நிலவுப் பெண் சீவிச் சிங்காரித்து... ஒளி வீசும் மேனியுடன்... மென்மையான நாணத்துடன், வானில் மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்க, நட்சத்திரப் பட்டாளங்கள் தோழியாய்க் கூடவே துணைக்குப் போக... வெண் மேகங்கள், நிலவுப் பெண்ணிற்குப் பட்டுக் கம்பளம் விரித்து... வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்க... என்று வானமே மிக ரம்யத்துடன் காணப்பட்டது. இரவு பத்து மணி.மாடி போர்டிகோவில்... பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தார், சதாசிவம்.மார்கழிப் பனியோடு... தோட்டத்து மலர்களின் வாசமும் இணைந்து, பின்னிப் பிணைந்து, அவரைத் தீண்டி நகர்ந்தது. அந்தக் குளிர்ந்த பனித் தென்றலை ஆழ்ந்து சுவாசிக்க, குளிரெடுத்தது. சால்வையை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டார்.