ஒரு நூல் வாசிப்பவனைத் தேடலில் ஆழ்த்தும். மேலும் மேலும் பல்வேறு நூல்களை வாசிக்கச் செய்யும் என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று, அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் என்ற நூலை எனது நண்பன் எனக்குக் கொடுத்துச் சென்றபோது பல்வேறு கட்டுரைகளைக் கொண்ட நூலை நாமும் அவ்வப்போது ஒவ்வொரு கட்டுரையாக வாசிப்போம் என்று இருந்தேன், அண்ணே பிராங்க், மோட்டார் சைக்கிள் டைரிஸ் போன்ற நூல்களைப்போலத் தொடர் நிகழ்வாய் அல்லாமல் கட்டுரைகளாய் அமைந்திருந்த இந்த நாட்குறிப்பு மாலை நேர சிற்றுண்டி போல ஒரு சில புத்தகத்தின் இடையே படித்துக்கொண்டிருந்தேன், போகப் போகத்தான் தெரிந்தது இது நமது கொலப்பசிக்கான கறி விருந்து என.
ஏதும் செய்யாத செடியின் மீதே அன்பு செய்யாத குழந்தை எப்படி மனிதர்கள் மீது அன்பு செய்வார்கள். என்ன மாதிரியான ஒரு உலகத்தை நாம் விட்டுச் செல்கிறோம் நம் குழந்தைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் என்கிற அச்சமும் குற்ற மனமும் வயதாக வயதாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. என்ற வரிகள் சமகால அவசர உலகையும் இனி வரக்கூடிய உலகின் நிலையையும் குறித்த கேள்வியை நம்மைத் தூங்கவிடாது துரத்தத் தொடங்குகிறது. அட வாங்க தம்பி ஒரு டீ சாப்பிட்டுப் போகலாம் என்கிற மாதிரி எளிதாகவும் சிக்கலும் சந்தேகமுமற்ற அன்பு ததும்புவதாகவும் இருந்த நம் வாழ்க்கையை நம் கைகளிலிருந்து பறித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எப்படி மௌனப் பார்வையாளர்களாக நாட்களைக் கடத்த முடியும்?” என்ற கேள்வியும் உடன் தொற்றிக்கொண்டு.
குழந்தைகளும் புத்தகங்களும் என்ற தலைப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு கதையின் வாயிலாகக் குழந்தைகளின் பார்வையில் புத்தகம் என்னவாக எல்லாம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்
“ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் புத்தகத்தையும் ஒரு விளையாட்டுப்பொருளாக மாற்றிவிடுவதை நாம் பார்க்கலாம். என் தம்பி மகள் கீர்த்திகா ஒருமுறை புத்தகத்தை ஒரு பானையாகக் கற்பனை செய்து அதை அடுப்பில் ஏற்றிச் சமையல் செய்து கொண்டிருந்தாள். மூன்று கல் மீது புத்தகத்தை வைத்துக் குனிந்து ஃப்பூஃபூ.. என்று புகையை ஊதி நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டிருந்தாள்.சமையல் முடிந்து அப்புத்தகத்தைத் துணியால் பிடித்து (சுடுமே!) இறக்கி வைத்தாள்.நான் அப்போது உள்ளே புகுந்து “பாப்பா.. பெரியப்பாவுக்கு வயிறு பசிக்கு..சாப்பாடு போடு “என்று சப்பணம் கூட்டி உட்கார்ந்தேன். சிரித்துக்கொண்டு அவள் பக்கத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து என் முன்னால் வைத்தாள்.இதுதான் சாப்பாட்டுத் தட்டா என்று கேட்டேன். தலையில் அடித்துக்கொண்டு, புத்தகத்தை விரித்து வைத்து இது இலை.. அதுகூடத் தெரியலியே என்று சொல்லிவிட்டு இலையில் தண்ணீர் தெளித்தாள். பிறகு சமைத்த பாத்திரமான புத்தகத்தைப் பக்கத்தில் கொண்டு வந்து அட்டையைத் திறந்து சாதத்தை எடுத்துப் போட்டாள். சாம்பார் விடுங்க.. என்று நான் கேட்க அவள் இன்னொரு பக்கத்தைத் திறந்து கரண்டியை உள்ளே விட்டு சாம்பார் ஊற்றினாள்.இன்னொரு பக்கத்திலிருந்து ரசம்,இன்னொரு பக்கத்திலிருந்து காய்கறி என்று கலக்கி விட்டாள்.சதுரமான புத்தகத்தை உருண்டையான பானையாக்கிய அவளின் கற்பனை வளத்துக்கு முன்னால் இந்தப்பாண்டிய நாடே அடிமைதான்.”
இந்த வரிகளைப் படித்தபின்பு எனது அக்கா குழந்தைகளிடம் கெஞ்சலாகக் கூட அந்தப் புத்தகத்தைக் கிழித்துவிடாதே என்று கேட்பதில்லை, அழகிரிசாமியின் கதையில் வரும் குழந்தைகள் போல நானும் அவர்களுடன் புத்தகங்களைக் கீழே கொட்டி விளையாட ஆரம்பித்து விடுகிறேன் அவர்களும் புத்தகங்களை அழகாகத் துடைத்து அடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
இப்படியாகத் தொடங்கும் புத்தகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட்டுகளின் லத்தி அடி பாதிப்புகள் அவர்கள் போராடிய வரலாறு குறித்த நூல்கள் என ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு தாக்கங்கள் கொடுக்கிறது, எந்தப் பணியில் இருப்பவராக இருந்தாலும், குறிப்பாக அரசியல் துறையில் பணியாற்றுபவர்கள், இலக்கிய வாசிப்பை தம் அன்றாட வாழ்வின் பகுதியாக மாற்றிக்கொள்ளாவிட்டால் இறுக்கமான அறிக்கைகளாக தம் முகங்கள் மாறிப்போவதைக் காண்பார்கள். என்ற கருத்துக்கள் தொட்டு வாசிப்பின் அவசியத்தை நூல் முழுதும் பேசிவருகிறார், ஒரு நாட்குறிப்பு என்பது ஒருவரின் மனதில் ஓடும் ஒளிவு மறைவற்ற என்ன ஓட்டங்கள் என்றே எப்போதும் நான் கருதுவேன், அதன் வாயிலாகத் தமிழ்செல்வன் அவர்கள் இந்தச் சமூகத்தின் மீது எத்தனை அக்கறை வைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்துகொண்டேன்.