நீங்கள் சந்தித்த வெவ்வேறு வகையான மனிதர்கள், எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தனர். புத்தகம் ஏன் படிக்க வேண்டும் என்ற புரிதலே இல்லாமல் இருப்பார் அருமை. ஆனால் அதன் முக்கியத்துவத்தை சரியாக கணித்து(அறிவு), உங்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார். புளி சாதம் போதும் என்று நீங்கள் கூறிய போதும், இன்னொரு அம்மாவிடம் இருந்து சப்பாத்தி வாங்கி கொடுத்த விசாலமான மனது கொண்ட பாட்டியை போன்றோரும் உள்ளனர்; தேய்ந்து போன படத்திற்கு வரவழைத்து, இரண்டு மணி நேரம் வேலை வாங்கி, ஒரு டீ கூட வாங்கி கொடுக்க மனமில்லாத மனிதர்களும் உள்ளனர்.
பாடல்கள் மனதுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன என்று, ரயிலில் ஒல்லி மனிதர் மொழிபெருக்கியில் பாடல்கள் போடும் போது உணர முடிகிறது. நிலங்களை, நினைவுகளை பாடல்கள் மீட்டு எடுக்கின்றன. பாதி பாடல்கள்தான் எனக்கு தெரிந்திருந்தன. எல்லாப் பாடல்களையும் கேட்டேன். (Playlist ன் Spotify link) இசையை ரசிக்க, பணம், காசு தேவை இல்லை; மனம் மட்டும் இருந்தால் போதும்.
எந்த உடைமைகள் மீதும் ஒட்டுதல் இல்லாமல், நினைத்த நேரத்தில் சட்டென்று ஒரு இடத்தை விட்டு கிளம்பி விடுகிறீர்கள். ஆனால் பென்சிலை தூர எறியாமல் வைத்துக் கொண்டதை, எழுதுவதின் மீது நீங்கள் கொண்ட பெரும் பற்றாகவே பார்க்கிறேன்.
அப்போது கிடைத்த வெவ்வேறு அனுபவங்கள் மனதின் உள்ளே சென்று, பல்வேறு கதைகளின் வழியாக வெளியே வந்திருக்கிறது. ஜானின் தங்கை மேரி,மலை பள்ளிக்கூடத்திற்குசென்று வந்தாலும், படிக்க தெரியாமல் இருப்பதிலிருந்து உருவாகி இருக்கிறார், ’கதாநாயகி’ நாவலின் பாதி கதையாக வரும் மலைவாழ் பள்ளி ஆசிரியர்.நண்பனுடன் சென்று தேரிக்காட்டில் தங்கிய அனுபவம், காந்தார நாட்டை நினைவுபடுத்துகிறது. உயிருக்கு பயந்து நண்பனுடன் சேரி வழியாக சென்றது, ‘காவியம்‘ நாவலில் தெரிகிறது.
உங்கள் அனுபவத்தில் ஒரு சதவிகிதம் கூட எனக்கு இருக்காது. உங்கள் கதைகளின் வழியாக பல அனுபவங்கள் கிடைத்தன. திருவனந்தபுரம், லோனாவாலா, பம்பாய், காசி, ஹரித்துவார், மெட்ராஸ் என்று உங்கள் கூடவே, எங்களை அழைத்துச் சென்றதற்கு மிகவும் நன்றி.