இதற்கு முன்னர் பூமணியின் எந்தப் படைப்பையும் வாசித்ததில்லை. ஆனால் இனி ஒவ்வொன்றையும் தேடித் தேடி வாசிக்க வேண்டும் என்னும் வேட்கையை உண்டாக்கிவிட்ட நாவல் ‘பிறகு’.
நெடுநேரம் யோசித்தும் நாவலுக்கு ஏன் ‘பிறகு’ என்று தலைப்பிட்டார் என அடைபடவில்லை. நாவலின் மையப் பாத்திரமான அழகிரி தன் வாழ்வில் எத்தனை எத்தனையோ இன்னல்களைக் கண்ட பிறகும் இத்தனைக்கும் ‘பிறகு’ம் வாழ வாழ்வு உண்டு என வாழ்வை அதன் ரசத்தோடு வாழ்கிறானே அதனால் வைத்திருப்பாரா? இல்ல, பெறகு பெறகுனு பெறகு போட்டு கேட்க அத்தனை கதைகள் இந்த நாவல் மனிதர்கள் வாழ்வுல இருக்கே அதனால ‘பிறகு’னு வச்சாரா? சரியா சொல்லத் தெரியல.
சுதந்திரத்திற்கு பிற்பாடு ஒரு கிராமத்தில் ஏற்படும் சமூக அரசியல் மாற்றங்களை , அது சந்திக்கும் சுக துக்கங்களை, நல்லது பொல்லதுகளை அவ்வவ்வாறே பதிவு செய்திருக்கும் நாவல் தான் ‘பிறகு’.
கதையின் பெரும்பகுதி ஊர் சக்கிலியக் குடியைச் சுற்றியும் சார்ந்தும் எழுதப்பட்டிருப்பினும் கதை எந்த விதமான சார்பும் இன்றி நடுநிலையோடு நகர்கிறது. சக்கிலியன், பகடை, போன்ற பதங்களை சர்வசாதாரணமாக நாவலில் பயன்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். காரணம், அந்த காலகட்டத்தில் சமூக நிலைமை அப்படித் தான் இருந்துள்ளது. அதற்காக சக்கிலிய மக்களுக்கு எந்த உரிமைகளும் இல்லையா? கை கட்டி மார்பொடுக்கி தலை குனிந்து தான் அவர்கள் மேல் சாதிகாரர்களிடம் பேச-நடக்க-பழக வேண்டுமா என்றால், இல்லை. முழுக்க அப்படி இல்லை போல. தாழ்ந்த சாதி(என பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தால் கருதப்பட்டவர்கள்/படுகிறவர்கள்) வெகு சாதாரணமாக மேல்குடி(என பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தால் கருதப்பட்டவர்கள்/படுகிறவர்கள்) மக்களுடன் நையாண்டித் தனத்துடன் பேசிப் புழங்கி இருந்திருக்கிறார்கள். என்ன, அந்த மேல்குடிகாரர் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துடன் இருக்க வேண்டும். காவக்கார கந்தையா அப்படிப்பட்டவர் தான். நல்ல சொத்து சொகத்துடன் இருந்து பின் நொடிந்து போன ‘வாழ்ந்து கெட்ட’ மனிதர். அவரைப் போலவே அவர் மனைவியும் நல்ல மனுசி. ஊர் பெரியவர்கள் வில்லுச்சேரிக்காரர், அப்பையா, குருசாமி நாயக்கர் ஆகியோர் சிறிய மனம் படைத்தவர்கள். சுப்பையா ஆசாரி, நடுக்கடை சங்கரலிங்கம் பிழைப்பை மட்டும் பார்க்கும் உழைப்பாளி ரகம். பெஞ்சாதியை அப்பையாவின் தாகத்துக்கு நனைக்கக் கொடுத்துவிட்டது கூட தெரியாத மாடசாமி , ஊர்காலி மாடு மேய்த்து ஊர் நன்மைக்கென மொட்டை அடிக்கப்பட்டு கரும்புள்ளி குத்தப்படும் கருப்பன் போன்றோர் ஏமாளி ரகம், அழகிரி மனைவி ஆவுடை, ஓய்ந்த காலத்தில் குடிக்கத் தண்ணீர் எடுத்துத் தரக்கூட ஆளற்ற சக்கண்ணன், ஓடித் தேடி பொண்ணெடுத்து பட்டாளத்துக்கு சென்று பவுசான மகனால் கைவிடப்படும் மருமகள் வீட்டாருடன் பேசவும் முடியாமல் , நீங்கவும் முடியாமல் தவிக்கும் முத்து மருகன், பெற்ற தாயாலேயே கைவிடப்படும் சோலை, கட்டியவனை கைவிட்டு, பெற்ற பிள்ளையை கைவிட்டு, நம்பிக்கையாய் மறுகை சேர்ந்து , கூடி உண்டாகி , மகவு ஈனி, பொல்லா விதியால் வெசனங்கொண்டு தன்னையும் மாய்த்து, பால் குடி மாறா மகவையும் மாய்த்து, சார்ந்த எல்லோர் வாழ்க்கையிலும் ‘வடு’வான அழகிரி மகள் முத்துமாரி போன்றோர் சோக ரகம். இப்படிக் குறைவான கதை மாந்தர்களே நாவலில் திரும்பத் திரும்ப வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை மட்டுமே திரும்பத் திரும்ப வேறு வேறு சந்தர்பங்களில் சொல்லப்படுகிறது. அதனால் கதையுடனும், களனுடனும், அதன் மனிதர்களுடனும் ஒட்டியே பயணிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘பிறகு’ நாவல் ஒரு நல்ல வாசிப்பனுபவமாகவும், சுதந்திரத்திற்கு பிறகான காலத்தில் தென் தமிழகத்தின் கிராமத்தில் சாதிகளுக்கிடையேயான புழங்குமுறை, புரிதல் எவ்வாறிருந்தது என்பதை ஒருவாறு ஊகிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறது.