திராவிட நாடு கொள்கையை ஒத்திவைத்தபிறகு திமுக முன்னெடுத்த முக்கியமான கொள்கை முழக்கம், மாநில சுயாட்சி. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எழுபதுகளின் தொடக்கத்தில் மாநில சுயாட்சி கோஷத்தை உரக்க ஒலித்தது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற புதிய கோஷம் தமிழகம் முழுக்க ஒலித்தது. அது, டெல்லியிலும் எதிரொலித்தது.
அப்போது மத்திய, மாநில உறவுகள், மத்திய அரசின் அதிகாரங்கள், மாநில அரசுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முரசொலி மாறன் எழுதிய நூலே இந்த மாநில சுயாட்சி. இது நான்கு பாகங்களைக் கொண்டது. கூட்டாட்சிக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி முதல் பாகமும், இந்தியாவில் கூட்டாட்சிமுறையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இரண்டாம் பாகமும், இன்றைய அரசியலமைப்புச் சட்டம் பற்றி மூன்றாம் பாகமும், எதற்காக மாநில சுயாட்சி கோரப்படுகிறது என்பது பற்றி நான்காம் பாகமும் விவரிக்கின்றன.
மாநில சுயாட்சி என்பது இந்தியாவைத் துண்டு துண்டாக வெட்டுவதற்குத் தூக்கப்படும் கொடுவாள் என்றும் ஒருமைப்பாட்டு உணர்வுக்குஎதிராக வைக்கப்படும் வேட்டு என்றும் தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்வோர் அல்லது பிறரைக் குழப்ப முனைவோர் ஆகிய இரு சாராருக்கும் அளிக்கப்பட்டுள்ள விரிவான விடைதான் மாறன் எழுதிய இந்த விளக்க நூல் என்று புத்தகத்துக்கான அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.
பிரிவினையை முற்றிலும் ஒருமித்த முடிவாகக் கைவிட்டபிறகு; அந்த லட்சியங்களை – அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முறையில், இந்திய ஒற்றுமைக்குச் சிறிதும் குந்தகம் ஏற்படாத வகையில், அரசியல் சட்டத்தைத் திருத்தி, அடைவதற்கு; திமுக பின்னர் ஏற்றுக்கொண்ட மார்க்கம்தான் மாநில சுயாட்சி என்கிறார் முரசொலி மாறன்.
மத்திய, மாநில உறவுகள் குறித்த விவாதங்கள் பரவலாகக் கிளம்பியுள்ள இந்தச் சூழ்நிலையில், மாநில சுயாட்சி நூல் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. இந்தியக் கூட்டாட்சி முறை குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.
"State Autonomy is our Birth Right" - முரசொலி மாறன்
முரசொலி மாறன் எழுதிய "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?" தான் அவர் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். பின்னர் க. திருநாவுக்கரசு எழுதிய "முரசொலி மாறன்" என்கிற புத்தகம் அவர் மீதான பிரமிப்பை கூடியது. அதன் பின் “மாநில சுயாட்சி” , "திராவிட இயக்க வரலாறு பாகம் 1" ஆகிய புத்தகங்களை வாங்கி வைத்தேன். இன்றளவும் கூட்டாட்சி(Federalism) பற்றியும் மாநில சுயாட்சி(State Autonomy) பற்றியும் தெள்ள தெளிவாக தமிழில் அறிய வேண்டும் என்றால் இந்த நூல் நிச்சயம் உதவும்.
ராஜமன்னார் குழு அறிக்கை வெளியான பின்பு திமுகழகம் இரா. செழியன் மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அதன் மூலம் கட்சி கொள்கைகளில் மாநில சுயாட்சி பற்றிய சில பரிந்துரைகளை இந்த குழு வழங்கியது.
இந்த சூழலில் தான் மாறன் அவர்கள் இந்நூலை எழுத தொடங்குகிறார். 1961 இந்திய -சீன போர் நடந்த சமயத்தில் திமுக "திராவிட நாடு" கொள்கையை பிரிவினை முழக்கமாக அல்லாமல் ஒன்றியத்துக்குள் இருந்துகொண்டே "சுயாட்சி" முழக்கமாக தகவமைத்து கொண்டது. இந்த காலத்தில் தான் பிரிவினைவாத தடை சட்டம் கொண்டு வர பட்டது திமுகவின் வளர்ச்சி பொறுக்காமல் தான் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் சொல்ல படுகிறது.
