Religious institutions are trying to destroy the indigenous knowledge gained from the lives of the coastal people and build a culture that is narrow and exploitative. The search of a boy who escapes this cultural invasion and seeks to trace his ancestral heritage, continues unabated into his old age. This is the central thread of the novel. The novel re-reads the remnants of the myths that linger in coastal life, culture and language. The novel develops itself by caring and caring about people who are exploited by religious and commercial enterprises. Joe de Cruz's serene language adds new color to coastal geography. This 'pilgrimage' traces the immortal aspects of coastal folklore in an environment where pilgrimage is understood to be intertwined with institutional spirituality.
ஆசிரியர் : ஆர் . என் .ஜோ டி குருஸ் நாவல் காலச்சுவடு பதிப்பகம் 150 பக்கங்கள்
ஒரு நாவல் என்பது தனக்குள் வெறும் ஒரு குறிப்பிட்ட கதையை மட்டுமே புதைத்து வைத்திருப்பது கிடையாது , சில நேரங்களில் அது ஒரு தனி மனிதனின் மன ஓட்டத்தின் பயணமாகவும் இருக்கலாம் .அப்படி பார்த்தால் அது சுயசரிதை என்று நீங்கள் நினைக்கலாம் . அதுதான் தவறு , என்னை பொறுத்தவரை உண்மையான சுயசரிதை என்பது நிச்சயம் ஒருவரால் அவ்வளவு உண்மையாகவும் , நேர்மையாகவும் , நியாயமாகவும் எழுதிவிட முடியாது , அப்படியே எழுதப்பட்டாலும் அதில் எவ்வளவு உண்மை என்பது அவர் ஆன்மாவுக்கு மட்டுமே வெளிச்சம் . இதற்கு பதில் தன் ஆன்மாவையே ஒரு பாத்திரமாக தன் கதையில் வைத்து , அதனிடம் ஒரு உரையாடலையும் , தர்க்கத்தையும் மேற்கொண்டால் அதில் நிச்சயம் உண்மை வெளிவந்தே தீரும். அப்படி பட்ட ஒரு படைப்பே இந்த யாத்திரை எனும் நாவல் . இது ஆசிரியருடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை பற்றித்தான் பேசுகிறது என்பது எனது புரிதல் .
ஒரு கடற்கரை கிராமத்தில் கிறிஸ்துவ குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறக்கும் நம் கதையின் நாயகன் .தன் சிறுவயது முதல் தேவாலயம் சார்ந்தே தன் இளமை வயதை கழிக்கிறான் . ஒரு கட்டத்தில் இயேசு மீதும் , தன் மதம் மீதும் , பாதிரிகள் மீதும் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு பாதிரி பயிற்சி வகுப்பில் சேர்கிறான் . ஒரு கட்டத்தில் அவன் கிராமத்தில் பல மதம், சாதி சார்ந்த சச்சரவுகளும் , உயிர்பலியும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன , மறுபக்கம் பஞ்சமும் தலைவிரித்து ஆடுகின்றன ,ஆனால் , இவன் பெரிதும் போற்றும் இவனுடைய கடவுளும் , பாதிரிகளும் , தேவாலயமும் இதனை கண்டு கொள்ளாமல் தங்கள் வேலையை மட்டும் பார்ப்பது இவனுக்கு உறுத்தலாக இருந்தது . இதற்கிடையில் தன் உயர்கல்விக்காக வேறு ஊர் செல்கிறான் . உலகம் புரியும் வயதில் இவனுக்குள் பல தர்க்கங்கள் தோன்றுகின்றன . யார் இயேசு ? பைபிள் கூறுவது அனைத்தும் உண்மையா ? மதம் மனிதனின் கண்ணை மறைக்கிறதா ? மதம் சார்ந்து மண்டியிடவும் , சண்டையிடவும் துடிக்கும் மக்களுக்கு தங்கள் உரிமைகளுக்காக ஏன் போராட வீரமில்லை ? காண முடியாத வேற்று நாட்டு இறைவனை நம்பும் நம் மக்கள் ஏன் நம் முன்னோர்களை மறந்துபோனார்கள் ?இந்த கேள்விகளுக்கு இடையே அவன் கடல் சார்ந்த ஒரு வணிக நிறுவனத்தில் பணிசெய்கிறான் . முதல் திருமணம் வெற்றியடையாமல் இரண்டாம் திருமணம் முடித்து பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறான் .ஆனால் அவனுக்குள் அந்த தர்க்கங்கள் தவழ்ந்து ,வளர்ந்து மீண்டும் உறுத்த தொடுங்குகின்றன .
