கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, தாழக்குடி பகுதி, வீரநாயணமங்கலம் சிற்றூரில் பிறப்பு. நெல், தென்னை, வாழை சூழ்ந்து, மேற்கில் பழையாறு, வடக்கில் தேரேகால் ஊர் எல்லை. இயற்பெயர் சுப்பிரமணியம். பெற்றோர் கணபதியாபிள்ளை, சரஸ்வதிஅம்மாள். பிறந்தநாள் 31.12.1947 பிழைப்பு தேடி பம்பாய் பயணம் செய்து, பம்பாய் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் தனியார் நிறுவனம் ஒன்றிலும் தினக் கூலியாகச் சில காலம். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தர், பண்டகக் காப்பாளர், தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரிந்து விற்பனைப் பிரிவின் மேலாளராக இந்தியா முழுக்கப் பயணம். 1939ல் கோவைக் கிளைக்கு மேலாளராக மாற்றம் பெற்று 2005 ல் ஓய்வு தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சூரத் பக்கமிருக்கும் நவ்சாரி என்னும் நகரைச் சார்ந்த தொழில்நிறுவனம் ஒன்றுக்கு தமிழ்நாட்டுப்பிரதிநிதியாகப் பணிபுரிகிறார். 1977ல் வெளியான தலைகீழ் விகிதங்கள் எனும் முதல் நாவல் பரவலான கவனிப்புப் பெற்று பத்து பதிப்புகள் வந்து, 20,000 படிகள் விற்றுத்தீர்ந்துள்ளது.தங்கர்பச்சான் இயக்கத்தில் சேரன் கதாநாயகனாக நடித்து, சொல்ல மறந்த கதை எனும் பெயரில் திரைப்படம் ஆயிற்று. என்பிலதனை வெயில் காயும் (1979), மாமிசப் படைப்பு (1981), மிதவை (1986), சதுரங்கக் குதிரை (993), எட்டுத்திக்கும் மதயானை (1998) என்பன பிறநாவல்கள், பல பதிப்புக்கள் கண்டவை. இவற்றுள் எட்டுத்திக்கும் மதயானை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது, Against All Odds (2009) எனும் தலைப்பில். இவர் எழுதியது இன்றுவரை 127 சிறுகதைகள், தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(1981), வாக்குப் பொறுக்கிகள் (1985), உப்பு(1990), பேய்க்கொட்டு (1994), பிராந்து (2002), நாஞ்சில் நாடன் கதைகள் (2004), சூடிய பூ சூடற்க (2007), கான்சாகிப் (2010), முத்துக்கள் பத்து (2007), நாஞ்சில் நாடன் சிறுகதைகள் (2011), சாலப்பரிந்து (2012) கொங்குதேர் வாழ்க்கை (2013) இவரது சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு கவிதைத் தொகுப்புகள். மண்ணுள்ளிப் பாம்பு (2001), பச்சை நாயகி (2010). கடந்த பத்துஆண்டுகளாக, கட்டுரை இலக்கியத்துக்கு இவர் பங்களிப்பு சிறப்பானது. திருப்புமுனை எனக் கருதப்படுபவை. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (2003), நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (2003), நதியின் பிழையன்றுநறும்புனல் இன்மை (2006), காவலன்காவான் எனின் (2008), திகம்பரம் (2010), பனுவல் போற்றுதும் (2001), கம்பனின் அம்பறாத்துணி (2013), சிற்றிலக்கியங்கள் (2013), எப்படிப் பாடுவேனோ (2014) என்பன கட்டுரைத் தொகுப்புகள். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை காலம் நிகழ்த்திய மாற்றங்கள் எனும் முதல் நூல், இன வரைவியல் எழுத்துக்கு தமிழில் முன்னோடி. காய்தல் உவத்தல் அற்ற கள ஆய்வு தீதும் நன்றும் எனும் தலைப்பில் 20082009 காலகட்டத்தில் இவர் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைத் தொடர் பெருத்த வாசக கவனிப்பைப் பெற்று, நூலாகி பல பதிப்புகள் கண்டது. தமிழ் பயிற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் இவரது நாவல்கள் பாடமாக இருந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இவரது படைப்புகளை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
#252 Book 13 of 2024- சதுரங்கக் குதிரை Author- நாஞ்சில் நாடன்
நான் படித்த இரண்டாவது நாஞ்சில் நாடன் நாவல் இது. அவரது சிறுகதைகளை விட அவரது நாவல்கள் தான் என்னை மிகவும் கவர்கிறது. சாமானிய மனிதனின் கதை,மண் மணம் மாறாத மொழி நடை,கதைக்காக எதுவும் திணிக்காமல் அதன் போக்கில் இயல்பாய் நகரும் கதை ஓட்டம்,ஒரு தெளிந்த ஓடை போல! இது தான் எனக்கு அவரது நாவல்கள் பிடிக்கவும் திரும்ப திரும்ப படிக்கவும் காரணம்.
இந்த கதை மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நாராயணன் பற்றிய கதை.தந்தையை சிறு வயதிலே இழந்த அவனை அவன் தாய் தான் படாத பாடு பட்டு வளர்க்கிறாள்,அவளது அண்ணனிடம் கடன் வாங்கி அவசர செலவுகளை சமாளிக்கிறாள். நாராயணன் வேலைக்கு போன பின் தாய்க்கு தன்னால் முடிந்த அளவு பணம் அனுப்புகிறான். ஒரு நாள் அவளும் இறந்து போகிறாள். நல்லது,கெட்டதுக்கு மட்டுமே ஊருக்கு வர முடிகிறது அவனால்.40 வயது நெருங்கியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை,அவன் தாய் இறந்ததும் எந்த உறவினரும் இவனது திருமணம் பற்றி பெரிதாக எதுவும் செய்யவில்லை.வாழ்க்கை போகும் போக்கில் கதை நகர்கிறது.நாராயணன் வாழ்க்கை எப்படியெல்லாம் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப் படுகிறது என்பது தான் கதை.
வட்டார மொழி,எல்லா குடும்பத்திலும் பார்க்கும் எதார்த்த உறவு சிக்கல்கள் என முழுக்க முழுக்க இது ஒரு எதார்த்தமான படைப்பு, வழக்கமாக நாவலில் தேடும் happy ending/perfect ending போல இவரது கதையின் முடிவுகள் இருக்காது. ஆனால்,ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
நான் படிக்கும் நாஞ்சிலின் முதல் நாவல். சரியாக என்னால் உள்வங்க முடியவில்லை என்றெ தோன்றுகிறது. கதை நாயகனின் பார்வையில் செல்கிறது. சில இடங்கலில் குழப்பமாக இருந்தது. ஒரு சீரான நதி போல் கதையும் கதை மந்தர்கலும் வந்து செல்கிறார்கள்.
நாஞ்சிலின் கம்பனின் அம்பாரதுணி மற்றும் அவரின் கட்டுரை தொகுப்பு மிக அருமையக இருக்கும்.
நாஞ்சில் நாடன் படைப்புகளுக்கே உரிய சாமானியனின் மனப்போராட்டங்களின் கதை .முதிர்கண்ணன் ஆகிய நாராயணனின் ப்ரஹ்மச்சரியமும் அதற்கான காரண காரியங்களும் அதன் முடிவுமே இந்த புதினம். நாகர்கோயில் மண்ணை சேர்ந்தவர்களுக்கு நாஞ்சில் நாடனின் படைப்புகள் ஒரு கொடை. கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினம் .