புத்தகம் : கனவின் துடுப்பு எழுத்தாளர் : சங்கமித்ரா பக்கங்கள் : 115
💫இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்து , இதை வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தோழி சங்கமித்ராவிற்கு நன்றி.
💫இந்தப் புத்தகத்தை பிரித்தவுடன் மனதில் தோன்றியது பஞ்சுமிட்டாய் தான், அதுபோலவே ஒவ்வொரு கவிதையும் ருசியாக இருந்தது.
💫ஒருநாள் , இரவு உணவு உண்கையில் , ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது, சிறுவன் பாலசந்திரனை இலங்கை ராணுவம் கொன்று விட்டதென்று…. ஈழம் பற்றியும் , ஐயா பிராபகரனை பற்றியும் அப்போது எனக்கு தெரியாது . பின்னாளில் தான் , தெரிந்து கொண்டேன். “முள்வேலி” என்னும் தலைப்பில் உள்ள கவிதையை வாசித்த பிறகு , இந்த நினைவு வந்தது. (ஐயா பிராபகரன் அவர்களை குறித்த புத்தகத்திற்கு , இப்போது தான் பதிவு செய்துள்ளேன் , 2022-ல் வாசிக்க வேண்டும் . )
💫நாமாக நாம் இருப்பதாலே, பல இடங்களில் பேச முடிவதில்லை.
💫“ஐந்து தடைகளும் மலை உச்சியில் வள்ளுவரும் “ என்னும் தலைப்பில் . ஐயன் வள்ளுவனின் குறளைப் பற்றி கூறியிருப்பது அருமை .
💫பெட்டிக் கடை அண்ணாச்சியிடம் , ஆசை சாக்லேட் வாங்கி சாப்பிட்டது , இன்னும் பசுமையாக இருக்கிறது .
💫நான் பள்ளி மற்றும் கல்லூரியை ஒரே நிறுவனத்தில் தான் படித்தேன். அதனால் ஏறக்குறைய பத்து வருடங்களாக ஒரே பேருந்து நிறுத்தத்தைத் தான் பயன்படுத்தினேன். விடுமுறை முடிந்து ஒரு திங்கட்கிழமை காலை வந்தபோது அந்த மரத்தை காணவில்லை …. சாலை விரிவாக்க பணிக்காக எடுத்துவிட்டார்கள் … அன்று நிழலுக்காக அலைந்தேன் … நாளை ஒருநாள் உணவு மற்றும் தண்ணீருக்கு அலையும் அவலம் நேரும் .
💫இறுதியாக “பெண் என்றால் " என்னும் கவிதை என்னை வெகுவாகக் கவர்ந்தது.
💫சங்கமித்ராவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள், புத்தகத்தை வாங்க நினைப்பவர்கள், அவரை அனுகலாம் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
#177 Book 18 of 2023- கனவின் துடுப்பு Author- சங்கமித்ரா
“நாம் ஏன் இன்னமும் பழக்கப்படவில்லை ஒரு மரணத்தை எதிர்கொள்ள ஒரு மரணத்தை ஏற்றுக்கொள்ள நீயும் நானும் ஒரே இடத்திலேயே இருக்கிறோம் வாழ்ந்தாலும் மறைந்தாலும்.”
புத்தகத்தை முடித்து முழுதாய் ஐந்து நிமிடம் ஆகிறது. இன்னமும் இதிலிருந்து மீளவே முடியவில்லை.இது தான் ஆசிரியரின் முதல் புத்தகம் என்று நம்ப முடியாத அளவுக்கு இது ஒரு அழகான நேர்த்தியான படைப்பு. தமிழே அழகு தான்.இவரது கவிதைகள் தமிழுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது என்று சொன்னாலும் அது மிகை ஆகாது.அட்டைப் படம்,book mark,அணிந்துரை என எல்லாமே அழகாக,இயல்பாக,ஆழமாக இருக்கிறது.
நிறைய வகையான கவிதைகளை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது இந்த புத்தகம். உரையாடல் கவிதை ஒவ்வொன்றும் சமூகத்தையே பிரதிபலிக்கின்றன.எல்லா தலைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு கவிதைத் தொகுப்பு இது.எல்லா வகையான உறவுகள்,நட்புகள்,வெற்றிகள்,தோல்விகள்,பறவைகள்,விலங்குகள்,சமூகக் கோட்பாடுகள்,நீதி நெறிகள்,கனவு,ஏக்கம்,ஏமாற்றம் என எதில் இல்லை இதில் என்று யோசனை செய்யும் வகையில் அத்தனையும் இருக்கிறது.
ஒவ்வொரு கவிதையும் ஆழமான ஒரு தாக்கத்தை நம்முள் விட்டுச் செல்லும்! அதிலிருந்து மீள வழியும் இல்லை.மீளவும் எனக்கு விருப்பமில்லை.
கவிதைகள் என்றாலே அழகுதான். அத்தகைய அழகிற்கு அழகு சேர்க்கும் காதல் கவிதைகளையும் ஹைக்கு கவிதைகளையும் தாண்டி ஓர் தனித்துவ கவிதைத் தொகுப்பாக அமைந்துள்ளது சங்கமித்ரா அவர்களின் "கனவின் துடுப்பு".
சங்கமித்ரா அவர்கள் இப்புத்தகத்தை எனக்கு அனுப்பி வாசிக்க கேட்டிருந்தார். ஓர் ஆழமான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்திய இப்புத்தகத்தின் வருகையே எழில் மிகுந்ததாய் இருக்க, அதன் கவிதை வடிவங்களும் மனதைக் கவர்ந்தன. வெவ்வேறு குறியீடுகளாகவும், எண்கள் மற்றும் எழுத்து வடிவங்களாகவும், Whatsapp உரையாடல்களைப் போலவும் கவிதைகளைக் காட்சிப்படுத்தியிருந்தது அருமை. ஒவ்வொரு கவிதை வரியின் முதல் எழுத்தும் தத்தமது தலைப்பின் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பெற்ற விதம் வியக்க வைத்தது.
