புத்தகம் : மனவெளியில் காதல் பலரூபம் கவிஞர் : யாத்திரி பக்கங்கள் :126 பதிப்பகம் : வாசகசாலை
யாத்திரியுடனான இரண்டாம் கவிதை பயணம். மீண்டும் ஒரு காதல் பயணம்.
"எத்தனை முறை காதல் வந்தாலும், அத்தனை முறையும் அது புதியது" என்று எங்கோ வாசித்த நியாபகம். ஏனென்றால் காதல் அத்தனை பரிமாணங்கள் கொண்டது. ஒருவேளை அது ஒரு முறை எழுதி தீர்த்து முடிக்கப்பட முடிகின்ற ஒன்றாக இருந்தால் அது வரலாற்றில் இடம் பெற்ற முதல் காதல் கதையிலோ , கவிதையோடோ முடிந்து இருக்கும்.
ஆனால் காலம் காலமாக காதல் காவியங்களிலிம், கதைகளிலும் , கவிதைகளிலும் வாழ்ந்து கொண்டும், காலத்தை தாண்டியும் இளமையுடன் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறது.
அந்த காதலை வார்த்தை கொண்டு கவிதைகளாய் பக்கங்களினூடே உயிர் கொள்ள செய்து இருக்கிறார் கவிஞர் யாத்திரி. அவர் எழுத்துநடையில் எனக்கு மிகவும் பிடித்த விதம் காமம் சார்ந்த கவிதைகளையும் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் அழகிய கவிதையாகவே வாசிக்க முடிவது.என்னை பொருத்த வரை அவரின் அந்த எதார்த்தமான எழுத்து நடைதான் மீண்டும் அவரின் புத்தகங்களை வாசிக்கத் தூண்டுவது.