அதன் பின் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் மாநில சுயாட்சி முழக்கம் முக்கியத்துவம் பெற்றது. ஆட்சிக்கு வந்த இரண்டாடுங்களில் அண்ணாவின் மறைவால் கலைஞர் தான் மத்திய-மாநில அரசுகள் இடையிலான உறவுகளை(Center- State Relations) ஆராய திரு. ராஜமன்னார் தலைமையில் ஒரு குழு அமைக்க படுகிறது.(இவர் திட்டக்குழுவின்(Planning Comission) முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது) . இந்த வரலாற்று சூழலில் தான் “மாநில சுயாட்சி” புத்தகம் கவனம் பெறுகிறது. இது எமெர்ஜென்ஸிக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் ஆட்சி கலைப்புக்கு ராஜமன்னார் குழுவும் அது ஏறபடுத்திய விவாதங்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
கலைஞர், பேராசிரியர் , நாவலர், என அனைவரும் இந்நூலுக்கு வாழ்த்துரை எழுதியுள்ளார்கள். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிற மாநிலங்களுக்கும் பரப்பப்ப பட வேண்டும் என்று பேராசிரியர் கோரிக்கை வைத்துள்ளார்.
கூட்டாட்சியின் அடிப்படைகளை, அது வளர்ந்து வந்த விதத்தை பற்றி எல்லாம் முதல் பகுதி பேசுகிறது. உலகத்தில் இருக்கும் பிற கூட்டாட்சிகளுக்கும் இந்தியாவின் போலி கூட்டாட்சிக்கும்(Quasi-federal) உள்ள அடிப்படை வித்தியாசங்களை குறிப்பிடுகிறார். அனைத்தும் தரவுகளின் அடிப்படையில் எழுதுதப்பட்டிருக்கிறது. ஒருவொரு பக்கத்தின் கீழேயும் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்புகள்(Footnotes) வாசிப்பை எளிமை ஆக்குகிறது.
அரசியலை அமைப்பு சட்டத்தின் மீது பல்வேறு விமார்சனங்களை அடுக்குகிறார் மாறன். அனைத்தும் நியாமான கேள்விகள், விமர்சனங்கள்.
Government of India Act(1935)ல் மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை விட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்(1950) மாநிலங்களுக்கு அதிகாரம் குறைவானதே. எமெர்ஜென்ஸிக்கு பிறகு இது இன்னும் குறைந்தது, தற்போது வரி விதிக்கும் அதிகாரம் கூட இல்லாமல் மாநிலங்கள் திருவோடு சுமக்கும் அளவுக்கு கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றன.
மாநில சுயாட்சி இந்தியாவை வலிமையானதாகவே ஆக்கும் என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏற்க மறுகிறார்கள். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. வளர்ச்சியா பதவியா என்றால் முன்னதை விட பின்னதை தான் தான் பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த விமர்சனங்களை எல்லாம் தீர்க்கதரிசனத்தோடு மாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மாநில சுயாட்சி கேட்பதற்கு வெறும் நிர்வாக காரணங்கள் மட்டும் இல்லை, பண்பாட்டு காரணங்கள், நிலவியல் காரணங்கள், மொழியியல் காரணங்கள், பொருளியல் காரணங்கள் என பல்வேறு காரணங்களை கூறி " மாநில சுயாட்சி எங்கள் பிறப்புரிமை" என்றும் சொல்கிறார்.
இப்படி, 70களில் வந்த புத்தகமே தெளிவாகவும் ஆழமாகவும் மாநில சுயாட்சிக்கான காரணங்களை முன்வைத்த போது அமைதியாக இருந்துவிட்டு 50 ஆண்டுகள் கடந்து தான் பல மாநிலங்கள் இதன் தேவையை உணர தொடங்கியுள்ளார்கள்.
இங்கு சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை, அரசியல் அழுத்தமும், ஆட்சியாளர்களிடம் விருப்பமும் இருந்தால் அதிகார அமைப்பில் சில தளர்வுகளை ஏற்படுத்தி மாநிலங்களை சுயாட்சி மிக்கதாக மாற்றலாம்.
பொருளாதாரத்தில் தாராளவாதமும் நிர்வாகத்தில் அதிகார மையப்படுத்தலையும் கடைபிடிப்பதன் மூலம் Crony Capitalism,Corruption, Administrative Ineffeciency போன்றவை தான் அதிகரிக்க செய்யும்.
மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக மாநில சுயாட்சியை செயல்படுத்துவது காலத்தின் கட்டாயமாக அமையும்.