பாடலின் கவிதை வரிகளை சிலாகித்து எழுதுபவர்கள் மீது, நாம் ரசித்தது போலவே ரசித்திருக்கிறாரே என்ற புள்ளியில் அவர்பால் மிகுந்த நட்பு பிறந்து விடுகிறது. அவருக்கும் நமக்கும் பெரிய தொடர்பு ஏதும் இருக்கப் போவதில்லை. பொதுவான அம்சமாக ரசனை மட்டுமே உண்டு. அது போதாதா நட்பு பூக்க…? தம்பி இளம்பரிதி அத்தகையவர். மொழிவளம் மிக்கவர். பாடலின் வரிகளை சிலாகித்து எழுதுவதில் பெரும் ரசனைக்காரர். அவரது இந்த "மடை திறந்து" தொகுப்பை ரசனைகளின் வாசல் என்றே சொல்லலாம். இந்தத் தொகுப்பு உங்கள் கைகளில் மிதக்கிறது என்றால் சர்வ நிச்சயமாக நீங்கள் ரசனை மேவியவராகவே இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒருபோலான மனங்களை ஒன்றிணைப்பதுதான் கலையின் வினை. - கவிஞர் யாத்திரி
நான் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு கால கட்டங்களில் ரசித்த, உணர்ந்த பாடல்களின் வரிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த “மடை திறந்து". ஒரு கவிஞனின் எழுத்தை ஆராயாமல் அப்படியே ரசித்துவிடுவது ரசனை; அதனை ஆராய்ந்து உள்வாங்கிக்கொள்வது ரசனையின் அடுத்த படி. கவிஞர் இதைத்தான் சொன்னார், இப்படித்தான் சொன்னார் என்று எந்தக் கருத்தையும் முன்முடிவுக்குள் கொண்டுவரக்கூடாது. மாறாக நமது பார்வையில் பாடலின் போக்கைக் கொண்டாடலாம். அப்படி எனது கொண்டாட்டமாக இந்தத் தொகுப்பைப் பார்க்கிறேன். வரிகளின் செழுமை, கவிதைத்தன்மை, கதையின் தொடர்பு, கவிஞர்களின் சிந்தனை குறித்த எனது பார்வை ஆகியவற்றை இந்தக் கட்டுரைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறேன். - இளம்பரிதி
புத்தகம் : மடைதிறந்து ஆசிரியர் : இளம்பரிதி கல்யாணகுமார் பக்கங்கள் :192 பதிப்பகம் :வாசகசாலை
புத்தகத்தின் தலைப்பையும், அட்டைப்படத்தையும் கண்டு "blind date" சென்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று.
"இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்று வைரமுத்துவின் வார்த்தைகள் உணர்ந்து இசையால் பயணப்பட்டு, பயணப்படும் இசைப்பிரியை நான். படிக்கும், உறங்கும் நேரம் தவிர்த்து அனைத்து நேரங்களிலும் இசையால் நிறம்பப்பட்டது என் நாட்கள்.
கேசட்டில் ஸ்பீக்கரில் பாடல் கேட்கத்தொடங்கி, CDக்கு மாறி,இன்று youtube என்று காலமாற்றம் கண்டு ரஹ்மான் இசை கேட்டு வளர்ந்து, இளையராஜா இசையின் அழகை உணர்ந்த 90s கிட்.
பள்ளி படிக்கும் போது தொடங்கி இன்று வரை புதிதாக என் இசை ரசனைக்கேற்ற பாடலைக் கேட்டால், உடனே அதைப்பற்றி என்னிடம் பகிர்வது தொடங்கி, இப்பொழுது அந்த பாடல் லிங்க் அனுப்பி, "அனி, இந்த பாட்ட கேளேன், உனக்கு கண்டிப்பா பிடிக்கும்" என்று பகிரும் ஒரு இசைத்தோழி எனக்கு உண்டு. பாடலை கேட்டுவிட்டு அதுகுறித்து நாங்கள் மேற்கொள்ளும் உரையாடல் போல் மிக இயல்பாய், அழகாய், ரசனையோடு இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் வாசிக்கும் உணர்வு சிறிதும் எழாமல், சக ரசனை உள்ள நண்பரிடம் மேற்கொள்ளும் உரையாடல் போல் இந்த புத்தகம் தோன்ற முக்கிய காரணம் பல பாடல்கள் நான் மிகவும் ரசித்து கேட்டு மகிழ்ந்தவை, அதை சிலாகித்து எழுதியதோடு நில்லாமல், சங்க இலக்கியப் பாடல்கள், பாரதியார் பாடல் என தமிழால் அப்பாடல்களுக்கு மேலும் அழகூட்டி அணி சேர்ந்திருக்கிறார் ஆசிரியர்.
இறுதியில் "பாடும் நிலா SPB" அவர்களுக்காக எழுதப்பட்ட தொகுப்பு, அவர் இல்லை என்பதை நம்ப மறுத்து, பின் கண்ணீரினூடே அன்று முழுவதும் அவரின் பாடல்களை கேட்டுக் கொண்டு, உறக்கம் விழிப்பு என்று பிரித்தறியா நிலையில் உழன்ற தினம் நினைவுக்கு வந்தது.
இசை விரும்பும் அனைவரும் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் என்று நிச்சயம் கூறலாம். இசை விரும்பி வாசிப்பாளர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன் இந்த அழகான இசைப்புத்தகத்தை.