இந்நாவலிலும், ஹிட்லரைப் ‘புலி வருகிறது’ என்கிற ரீதியில் பயமுறுத்தப் பயன்படுத்திய இரு மகா யுத்தங்களுக்கான இடைப்பட்ட காலத்தில் போலந்தில் வாழும் இத்திய மொழி பேசும் யூதர்களின் கதை எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு எளிமை என்ற பதத்தின் மூலம் நான் குறிப்பிட விரும்புவது வன்மத்தையும் குருதியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்பையும் காதலையும் முன்வைக்கும் தீர்க்கத்தை! மற்றபடி வடிவத்தில் எளிமை உச்சமடைந்திருக்கிறது. சிங்கர் கீறல்களைக் கூட வருடல்களைப் போலச் சொல்பவர். காதலை மனித வன்முறைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளமுடியும் என்று நினைத்துக் கொள்கிறார்; கற்பனை செய்து கொள்கிறார். அல்லது நிறுவுகிறார் ஐசக் பாஷவிஸ் சிங்கர். -கோ.