"கிராமம் நகரம் மாநகரம்" - (“நா.முத்துகுமார் கட்டுரைகள்” தொகுப்பு)
கல்கி வாராந்தரியில் 2003க்கு முன்பு வரை, வெளிவந்த 23 கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ஒவ்வொரு கட்டுரையின் வரிகளும் கவிதை வரிகளுக்கு ஒப்பானவை.
திரு நா.முத்துகுமார் தன்னுடைய கிராமத்தில், நகரத்தில், மாநகரத்தில் தான் சந்தத்த மனிதர்கள், அஃறிணைகள், உயர்திணைகள் பற்றிய தனது அனுபவங்களையும், கிராம-நகர-மாநகரதுக்குள்ளான ஏற்ற தாழ்வுகளையும், கவித்துவ கட்டுரைகளாக எழுதியுள்ளார்.,
கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் என்பதை விட, அவரது அனுபவங்களை கவிதைகளாக காட்சிபடுத்தியிருக்கிறார் எனலாம். அதனை வாசிக்கையில், அக்காட்சிகள் சினிமாவின் பாடல் கனவுக் காட்சிகளை போல வண்ணமயமாகவும் இதமாகவும் உணரவைக்கிறது.
இருப்பினும், எப்போதும் போல ஒருவித மென்சோக இழையும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெற்று வருகிறது.
ஒரு சில இடங்களில் எழுதப்பட்டிருக்கும் உண்மைகளையும் உவமைகளையும் வாசிக்கையில், நம்மையறியாமலேயே புன்னகைத்து கொண்டிருப்போம்.
திரு நா.முத்துக்குமார் படைப்பின் வாசிப்பு அனுபவத்தை சிலாகிப்பதைவிட., அவரை வாசிப்பதே வாழ்க்கைக்கான 'பெரும் அனுபவம்' எனலாம்.
நினைவில் காடுகள் என்ற கட்டுரையின் பெயரில் "அம்பை" அவர்களின் முன்னுரையும்
பால்ய நதி என்ற கட்டுரையின் பெயரில் "சி.மோகன்" அவர்களின் முன்னுரையும் புத்தகத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இடம்பெற்ற கட்டுரைகைளின் பெயர்கள்:
1. நினைவில் காடுகள்
2. பால்ய நதி
3. கன்னிகாபுரம் - காஞ்சிபுரம் - சென்னை
4. நினைவில் காடுள்ள மிருகம்
5. உறைந்து போன நதி
6. விண்மீன்களின் ரகசியம்
7. ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை
8. நெடுநாள் வடை
9. காட்டுமிராண்டியின் கால்தடம்
10. தேள் விழும் தாழ்வாரம்
11. A B C D
12. ரசம் உதிரும் கண்ணாடிகள்
13. சைக்கிளாற்றுப் படை
14. உயரங்களுடன் சூதாட்டம்
15. சக்கரம் கட்டிய வண்ணத்துப்பூச்சி
16. மழைக்கு ஒதுங்கும் மாடார்
17. சண்முகசுந்தரத்தின் சதுரக் காதல்
18. டீ சாப்பிடுங்க தோழர்
19. மைதானத்தில் விளையாடுபவன்
20. குறிஞ்சிப் பாட்டு
21. சித்தார்த்தன் புத்தனான இரவு
22. பென்சில்கள் கூர்தீட்டப்படுகின்றன
23. ரயிலின் கடைசிப் பெட்டியும் ஐன்ஸடீனின் பியானோவும்
புத்தகத்திலிருந்து....
\
அப்பா பயமில்லாத ஒரே ஒரு மனிதன் ஆதாம் மட்டுமே. நம் பால்யங்கள் நம்மை ஆதாமாக மாறவே தூண்டுகின்றன.
/
\
குகைகளில் வாழ நேர்ந்தபோது தீ நமக்கு கடவுளாக இருந்தது. உணவுக்கும், வெளிச்சத்துக்குமான தீ. சிக்கிமுக்கி கற்களில் உரசி உருவான தீ. மனிதனின் முதல் விஞ்ஞானத் தீ.
