்து சிந்தனை கொண்டு கொச்சைப் படுத்துவதால் என்ன சாதிக்கப்போகிறது இந்த எழுத்தாளர் சமூகம்.
மேலும் புனைவுருக்காத்திற்கும் அபுனைவருக்கத்திற்குமான வேறுபாட்டை பிரித்தறியும் முறையை இக்காலச் சந்ததிக்கு புரிய வைக்க இச்சமூகம் எவ்வகையில முற்பட்டிருக்கிறது.
பெண்கள் பாலியலில் சார்ந்து வாழ்வியலை சிந்திப்பதும் தீர்மானிப்பதும் தான் இன்றையக் கால நடைமுறை ஆகி விட்டதா. அடிப்படை புரிதலில் பெரும் தவறுகளோடே முரண்களால் நகர்த்தப் பட்டிருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. பெரும் நெருடல்களோடே வாசிக்க முடிந்த புத்தகம்..
பெண்ணின் காமம் - பெண்ணின் மாதவிடாய் போலவே வெளிப்படையாக பேசக் கூடாத,தனக்குள்ளேயே மறைத்து வைத்துக் கொள்ள கற்பிக்கப்பட்ட பல விஷயங்களில் ஒன்று.ஒரு வேளை,அந்த மனதிற்குள்ளேயே தனக்குள்ளாகவே கூட பேச கூசும் விஷயத்தை ஒவ்வொரு பெண்ணும் தடையின்றி பேசினால்,இல்லை இல்லை,வெளிப்படையாக அல்ல.வெறும் டைரி குறிப்பாக என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாமே.அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்…இது வரை,தன் மனசாட்சியிடமே கூட பேச தயங்கிய,அதனால் அந்த உணர்வை விளக்க வார்த்தைகளே இல்லை என்ற நிலை நிலவும் பொழுது,அதற்கு வார்த்தைகள் கிடைத்து கொட்டி தீர்த்தால்…8 பெண்களின்,அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில்(ஆமாம்!உணர்வை வெளிப்படுத்த தடை செய்வதும்,தான் அனுபவிக்கும் அந்த உணர்வை வார்த்தைகளால் வடிக்கவாவது அனுமதி மறுக்கப்படுவது போல அந்த உணர்வுக்கான அகராதியே அறியாமல் வளர்க்கப்படுவதும்,தட்டுத்தடுமாறி தன் தேவை இதுவென அறிந்து தன்னுள் தன்னைப்பற்றியே எண்ணற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வாதாடி,சமரசம் செய்து கொண்டு(கவனிக்க,அப்பொழுதும் அவள் ஜெயிப்பதில்லை!
இந்திர நீலம். இந்த புத்தகம் எட்டு சிறுகதைகள் கொண்டுள்ளன. அனைத்திலும் பெண்களை முன்னிலை படுத்தி கூறியுள்ளார். இந்திர நீலம் இக்கதையில் நவீன கால கணவன் மனைவியின் இருவர் இடையிலுள்ள உடலுறவு வாழக்கைப் பற்றி கூறுகிறார் காமத்தை முழுமையாக்கவே ஒரு பெண்ணின் உடலின் அழகும் மனதின் காதலும் வேண்டியிருக்கிறது. பயிர்தலின் மட்டுமே காமம் முழுமை பெறுகிறது என்று அழகாக முன்னுரையில் ஆசிரியர் கூறியுள்ளார். இதிகாச காலம் தொட்டு நவீன கால பெண்ணின் மன பக்கங்களை வாசிக்க படாதவை ஏராளம். காமம் ஒரு மறைக்க பட்ட ஒளிமயமற்ற தலைப்பாகவே இருக்கிறது. சமூகத்தில் கூட காமத்தின் பகிர்தல் மிகவும் குறையதாகவே உள்ளது. பெண்களின் காதல் மட்டும் தோற்றுப்போனதாக நினைக்கும் ஆண்களெல்லாம், இங்கு எத்தனை பெண்களின் மோகத்தை தொலைத்திருக்கிறார்கள் என்று யாரும் அறியவில்லை. அன்பிற்கும் காமம் அடக்கம் காமதிற்கும் அன்பு அடக்கம் இரண்டையும் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். காமத்தின் கட்டுப்பாடும் வெளிப்படையில்லாத உணர்வுகளும் பெண்கள் எவ்வாறு சமூகத்தில் சூழ்நிலை கைதிகளாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் பெண்ணின் பார்வையிலிருந்து ஆண்களின் காமம் சார்ந்த உறவுகள் எப்படி உள்ளது மற்றும் காமத்தின் சிக்கலைப் பற்றியும் அந்த