தற்காலக் கன்னட நாவல்துறையைத் தம் படைப்பால் கணிசமாக வளப்படுத்திய ஸ்ரீரங்காவின் குறிப்பிடத்தக்க படைப்பு.
இரண்டு பாகங்கள் கொண்ட சிறிய நாவல் இது. முதல் பகுதி முதலில்லாதது, இரண்டாம் பகுதி முடிவில்லாதது. முதலில்லாததும் முடிவில்லாததுமான மனித மன இயக்கத்தையே கதை நகர்வாகக் கொண்ட படைப்பு. இதன் அமைப்பு ஒரு வகையில் ஒரு அவரம் விதைபோல ஒன்றையன்று நிரப்பும் இரு பகுதிகள்.
ஹேமா ஆனந்ததீர்த்தனின் [புனைபெயர்] மொழியாக்கம் சரளமாகவும் நுட்பமாகவும் இருக்கிறது. உண்மையில் அவருக்குப் பின்னர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு இத்தனை சிறப்பாக மொழியாக்கம் செய்யும் எவருமே அமையவில்லை.
Adya Rangacharya, a novelist, scholar, actor, dramatist, director and a renowned scholar contributed his entire life to Kannada theatre, becoming a cultural icon of his times. Adya Rangacharya adopted the pseudonym of Sriranga for most of his plays and literary works.
இதுவொரு விநோதமான நாவல். நீங்கள் தஸ்தயெவ்ஸ்கியின் சுவைஞராய் இருந்தாலோ அல்லது கடலளவு பொறுமை கொண்டவராக இருந்தாலோ இந்த நாவலை முயற்சித்து பாருங்கள். மொழியாக்கம் சிறப்பாகவே அமைந்துள்ளது. Pdf-வில் கிடைக்கிறது.
ராமண்ணா ஒரு எழுத்தாளன். அவனது மனைவி சரளா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் கிடக்கிறாள். இந்நிலையில் தன் வீட்டில் வாழும் குமுதாவுக்கும் ராமண்ணாவுக்கும் உறவு ஏற்படுகிறது. இவ்விருவரின் மன ஊசலாட்டமே "முதலில்லாததும் முடிவில்லாததும்".
மொத்தமே மூன்று கதாபாத்திரங்கள் தான். ராமணன்னா மற்றும் குமுதா ஆகிய இருவரின் அகத்தையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராய்கிறது இப்படைப்பு.
இந்த இருவரின் ஆழத்தையும், சிடுக்குகளையும் நாம் நுண்ணோக்கியில் பார்ப்பதை போல உணர்வோம். அதுவே இப்படைப்பின் வெற்றி என்று நான் கருதுகிறேன்.
மிகவும் அந்தரங்கமான நாவல் இது. யாரோ முகம்தெரியாத இருவருடைய நாட்குறிப்புகளை அவர்களுக்குத் தெரியாமல் படிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. யாராவது நான் படிப்பதை பார்த்துவிடுவார்களோ என்று அச்சங்கொண்டு அவ்வப்போது சுற்றும்முற்றும் விழியோட்டியபடியே படித்து முடித்தேன்.
நாவல் முழுவதும் கதாபாத்திரங்களின் நினைவோட்டமாகவே அமைந்துள்ளது. இந்த கூறுமுறையானது மிகவும் புதுமையானதாகவும், படிப்பவர்களுக்கு ஒருவித கனவுநிலையை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
இந்த நாவலை படிக்கும் போது கிறிஸ்டோபர் நோலன் படத்தை பார்ப்பது போன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. "காலம்" என்ற வஸ்து-வை கரும்பு மிஷினில் நுழைத்து நசுக்கிப் பிழிந்துவிட்டது இப்படைப்பு.
இந்த புத்தகத்தை Good reads-யில் என்னோடு சேர்த்து மொத்தமே மூன்று பேர் தான் படித்திருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.
நேசனல் புக் டிரஸ்ட் பதிப்பகம் 1991-ல் இப்புத்தகத்தை தமிழில் வெளியிட்டுள்ளது. எப்போதும் போல் மறுபதிப்பு செய்யப்படவில்லை. ஆனால் ஆகூழாக இந்த நாவலை நான் புத்தக வடிவில் தான் படித்தேன். எனக்கும் என்னுடைய புத்தகத்திற்கும் ஒரே அகவை :-)