கடல் சார்ந்த மக்களின் வாழ்க்கையை இந்த உலகில் ஆவணமாக்க வேண்டும் என்ற முனைப்போடு தன் ஆதியை தேடி பயணம் செய்து , முன்னோர்களின் முன்னோர்களை பற்றி செய்தி சேகரித்து ஒரு புத்தகம் எழுதுகிறான் .அதில் , வரலாற்றுடன் சேர்ந்து தனது தர்க்கத்தையும் வைக்கிறான் , அதனாலே அந்த புத்தகத்திற்கு பல தரப்பட்ட விமர்சனம் எழுகிறது . இருந்தாலும் துவளாமல் தன் எழுத்து பணியை தொடர்கிறான் .தன் மகன் , மகள் இருவரையும் மதம் அற்றவர்களாவே வளர்த்து ஆளாக்குகிறான் . ஒரு கட்டத்தில் தனிமையை தேடி ஒரு கடல் சார்ந்த தீவில் தனக்கென ஒரு காடு உருவாக்கி அதில் தனி மனிதனாக வசிக்க தொடங்குகிறான் . அவனுக்கு துணை அருகில் வசிக்கும் ஒரு மீனவ குடும்பம் மட்டுமே . இருவரும் வாழ்க்கையை பற்றி வேறு வேறு கோணத்தில் பல நாட்கள் வெட்ட வெளியில் அலையோசையில் தர்க்கத்தாலும் ,தன் உணர்வுகளாலும் உரையாடி தீர்க்கின்றனர் . இந்நிலையில் அவன் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த்தும் ,பிரிந்தும் , தனித்தும் வாழ்ந்து வருகிறான் . இறுதியில் ஒரு வெற்று மனநிலையில் அந்த தீவு வந்து சேர்கிறான் . அன்று இரவு அவனுக்கும் , அந்த அலைகளுக்கும் , வாடை காற்றுக்கும் , இறுதியில் அவன் ஆத்மாவிற்கு நடக்கும் உரையாடல்களுடன் அவன் தன் இறந்த ஆத்தாவின் மடியில் உறங்குகிறான் .
இந்த நாவலில் நிறைய உரையாடல்கள் உள்ளன. அவை அனைத்தும் தர்க்கம் நிறைந்தவை. ஆனால் அந்த உரையாடல்களே இந்த நாவலின் உயிர் நாடி. பெரும்பாலான உரையாடல்கள் ஒரு மனிதனுக்கும் இயற்கைக்கும் நடப்பவையாகவே இருக்கும். ஒரு கடல் தன் ஆதியை உரைப்பது முதல், ஒரு வாடை காற்று தன் சுபாவத்தை உரைப்பது வரை அனைத்தும் நமக்கு ஒன்றை கற்றுக்கொடுத்து செல்கின்றன. இந்த நாவல் முழுக்க உங்களால் வாசிக்க முடியாவிடினும் இரண்டு முக்கிய உரையாடல்களை நீங்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும் இந்த உலகையும், இயற்கையையும், மனித வாழ்வையும் ஓரளவு புரிந்து கொள்ள. கதை மாந்தருக்கும் தன் மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடலும், தனக்கும் தன் ஆத்மாவிற்கும் நடக்கும் உரையாடலும். இவ்விரு உரையாடல் நடக்கும் பக்கங்கள் நவீன இலக்கியத்தின் தவிர்க்க முடியா எழுத்துக்கள், நம் வாழ்க்கையின் புரிதலை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும் பக்கங்கள். இந்த பொக்கிஷமான பக்கங்களை என் மகனுக்கும் எனக்குமான எதிர்கால உரையாடளுக்காக நான் சேமித்து வைக்கிறேன்.