இரவுகளில் தீயை பாதுகாக்கவும், மிருகங்களிடமிருந்து தப்பிக்கவும் ஆண் காவல் புரியவேண்டி வந்தது. ஆண் குகை வாசலை பார்த்து அமர்ந்திருக்க, இரவுகள் பூச்சிகளின் சத்தத்துடன், நீண்டுகொண்டே இருந்தன. அந்த குகைவாசலை இன்னமும் யுகங்கள் தாண்டி, ஒவ்வொரு ஆணின் உதிரத்திலும் ஒளிந்தபடி துரத்திக் கொண்டிருக்கிறது.
இன்றும் நான் எந்த உணவகம் அல்லது தடைக்குச் சென்றாலும், வாசல் பார்த்த நாற்காலிகளையே தேர்வு செய்து அமர்கின்றேன் . நான் மட்டுமல்ல, எல்லா ஆண்களின் முதல்தேர்வும் வாசல் பார்த்த நாற்காலிகளே. அது காலியாக இல்லாத பட்சத்தில்தான் மற்ற நாற்காலிகள். பெண்களுக்கு இந்த வாசல்களின் துரத்தல் இல்லை. தன்னிச்சையாக அவர்கள் இருக்கை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
/
\
'ஒரு மனிதனின் முழு வாழ்க்கையும் அவனுக்கு கிடைக்கும் பால்யத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது' என்கிறார் சிக்மண்ட் ப்ராய்ட்.
3 வயது முதல் 15 வயது வரை உள்ள அனுபவங்களும், அலைக்கழிப்புகளும்தான் நம் ஆளுமையை உருவாக்குகின்றன. இன்றைக்கும் உலக இலக்கியங்கள் பல, பால்யத்தில் இருந்துதான் தன் மூலப் பொருளை எடுத்துக்கொள்கின்றன.
/
\
எங்கிருந்துதான் முளைக்கின்றன இந்த பொன்வண்டுகள்? வசீகரிக்கும் வண்ணங்களுடன் எப்படி வந்து முள் மரங்களில் படர்கின்றன?
கொரிகலிக்காய் தழைகளைத் தின்றுவிட்டு பச்சை நிறத்தில் கழிவுகளும், மஞ்சள் நிறத்தில் முட்டைகளுமாய் எவ்விதம் நிறம் கிடைக்கின்றன?
கைகெட்டும் தூரத்தில் கருவண்டுகள் இருந்தாலும் நமது இலக்கு. முதல் நிற வேற்றுமை இங்கு தொடங்குகிறது.
/
\
மார்கழி மாதங்களில் விடியலில், இரவெல்லாம் வானம் சிந்திய பனித்துளிகளைக் கவிதைகளாய் மொழி பெயர்த்து வைத்திருக்கும் பூசணிப் பூக்கள்.
/
\
நகரத்து காதலை பெரும்பாலும் தட்டச்சு பயிலகங்களே முன்மொழிகின்றன. ASDFGF க்குள்ளும், LKJHJ குள்ளும் எத்தனையோ ஆண் பெண் விரல்கள் ஒளிந்திருக்கின்றன . சில விரல்கள் ஒன்று சேர்க்கின்றன. சில விரல்கள் அழிக்க முடியாத ரேகைகளுடன் பிரிகின்றன.
பாம்புகளைப்போல காகிதங்களை சுருட்டிக்கொண்டு தட்டச்சு பயிலங்களில் இருந்து வெளியே வரும் ஆண்களும் பெண்களும் காலத்தின் சுழற்சி எங்குதான் செல்கிறார்கள்?
/
\
மாநகரம் வெற்றிகளின் பாதையில் உறவுகளை பலிகொடுத்தபடி விரைந்துகொண்டிருந்தது.