ஒரு மனிதனின் உணர்ச்சி நரம்புகள் அனைத்தையும் துள்ளி எழ வைக்கும் தன்மை பெற்றவை கவிதைகள். அத்தகையை எழுச்சிமிக்க ஒரு கருவியை கொண்டு, அகதிகளின் வாழ்வு, ராவண வதம், தமிழக மீனவர்களின் அவல நிலை ஆகியவற்றை எழுத்தாளர் விளக்கிய விதம் நெஞ்சை உருக்கியது.
குழந்தைப் பருவத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய வேப்பமரத்தை நினைவூட்டிச் செல்கிறது, வெட்டப்பட்ட அந்த நூற்றாண்டு கண்ட மரம். "வடகம் திருடிய காகம்" என் மனதையும் திருடிச் சென்றது.
மனதிற்கு பிடித்த பாடலை முனுமுனுக்க உடன் யாருமில்லாத குறையை, "தனிமை" தந்த போதும், "தாய்க்குப் பின் தாரமாய்" தாங்கி நின்றது தமிழ்.
'சுதந்திரம்', 'சினேகிதி', 'அப்பா' போன்ற கவிதைகள் அருமை. சில நேரங்களில் தென்றலாக வருடி பின் புயலாக தாக்கும் இக்கவிதைப் புத்தகம் அனைத்து வயதினரும் படிக்க வேண்டிய ஒரு படைப்பு.
சங்கமித்ராவின் இம்முதல் புத்தகம் அவருக்கு மட்டுமன்றி சமூக சீர்திருத்தத்திற்குமான முதல் வெற்றிப் படியாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன்.
புது எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தமையால் கனவின் துடுப்பு கண்டிப்பா வாங்கியே ஆகனும்னு plan பண்ணி வாங்கினேன். நிறைய புத்தகங்கள் மறுவாசிப்பு பண்ண ஏற்றதா இருந்தாலும் கவிதை புத்தகங்கள் தான் எனக்கு அந்த list ல first உ. எப்போ படிச்சாலும் எத்தனையாவது முறை படிச்சாலும் கவிதை அதான் தரம் ,அது புகுத்தும் உணர்வு குறையாது. சரி , கனவின் துடுப்புக்கு வரேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் படிக்க ஆரம்பிச்சேன். கவிதை ல கருத்து சொல்றது பல பேர் பண்ணாலும் அது நிறையா இடங்கள் ல ஒரு preachy feel அ தந்துறும். இங்க சங்கமித்ரா ஓட எழுத்துல அது எதார்த்தாம அதற்கான வனப்போட இருக்கு.எழுதின விசியம் ,எழுத்து நடை அத present பண்ண விதம் எல்லாம் 👌👏.முக்கியமா எனக்கே ஆச்சரியமா இருந்த ஒரு விசியம் என்னான என்னால கவிதை புத்தகம் வழியா புதிய வார்த்தைகள் கத்துக்க முடியும்னு நானே நினைச்சிருக்க மாட்டேன். வாசகர்கள் எல்லாரும் கண்டிப்பா இந்த புத்தகம் வா நான் கேட்டுக்குரேன்.
கனவின் துடுப்புகள் சென்று கொண்டே இருக்கின்றன செந்தாமரையை விரியச் செய்யும் செங்கதிரவனின் உதயத்தை நோக்கி
புத்தகம் : கனவின் துடுப்பு கவிஞர் : சங்கமித்ரா பக்கம் :116 பதிப்பகம் : மணி ஆப்செட்
ஒரு கவிதை தொகுப்பு என கையில் இப் புத்தகத்தை எடுத்த எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது. கேட்கப்படாத பல சமூகக் கேள்விகளின் தொகுப்பு. வித விதமான சிந்தனைகள் கொண்ட கவிதைகள் மட்டும் அல்லாமல் அவற்றை எழுதியிருக்கும் விதத்திலும் வேறுபட்டு தனித்தன்மையுடன் திகழும் விதத்தில் அமைந்திருக்கிறது இந்த படைப்பு.
நம் ஈழச்சகோதரர்களின் ஆதங்கத்தில் தொடங்கி அன்றாட வாழ்க்கையின் எதார்த்தங்கள், பெண்கள் சுதந்திரம் வரை பல முறை எழுதப்பட்டவை ஆனாலும் இதுவரை எழுதாத கண்ணோட்டம் கவிஞரின் எண்ண ஓட்டம்.
சில கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன, சில மீண்டும் வாசிக்க வைக்கின்றன, சில கடந்து போக முடியாமல் அங்கேயே நிற்க வைக்கின்றன!! மொத்தத்தில் ஒரு நல்ல கவிதை என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து மன ஓடத்தில் கடந்து செல்கிறது கனவின் துடுப்பு.
எல்லா கவிதைகளும் பிடித்திருந்தாலும் அதிகம் விரும்பிவை.
*எதற்கு? *சில நேரங்களில் சில அடையாளங்கள்.. *எண்ணம் போல் வாழ்க்கை *மூன்றாம் உலகப் போர் *தலைப்பு ஒன்று வேண்டும் என்றார்கள் *பசியும் சிரிப்பும் *ஆறாம் திணை *எனக்காக நான் இருக்கையில் *காணாமல் போனவர்கள்