Parenting has been a buzz word in recent years and Corona have added more pain keeping children at home. Is it really tough to handle kids? Going near the kids and understanding them will free the parents. In these articles, lets explore children's world and presenting you some innovative approaches on handling them.
குழந்தை வளர்ப்பு என்பது எளிமையானது ஆனால் முதல் நாம் குழந்தைகளின் உலகினை புரிந்துகொள்ளவேண்டும். இந்த கட்டுரைகள் அவர்கள் உலகினை புரிந்துகொண்டும் நம் உலகினையும் வாழ்வினையும் எளிதாக்க உதவும்.
வளர்ந்த அனைவருக்குமே இன்பம் நிறைந்த குழந்தைமையை மீண்டும் அடைய ஆவலும் பேரவாவும் எப்போதுமுண்டு. ஆனால் இந்நூலாசிரியர் ஏன் அடைவோம் என்னாமல் நெருங்குவோம் என்கிறார்? குழந்தைமையை நெருங்குதல் என்றால் என்ன?
குழந்தைகளுடன் எப்போதும் இருப்பது குழந்தைமையை நெருங்குவதாகாது. அவர்களின் உள்ளத்தை நெருங்க வேண்டும். மாறாக அதைச் செய்யாதே அங்கே போகாதே சத்தம் போடாதே என்று நெருக்கக்கூடாது. அது வெறுப்பையே ஏற்படுத்தும்
கதை நம்மை எளிதில் குழந்தைகளின் அருகில் கொண்டுசெல்லும். நேரமின்மையாலும் கதையறியாமையாலும் கதைசொல்லும் பழக்கம் அரிதாகிறது. கதை குழந்தைகளின் உலகையும் கற்பனையையும் விரியச்செய்யும். நம் தாத்தா பாட்டி ஏன் நமக்குக் கதை கூறினர்? அவர்கள் பொழுது போக்குவதற்கா?
எங்கள எல்லாம் யாரு இப்டிப் பாத்துப்பாத்து வளத்தா? இப்ப என்ன புதுசா புள்ள வளக்குறாகளாம் என்னும் முந்நாளிந்நாள் குழந்தைகளால் அவர்கள் உடனில்லாததே கூட்டுக்குடும்பமாக இல்லாது தனித்தனியாகக் குடும்பங்கள் ஆனதே ஒருபெருஞ்சிக்கல் என்றறிந்தால் வருந்துவதன்றி வேறென்ன இயலும்
கதைசொல்வது போல் குழந்தைகள் கூறும் கதைகளைக் கேட்கவும் வேண்டும். கதையை அடுத்தது கலைபழகல். வாழ்வின் நெருக்கடிக்கிடையில் நமக்கு உயிர்வளர்க்கக் கலை தேவை. குழந்தைகளுக்கோ கலை பெருங்களிப்பைத் தருவது. கலையின் பயனை மதிப்பெண் போல் தேர்வுத்தாளிலன்றி குழந்தைகளின் உள்ளத்தில் காணவேண்டும்
சற்று வளர்ந்தபின் தன்னுடைய அன்றாட வேலையைச் செய்யக் குழந்தைகளைப் பழக்குவதில் சிறுசிறு குறை பொறுக்கவும் புதுமுயற்சியைப் பாராட்டவும் பெற்றோர் கற்க வேண்டும். இப்பாராட்டைக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் செய்யலாம். அனைவர் மனமும் ஏங்குவது ஒரு சிறு பாராட்டிற்குத்தானே
குழந்தைகளோடு வானம் பார்த்தல் நடை பயில்தல் அவர்கள் கூறும் கதைகளைக் கேட்டல் குழந்தைகளோடு உரையாடல் போன்ற இன்பங்களை நுகர இந்நூல் உந்துகிறது
தொலைக்காட்சியின் தீமையை மட்டுமே பேசாமல் குழந்தைகளுக்கு அவற்றால் கிடைக்கும் நன்மையைக் கூறுகிறது
குழந்தைவளர்க்கப் பெரிய காதுகள் வேண்டுமாம். அவர்கள் கூறுவதை முழுமனதோடு கேட்பதும் உரையாடுவதும் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தரும். எப்போதும் பெற்றோர் துணை இருப்பர் என்ற நம்பிக்கை குழந்தைக்கு இன்றியமையாதது. குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலமே குழந்தைமையை நெருங்க முடியும்
இவ்வாறெல்லாம் என்னை எழுதவைத்த இந்நூல் கரோனா காலத்தை முன்னட்டையில் குறிப்பிட்டாலும் இனி எக்காலத்திற்குமான குழந்தைவளர்ப்பு நூலாகத் திகழ்கிறது