/
\
வீடுகளுக்கும் உயிர் உண்டு. வெறும் செங்கல்லும், சாந்தும், கூரையும், ஜன்னலும் கதவும் கொண்டு உருவானதல்ல வீடு. வீடுகள் கருவறையின் கதகதப்பை தருபவை. காட்டுக் குகைகளின் பாதுகாப்பை மீட்டுருவாக்கம் செய்பவை. வேட்டையாடி வீடு திரும்புகையில் குளிர்ந்த காற்றால் கேசம் வருடுபவை.
/
\
என் தந்தை தமிழாசிரியர் என்பதால் அவரது சேகரிப்பில் கிட்டத்தட்ட 40,000 புத்தகங்கள் எங்கள் வீட்டில் இருந்தன. எங்கள் வீடு முழுக்க புத்தகங்கள். புத்தக மூட்டைகளுக்கு நடுவில்தான் தூங்குவேன். காற்றடிக்கும் மாதங்களும் மழையடிக்கும் வேலைகளும் எங்களைப் பாதுகாப்பதை விட புத்தகங்களை பாதுகாப்பதே எங்கள் கவலையாக இருந்த காலம் அது.
/
\
இன்று பிறந்த பெண் குழந்தை ஒரே நாளில் இளம் பெண்ணாக மாறுவதைப்போல ஒரே நாளில் எப்படி கட்டடம் முளைக்க முடியும்? கடந்த ஆறு மாதங்களாக ஓலைகளால் மூடப்பட்ட சாரங்களுக்கு உள்ளே அந்த கட்டடம் ரகசியமாக வளர்ந்திருக்கிறது. மாநகரத்து தெருக்கள் தோறும் மழைக் காளான்கள் மாதிரி கட்டடங்கள் திடீர் திடீரென்று முளைக்கின்றன. வீட்டை கட்டிப்பார் என்பார்கள். வீடு கட்டுவதை பார்க்கக்கூட அனுமதிக்காமல் மாநகரத்தில் வீடுகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன.
/
\
" வேர்கள் என்பது
பூமியைத் தொட நினைக்கும்
மரத்தின் கிளைகள்.
கிளைகள் என்பது
வானத்தை தொட முயலும்
மரத்தின் வேர்கள்."
- தாகூர்(' வழி தப்பிய பறவைகள்' தொகுப்பிலிருந்து)
/
\
சிவபெருமானுக்கு அடுத்ததாக நெற்றிக்கண்ணுடன் அலைவது ரயில்வண்டி மட்டுமே. ரயில்வண்டி, நகர்ந்து செல்லும் ஆயிரம் ஜன்னல் வீடு.
/
\
" நாம பொறந்து வளர்ந்த ஊரை நாம முழுமையா தெரிஞ்சிக்கணும் தோழர்...அப்பத்தான் நம்மை நாம புரிஞ்சிக்க முடியும். நம்மை நாம் புரிஞ்சிகி��்டாதான் நம்ம சமுகத்தை புரிஞ்சிக்கமுடியும்."
/
\
ஒரு பூ பூக்கிறபோது ஒரு புன்னகை பிறக்கிறது. பூ என்பது செடிகளில் வரையப்பட்ட சின்னஞ்சிறு ஓவியம். வாசனை ஊற்றி எழுதப்பட்ட கவிதைத்தாள். மெல்லிதழ் கண்ணாடியில் நகலெடுத்த குழந்தை முகம். நிறங்களின் மொழிபெயர்ப்பு. சந்தோஷ வடிவில் ஒரு கண்ணீர்த் துளி. பனி தூங்கும் மென்மெத்தை. பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய ரகசிய செப்பேடு.
/
\
மாநகரத்துக்கு குழந்தைகள் பால்யத்தை கடக்கையில் நாய்க்குட்டி வளர்ப்பதும், மீன் தொட்டி அமைப்பதும், வேட்டை சமூகத்தின் காட்டு நிழலன்றி வேறு என்ன?
/