பார்வையிலிருந்து பெண்களின் மண பக்குவமும் ஆண்களின் அடக்குமுறையும் அனைத்து விதமான பிரச்சனைகளும் சொல்லுகிறார். காமம் என்பது நீங்கள் பேச வேண்டிய ஒன்று, அதை உங்கள் துணையுடன் விவாதிப்பது முக்கியம் என்கிறார். பெண்களுடைய உள்ளம், காமம், மாதவிடாய், குடும்பம், குழந்தை, சமூகம் என அனைத்து விதமான உணர்வுகளின் வெளிப்பாடான இப்புத்தகம் பிரதிபலிக்கிறது. பெண்களின் மனம், உடல் சார்ந்த உணர்வுகளை ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு வெளிப்படையாக கூற முடியுமோ அனைத்தையும் எடுத்துரைத்துள்ளார். இதில் காமம் மட்டும் முக்கிய இடத்தை பெறவில்லை அதையும் தாண்டி ஒரு பெண்ணின் உணர்வை பற்றிய வாழ்க்கை வரைமுறைகள், சமூகத்தின் கோட்பாடுகள் ஆகியவை பேசுகிறது.
பெண்கள் எந்த காலத்திலும் தனக்கான ஆசைகளையும் பாலுணர்வு சார்ந்த விருப்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாமல் வெடித்தெழுந்த பெண் கதை மாந்தார்களை கொண்டு சொல்ல முடியாததையும், சொல்ல கூடாததையும் சொல்லியிருக்கிறார் வெண்ணிலா அவர்கள்.
#268 Book 29 of 2024- இந்திர நீலம் Author- அ.வெண்ணிலா
“உடலற்ற ஆன்மா வினால் துன்புறுவோரின் உள்ளங்கைக் கோத்து ஆறுதல் சொல்ல முடியுமா? அழும் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு அன் பைச் சொல்ல முடியுமா? உயிருக்குப் போராடும் ஜீவனுக்கு ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முடியுமா? உடல் வேண்டும். உடலின் வழியாகத்தான் உலகத்து உயிர்கள் அன் பை உணர்கின்றன.”
“மகளிர் தினத்திற்காக” எங்கள் “தமிழும் அமுதும்” குழுவில் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்க வேண்டியதாய் இருந்தது. “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகம் தான் ஒவ்வொரு முறையும் இந்த மாதிரியான பொழுதுகளில் நினைவு வரும். ஆனால் அதை இப்போது பலரும் படித்தாயிற்று. ஏதாவது ஒரு புதிய புத்தகத்தை, ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒன்றை தேர்ந்தெடுப்போம் என்று நான் நினைத்து செலவிட்ட ஒரு இரவின் புதையல் தான் இந்த புத்தகம். படித்த எல்லாருமே இதை வெகுவாக ரசித்தார்கள்.
என்ன மாதிரியான புத்தகம் இது? பெண்களைப் பற்றிய படைப்பு தான், ஆனால் பெண்களுக்கான படைப்பு மட்டும் அல்ல, சமுதாயத்திற்கான ஒரு படைப்பு. இதிகாசம் முதல் இன்றைய கால பெண்கள் கதைகள் வரை இதில் ஆசிரியர் பேசுகிறார். எல்லா காலக்கட்டத்திலும் காமத்தைப் பற்றிய பார்வை, சமுதாயம் பெண்களின் மீது திணிக்கும் கோட்பாடுகள், கட்டுப்பாடுகளில் மட்டும் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை பேசுகிறது.அன்பு, காதல், காமத்தைப் பற்றிய ஒரு புரிதல் இதன் மூலம் கிடைக்கும். காமம் என்பது வெளிப்படையாக பேச வேண்டிய ஒன்று, அதை மனசுக்குள் பூட்டி வைப்பதால் தான் புரிதலின்மையும்,குழப்பமும் ஏற்படுகிறது.
முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் ஆழ் மனதில் இருந்து தான் இதில் ஒவ்வொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்ணின் உடல் பற்றிய புரிதல்,அவளது தேவை, அவளது மனம் பற்றிய ஆழமான படைப்பு தான் இந்த புத்தகம்.